Published : 28 Sep 2019 08:30 AM
Last Updated : 28 Sep 2019 08:30 AM

மொழியில் மிளிரும் அசல் வாழ்க்கை

நன்மாறன் கோட்டைக் கதை
இமையம்
க்ரியா வெளியீடு
திருவான்மியூர், சென்னை-41.
விலை: ரூ.225
72999 05950

சுடர்விழி

அண்மையில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதைப் பெற்றிருக்கும் இமையத்தின் ஆறாவது சிறுகதைத் தொகுப்பு ‘நன்மாறன் கோட்டைக் கதை’. நள்ளிரவில் தன் தெருவோரம் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டதும் ‘அவள் ஏன் அழுகிறாள்?’ என்ற கேள்வியும் அவள் துயரமும் சேர்ந்து மனதைத் துளைத்தெடுக்க அந்த அகத் தூண்டலின் விளைவாய் அப்பெண்ணின் வலியை வார்த்தைகளாக்கி ‘கோவேறு கழுதைகள்’ என்ற தன் முதல் நாவலை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டவர் இமையம். இந்நாவல் வெளிவந்து கால் நூற்றாண்டு காலம் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் தொடர்ந்து வாசக கவனம் பெற்றுவருகிறது. இமையத்தின் இந்த வெற்றிக்குக் காரணம் அவர் படைப்புகளில் தொழிற்படும் அசல் வாழ்க்கை, கதைக்களத்துக்கேற்ப மொழியை நேர்த்தியாகக் கையாளும் திறமை, உரையாடலின் லாவகம், கதைசொல்லும் முறை.

5 நாவல்களும் 6 சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டிருக்கும் இமையத்தின் எல்லாப் படைப்புகளும் நிஜ நிகழ்வுகளின் புனையப்பட்ட வடிவங்கள். ‘நன்மாறன் கோட்டைக் கதை’யும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘இதுவரை எழுதிய கதைகளை நான் எழுதவில்லை; சமூகம்தான் எழுதியது’ என்ற இமையத்தின் கூற்றுக்கேற்ப ஒவ்வொரு கதையின் நிகழ்வும் கதைமாந்தர்களும் புனைவுவெளியும் வாசகருக்கு ஏதாவது ஒருவிதத்தில் நெருக்கம் தரக்கூடியவை; வாசித்துக்கொண்டிருக்கும்போதே சமூகத்தின் எங்கோ மூலையில் அரங்கேறிக்கொண்டிருப்பவை.

முதல் கதையான ‘நன்மாறன் கோட்டைக் கதை’யில் மாடுகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரின் மாடு வெற்றிபெற்றதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் மாட்டையும் அதன் உரிமை யாளரையும் கொன்று குதூகலிக்கும் ஆதிக்கச் சாதியினரின் சாதி வெறியாட்டத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போதே ‘சாதிய மோதலில் முடிந்த ஜல்லிக்கட்டு’ என்று வெளிவந்த அண்மைக்கால பத்திரிக்கைச் செய்திகளும், பொன்பரப்பி சம்பவங்களும் சமகாலத்தை அந்நியப்படுத்தாத இமையத்தின் எழுத்துகளுக்குச் சான்று பகிர்கின்றன.

மாடு முட்டி இறந்துவிட்டதாக அவர் மனைவியிடமே கையெழுத்து வாங்கும் குரூரத்தையும் வன்மத்தையும் பேசுகிற வலுவான பொருண்மை கொண்ட கதையாக இருந்தாலும் சரி, டவுன் பஸ்ஸில் இடம் போட்டுவிட்டு அந்த இடத்துக்காகத் தன்னிடம் சண்டைக்கு வருவோரையெல்லாம் சமாளிக்கும் ஒரு பெண்ணின் சாமர்த்தியத்தையும் போராட்டத்தையும் பேசும் ‘ஆலடி பஸ்’ போன்ற கதையாக இருந்தாலும் சரி... இரண்டுமே அதனதன் படைப்பாக்கத்திலும் மொழிநடையிலும் சம அளவு முக்கியத்துவம் பெறுகின்றன.

பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் வெவ்வேறு மன இயல்புகளை முன்னிறுத்தி எழுதுவதில் இமையம் தனித்துவமிக்கவர். இத்தொகுப்பிலுள்ள ஆறு கதைகள் பெண்களை மையப்படுத்தியவையே. ஆதிக்க சாதி வெறிக்குக் கணவனைப் பலிகொடுத்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் ஊரை விட்டே செல்ல முடிவெடுத்த ‘நன்மாறன் கோட்டைக் கதை’யின் செல்வமணி, இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பைத் தட்டிக்கேட்டதற்காக ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் ஒட்டுமொத்த ஆண்பிம்பத்தையும் குலைத்துப்போடும் ‘தலைக்கடன்’ கதையின் சீனியம்மா, ‘பொட்டச்சி சோறு திங்கறதுக்கு ஒலகத்தில இருக்கிற ஒரே வழி சீலய தூக்கிக்காட்டுறது மட்டும்தானா சார்?’ என்று தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வரும் முதலாளியிடம் பேசும் சித்தாள் சாந்தா, டவுன் பஸ்ஸில் பிடித்த இடத்தைக் காப்பாற்றி வைப்பதற்கான போராட்டத்தையும் ஆண்களின் பாலியல் சீண்டல்களையும் மாதவிலக்குப் பிரச்சினையையும் ஒன்றாக எதிர்கொள்ளும் ‘ஆலடி பஸ்’ கதையில் வரும் பிரியங்கா, வீட்டிலிருந்த நகை திருடுபோனதற்காகக் கணவனிடம் மாட்டடி வாங்கியதோடு கோயிலில் பிராது மனு கட்டிப்போட்டால் நகை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் தங்கமணி, தான் விரும்பிய செட்டியாரோடு ஒரு முறை கொண்ட உறவின் காரணமாகவே தன்னைச் செட்டிச்சியாக உணரும் பணியாரக்காரம்மா... இவர்கள் அனைவருமே துயரத்தின் வெவ்வேறு முகங்கள். ஒவ்வொரு நாளும் போராடியே வாழ்ந்துதீர்க்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள். தங்கள் வாழ்வின் அடுத்த நகர்வு என்ன என்பதைத் தீர்மானிக்க இயலாதவர்கள். இவர்களைப் புரட்சியாளர்களாகவோ பெண்ணியம் பேசுபவர்களாகவோ இமையம் படைக்கவில்லை. அல்லது இவர்கள் வழியே தான் பார்க்க விரும்பும் பெண்ணுலகைக் கற்பனை செய்துபார்ப்பதற்கோ போதனை சொல்வதற்கோ இமையம் முயலவில்லை. குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆண்கள் வரையறுத்து வைத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் நின்று இப்பெண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி ஒவ்வொரு நாளும் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வாழ்வின் அத்தனை முரண்களோடும் பதிவுசெய்திருக்கிறார்.

கட்சிக்காகத் தொடக்க காலம் முதல் உழைத்து கட்சியை வளர்த்தவர்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படுகிற நிலையை விளக்கும் ‘கட்சிக்காரன்’ கதையும், தன் கட்சி சார்பாகத் தேர்தலில் நிற்பவனாக இருந்தாலும் அவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்றால் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே அவனைத் தோல்வியடைய வைப்பதற்காகத் திட்டமிடும் சாதிய மனநிலை தேர்தலில் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை விவரிக்கும் ‘நம்பாளு’ கதையும் நிகழ்கால அரசியல் பிரதிபலிப்புகளாக அமைந்துள்ளன.

இவருடைய கதைமாந்தர்கள் கதை நெடுகிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சலிப்பும் அலுப்பும் ஏற்படுத்தாத இந்த உரையாடல் வழிதான் காட்சிகள் விரிந்து கதை நகர்கிறது. இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிராக இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பல்வேறு கட்டமைப்புகளை வெளிச்சப்படுத்தி இவர்கள் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வியை வாசகருக்குள் எழுப்புவதுடன், எதையுமே செய்ய இயலாத கையாலாகாத்தனத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.

- சுடர்விழி, உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு: sudaroviya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x