Published : 28 Sep 2019 09:10 am

Updated : 28 Sep 2019 09:10 am

 

Published : 28 Sep 2019 09:10 AM
Last Updated : 28 Sep 2019 09:10 AM

என்றும் காந்தி: நூல் வெளியீட்டு விழா!

enrum-gandhi

ஓராண்டு காலமாக ‘இந்து தமிழ்’ நடுப்பக்கத்திலும் அதற்கும் ஓராண்டுக்கு முன் ‘இந்து தமிழ்’ இணையத்திலும் ஆசை எழுதிவந்த காந்தி தொடர் ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாகியிருக்கிறது. ஏ4 சைஸில், 216 பக்கங்களில், காந்தியின் அரிய 120 புகைப்படங்களுடன் வெளியாகியிருக்கும் புத்தகத்தின் விலை ரூ.250. நாளை (29.09.2019) மாலை 4:30 மணி அளவில் சென்னை தி.நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நூல் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் நூலை வெளியிட காந்தியச் செயல்பாட்டாளரும் மருத்துவருமான வெ.ஜீவானந்தம் நூலைப் பெற்றுக்கொள்கிறார். வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் இரா.இளவரசியின் தலைமையிலும், வருமான வரித் துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் முன்னிலையிலும் விழா நடக்கவிருக்கிறது. காந்தி 150-வது ஆண்டை ‘என்றும் காந்தி’ நூலுடன் கொண்டாடுவோம்!

குடியாத்தத்தில் புத்தகக்காட்சி


குடியாத்தம் மக்கள் மையம் ஒருங்கிணைக்கும் மூன்றாம் ஆண்டு புத்தகக்காட்சி திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 24 தொடங்கி அக்டோபர் 2 வரை நடக்கிறது. ஒவ்வொருநாளும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இப்புத்தகக்காட்சியில் 10% தள்ளுபடியில் புத்தகம் வாங்கிக்கொள்ளலாம். ‘இந்து தமிழ்’ அரங்கு எண்: 11, 12

மணப்பாறை, தஞ்சாவூரில் அண்ணா!

மூன்றாவது பதிப்பில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல். புத்தகம் வெளியாகி சில மாதங்களுக்குள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் எண்ணற்ற திறனாய்வுக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்த வாரம் மணப்பாறையில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையும், தஞ்சாவூரில் சீர் வாசகர் வட்டமும் கூட்டங்களை நடத்துகின்றன.

.மணப்பாறையிலுள்ள நெடுஞ்சாலை குறிஞ்சி உணவக அரங்கில் ஞாயிறு (29.09.2019) மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன். ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியரும், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் தொகுப்பாசிரியருமான சமஸ் சிறப்புரை ஆற்றுகிறார்.

.தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டர் எதிரேயுள்ள ஸ்ரீ பெசண்ட் லாட்ஜில் சனி (28.09.2019) மாலை 5:30 மணி அளவில் நடைபெறவிருக்கும் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர் ச.மருதுதுரை. தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன் சிறப்புரை ஆற்றுகிறார்.

இலக்கிய டீக்கடை

கேரளத்தின் கண்ணூரிலிருந்து 35 கிமீ தொலைவில் இருக்கிறது பெடையங்கோடு. அங்கேதான் டீக்கடை வைத்திருக்கிறார் அப்துல் ஷுக்கூர். அவரது டீக்கடையின் பெயர் வராந்தா. இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடுடைய ஷுக்கூர் தனது கடையில் புத்தகங்களை வாசிப்புக்காகவும் விற்பனைக்காகவும் வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக அங்கே மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்களையும் நடத்திவருகிறார். இதுவரை பால் சக்காரியா, எம்.முகுந்தன், கல்பற்றா நாராயணன் உள்ளிட்ட மலையாள இலக்கிய ஆளுமைகளும், கன்னடத்திலிருந்து விவேக் ஷான்பாகும், தமிழிலிருந்து ஜெயமோகனும் வருகை தந்திருக்கிறார்கள். பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்ட ஷுக்கூர் ஆரம்பத்தில் குவாரியில் வேலைபார்த்தார். பிறகு, மீன் வியாபாரம். சிறுவயதிலேயே தீவிர இலக்கியப் பற்று கொண்ட ஷுக்கூர் தனது டீக்கடை மூலம் தனது இலக்கியக் கனவை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார் ஷுக்கூர். அவரது கடையில் நடக்கும் இலக்கியச் சந்திப்புக்கு அடுத்த சிறப்பு விருந்தினராக பெருமாள் முருகன் கலந்துகொள்ளவிருக்கிறார்! நாளை (செப்டம்பர் 29) அன்று இந்த இலக்கியக் கூட்டம் நடக்கவிருக்கிறது.என்றும் காந்திநூல் வெளியீட்டு விழா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x