Published : 22 Sep 2019 10:08 AM
Last Updated : 22 Sep 2019 10:08 AM

பொதுவுடைமை பாடிய தமிழ் ஒளி 

சிகரம்.ச.செந்தில்நாதன்

“பாரதியை ஞானத் தந்தையாகக் கருதினார் கவிஞர் தமிழ் ஒளி. பாரதிதாசனைக் குருவாகக் கொண்டார். அவர்கள் இருவரும் வகுத்துச் சென்ற வழியை மேலும் செம்மைப்படுத்தினார்” என்று தமிழ் ஒளியைப் பற்றிக் கூறுகிறார் இரா.நல்லகண்ணு. மே தினத்தை இந்தியாவில் முதலில் கொண்டாடியவர் சிங்கார வேலர் என்றால், முதலில் மே தினத்தை ‘உலகத் தொழிலாளர் ஒற்றுமையே, நல்லுணர்வே, அன்பே, இருட்கடலில் ஆழ்ந்திருந்து வந்த முத்தே, முழுநிலவே, மேதினமே வாராய் நீ வாராய் உனக் கெந்தன் வாழ்த்தை இசைக்கின்றேன்’ என்று வரவேற்றுப் பாடிய கவிஞர் தமிழ் ஒளிதான்.

குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் கிராமத்தில் தமிழ் ஒளி பிறந்தாலும், தந்தையின் ஊரான புதுச்சேரியின் மைந்தனாகவும் இருந்தார். விஜயரங்கம் என்ற இயற்பெயரை பாரதிதாசன்தான் தமிழ் ஒளி என்று மாற்றினார். பாரதி, பாரதிதாசன் வழியில் நடைபோட்ட தமிழ் ஒளி, பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். சென்னை நகரில் அவர் வாழத் தலைப்பட்டபோதுதான் உழைக்கும் மக்களின் இன்னல்களை நேராகக் கண்டு, கொதித்து, இந்த நிலை மாற மார்க்ஸியம்தான் மாமருந்து என்று கருப்புச் சட்டையைக் கழற்றிவிட்டு, சிவப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டார். 26.09.1949-ல் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் பல பேர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்கள், அந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் தணல் அணையாமல் தன் கவிதைகளால் காத்தார் தமிழ் ஒளி.

வறுமையான நிலையிலும் தமிழ் ஒளி ஒன்பது காப்பியங்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். அந்தக் காவியங்கள் வர்க்கப் போராட்டங்களைப் பேசுபவை. இந்தியச் சமூகம் சாதிகளால் பிளவுபட்ட சமூகம். பொதுவுடைமை இயக்கம் புகுந்த தமிழ் ஒளி, வர்க்கப் போராட்டத்தில் உறுதியாக இருந்தாலும், கண்ணெதிரே இருந்த சாதிய, சமூக ஒடுக்கு முறை அவலங்களைத் தன் கவிதைகளில் கொண்டுவந்தார். இது தமிழ் ஒளியின் தனித்துவம். இந்தத் தனித்துவத்தைக் காட்டும் காவியம்தான் ‘வீராயி’. தமிழ் ஒளிக்கு அடங்காத தமிழ்க் காதல் உண்டு. இந்தித் திணிப்பு, வடமொழித் திணிப்பு முதலியவற்றில் இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை தமிழ் ஒளி காலத்துப் பொதுவுடைமை இயக்கம் எடுத்திருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், தமிழ் ஒளி அப்போதே அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

தமிழ் ஒளி கவிஞர் மட்டும் அல்ல; சிறந்த கட்டுரையாளர், விமர்சகர், ஆய்வாளர். தமிழ் ஒளிக்கு முன்னரோ அல்லது சமகாலத்திலோ அவர் அளவுக்கு தமிழ் மொழி, இனம், கடவுள், சமூகம் பற்றி எந்தப் பொதுவுடைமைப் படைப்பாளியும் எழுதவில்லை. எனினும், அவர் புகழ் மறைக்கப்பட்டிருப்பதும் விபத்துதான். பாரதிக்காவது இறப்புக்குப் பிறகு அங்கீகாரம் கிடைத்தது. தமிழ் ஒளிக்கு வாழ்ந்த காலத்திலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை; மரணத்துக்குப் பிறகும் அங்கீகாரத்துக்குப் போராட வேண்டியிருக்கிறது. வறுமையில் புதுமைப்பித்தன் மட்டுமா செத்து மடிந்தார்? தமிழ் ஒளியும்தான்! இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழ் ஒளியின் நூற்றாண்டு வருகிறது. இந்தத் தருணத்திலாவது தமிழ் ஒளியைக் கொண்டாடுவோம்.

- சிகரம் ச.செந்தில்நாதன், எழுத்தாளர், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: sigaramsenthilnathan@gmail.com

செப்டம்பர் 21: தமிழ் ஒளி பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x