Published : 21 Sep 2019 10:12 AM
Last Updated : 21 Sep 2019 10:12 AM

பெரியார்: முழுநாள் கருத்தரங்கு

பெரியார்: முழுநாள் கருத்தரங்கு

பெரியாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை இக்சா மையத்தில் இன்று முழுநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது வாசகசாலை. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், கலை இலக்கியம், திராவிடர் இயக்கம், பொருளாதாரம் என வெவ்வேறு அமர்வுகளின் கீழ் ஆளுமைகள் உரையாற்றவிருக்கிறார்கள்.

அசோகமித்திரனைக் கொண்டாடுவோம்

செப்டம்பர்-23 அன்று பிறந்தநாள் காணும் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு வேலம்மாள் பள்ளியும் கோலம் அறக்கட்டளையும் இணைந்து விழா நடத்தவிருக்கிறார்கள். குழந்தைகளை மையப்படுத்திய அசோகமித்திரனின் தொகுப்பு ஒன்றும் அன்று வெளியிடப்படவிருக்கிறது. பத்திரிகையாளர் ரவி.ராமகிருஷ்ணன், இயக்குநர் பிரம்மா, மூத்த எழுத்தாளர் திலீப் குமார், பரிக்‌ஷா நாடகக் குழுவினர் பங்கேற்கிறார்கள். இடம்: வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளி, மேல் அயனம்பாக்கம், சென்னை. நேரம்: மதியம் 1:30-3:00

சிவகங்கையில் புத்தகக்காட்சி

மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் சிவகங்கை புத்தகக்காட்சி, பேருந்து நிலையம் அருகிலுள்ள சபரி மஹாலில் செப்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 6 வரை நடக்கிறது. 10% தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி?

அமேசான் கிண்டிலில் பல அரிய புத்தகங்களையும் இதழ்களையும் மின்நூலாகப் பதிவேற்றியும், பதிவேற்ற விரும்புபவர்களுக்கு வழிகாட்டியும் உதவிவரும் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன், ‘அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி?’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். கிண்டில் பற்றி, மின்நூல் பற்றி அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கும், அக்கவுண்ட் தொடங்குவது முதல் அமேசான் தரும் ராயல்டி வங்கிக் கணக்குக்கு வந்துசேர்வது வரையிலான அத்தனைக் கட்டங்கள் வரை புரிந்துகொள்வதற்கும் இப்புத்தகம் ஒரு நல்ல கையேடு. புத்தகத்தை வாசிப்பதற்கான சுட்டி:
https://www.amazon.in/dp/B07XWD47FT

செ.திவான், ஓடன்துறை சண்முகத்துக்கு ஜமீல் அஹ்மத் விருது

வரலாற்றாசிரியர் செ.திவான், சமூக ஆர்வலர் ஓடன்துறை சண்முகம் இருவரும் இந்த ஆண்டுக்கான எம்.ஏ.ஜமீல் அஹ்மத் விருதுகளைப் பெறுகிறார்கள். ரூ.25,000 பணமுடிப்புக் கொண்ட விருது இது. இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை சென்னை கவிக்கோ மன்றத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடத்தும் நிகழ்ச்சியில் இவர்களுக்கான விருதுகள் அளிக்கப்படவிருக்கின்றன. மக்கள் நலப் பணிக்கான பாராட்டுச் சான்றிதழை திருச்சி ஷாகுல் ஹமீது பெறுகிறார்.

கலைமண விழா

எழுத்தாளர் இரா.நாறும்பூநாதனின் மகன் திருமண வரவேற்பு விழா நெல்லையில் கலை நிகழ்ச்சிகளோடு நடைபெற்றது. ‘இந்து தமிழ்’ நாளிதழில் நாறும்பூநாதன் எழுதிய பரணிவாசம் நூல் விமர்சனங்கள் அடங்கிய புத்தகத்தை மணமக்கள் வெளியிட்டனர். திருமணத் தாம்பூலப் பையில் வெற்றிலைப் பாக்குடன் இந்தப் புத்தகமும் இடம்பெற்றிருந்தது. மணப்பெண் மீனா வரைந்த ஓவியக்காட்சியைத் திரைக்கலைஞர் ரோகிணி திறந்து வைத்தது மற்றொரு சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x