Published : 21 Sep 2019 10:01 AM
Last Updated : 21 Sep 2019 10:01 AM

நட்சத்திரங்களுடனான வெள்ளாமை!

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்
ஜெ.பிரான்சிஸ் கிருபா
படிகம் வெளியீடு
மாடத்தட்டுவிளை, வில்லுக்குறி - 629180.
விலை: ரூ.150
98408 48681

****************************************

ஷங்கர்ராமசுப்ரமணியன்

ரசனை
முள் அங்கியை அவிழ்த்தெறிந்துவிட்டு
நிர்வாணமாகி
துண்டுத் துண்டாகி
கொதிக்கும் சாம்பாரில் குதித்து
கும்மாளமிட்ட கிழங்குகள்
விளைந்த வயல்களிலிருந்து
இமெயில்கள்
வந்தவண்ணமிருக்கின்றன
நடனம் எப்படி இருந்தது
எனக் கேட்டு
விருந்துண்டு பசியாறிய விருந்தாளிகள்
பதிலனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்
மிக மிக ருசியாக இருந்ததென்று.

கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் நாணை விரைப்பாக ஏற்றி குறிக்கோளைச் சரியாகவே நிறைவேற்றியுள்ளார் பிரான்சிஸ் கிருபா. மொழி என்னும் குதிரையை நவீனக் கவிதையில் சமத்காரத்தால் சொடுக்கி கவிதைக்கும் தமிழுக்கும் உத்வேகத்தை அளித்த பிரமிள், யூமா வாசுகியின் மரபில் வரும் பிரான்சிஸ் கிருபா சிதைந்த கற்பனை உருவங்கள், பின்னங்கள், நோய்மைகள் வாழும் ஒரு இரவுக் குடியரசின் வழியாக ஒரு புதிய வேகத்தை ஊட்டியுள்ளார். தொடர்ந்த விழிப்பின் கனத்த களைப்புணர்வையும், உடல்-மனத்தில் ஏற்படுத்தும் அதீதத்தின் கனவுநிலைக் கோலங்களையும் பிரான்சிஸ் கிருபாவின் ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ கவிதைத் தொகுப்பில் காண முடிகிறது.

இனம், மொழி, விடுதலை, தேசம், காதல் என்ற பெரிய லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கற்பனாவாதப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் வழியாக வாசகர்களிடம் தொற்றவைப்பது - அந்த லட்சியங்கள் காலாவதியான பின்னும் - உத்வேகமே என்று தோன்றுகிறது. அப்படியெனில், கற்பனாவாதக் கவிஞர்களின் உள்ளடக்கத்தில் அவர்கள் கனவு காணும் இனம், தேசம், பெண் எல்லோரும் எல்லாமும் அந்தக் கனவு நனவான வெளியில் அப்படியே பிறப்பார்களா? அவனது படைப்புயிர்களுக்கு அப்படிப் பிறந்தவர்களை ஒப்புமைகொள்ள முடியுமா? முடியாது. ஏனெனில், அவர்கள் கவிஞனின் பிரத்யேகக் குடியரசில், பிரபஞ்சத்தில் தோன்றி வாழ்பவர்கள்.

இத்தொகுப்பில் புதிய மொழி, புதிய வெளிப்பாட்டைக் கொண்டு புதிய உணர்வுத் தளத்தை உருவாக்கும் முயற்சியிலெல்லாம் கவிஞன் ஈடுபடவேயில்லை. தெருக்களில், வீட்டில், நண்பர்களின் உரையாடல்களில், மதுச்சாலைகளில் புழங்கும் உரையாடல் மொழி, பாடலாசிரியர் தெரிந்துகொண்டே இருக்கும் எதுகை மோனைகள், பாடல் தன்மை, அடுக்குமொழி, வக்கணை, தேய்ந்த உவமைகள் என நவீனக் கவிதை எதையெல்லாம் கண்டு முகஞ்சுளித்ததோ அதுவெல்லாம் இக்கவிதையில் உண்டு. நவீனக் கவிதை, கவிதைக்கு நோய்க்குறிகள் என்று பொதுவாக அடையாளம் காணும் சுயபச்சாதாபம், கவிஞன் என்ற ஆளுமையின் பெருமிதம், கழிவிரக்கம், புகார், குற்றஞ்சாட்டல், விலகாத்தன்மை, கூர்ந்த தேர்வின்மை என எல்லாப் பண்புகளும் உண்டு. அதேவேளையில், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுக்கவிதையும் நவீனக் கவிதையும் குப்பைகளென்று ஒதுக்கிய எல்லாமும் ஜீவனுடன் மின்னுகிறது பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில். தமிழ் நனவிலியில் உள்ள ஓசைகளை, படிமங்களைத் தொட்டு வாசகரிடம் ஏற்படுத்தும் அதிர்வு எந்தவிதமான நவீன ஒப்பனைகளும் இன்றி இக்கவிதைகளில் சாதிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய மொழி, பேச்சு மொழி இரண்டையும் இணைக்கும் சிவதனுசைத் தூக்கும் வித்தையை இதற்கு முன்பே தமிழ் புதுக்கவிதையில் முயன்று பாதிவழியில் துவண்டவர் கவிஞர் விக்ரமாதித்யன். கற்பனையே அற்று யதார்த்தத்தின் செக்குமாடுகளைப் பூட்டி அவர் முயன்ற வெள்ளாமை அது. அதே நிலத்தில், கற்பனையின் சிறகுகொண்ட குதிரையைப் பூட்டி நட்சத்திரங்களைக் கொண்டு உழவுசெய்துள்ளார் பிரான்சிஸ் கிருபா.

கவிதைகளின் லட்சியம் ஒரு பெண்ணின் உறவாகத் தெரிகிறது, ஒரு முத்தமாகத் தெரிகிறது; அது நடந்ததாக, திரும்பத் திரும்ப நினைவுக்கு வருவதாக உள்ளது; குழந்தைகளாக உள்ளது; அந்த அனுபவங்கள், குடிமக்கள் அனைவருமே ஒரு உச்சமான அசாத்தியத் தருணமாக இவரது கவிதைகளில் உள்ளனர். அந்த அனுபவம் நமக்குத் தெரிந்த ஞாயிறில் தொடங்கி சனியில் முடியும் கிழமைகளில் இல்லை. விடிவதற்கு ஒரு கணத்துக்கு முன்னால் ஒரு அகாலத்தில் ஒரு வௌவால் கிழமையில் நிகழ்கிறது எல்லாம். அந்தத் தருணத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்குத் தான் கவிஞன் விழித்திருக்கிறான். அதனால், அவனுக்கு விடியாமலேயே எல்லாம் துலங்கிக்கொண்டிருக்கிறது. இவர் கவிதையில் முத்த நிறத்தில் ஒரு பெண் வருகிறாள். முத்த நிறத்தைப் பார்க்கத் தொடங்கி பார்க்க முடியாமல்போகிறது. முத்தங்கள் நட்சத்திரங்களாகத் தொடங்குகின்றன.

‘மணி சூத்திரம்’ கவிதையில் வேறொரு காலமும் வேறொரு கடிகாரமும் அறிமுகமாகிறது. ‘புல்வெளியில் கண்ணுருட்டிக்கொண்டிருக்கும் வெண்பனி மணித் துகள்களை மணக்க மணக்க மாலையெனக் கோத்து உன் ஆண்டாளின் மென் தோள்களில் மார்கழியாய் சூடிப்பார்’ என்கிறார். இந்தக் கவிதையில் வருவது கவிதைக்கு வெளியே உள்ள பொது மார்கழி அல்ல; பொது ஆண்டாளும் அல்ல.

பகல், யதார்த்தம், அறிவு அனைத்தையும் கைவிட்ட, அனைத்தாலும் கைவிடப்பட்ட அவனது பிரபஞ்சத்தில் பல்லிகள் பள்ளிக்குச் செல்லும் வேறு எதார்த்தம் உருக்கொள்கிறது. வடபழனி சிக்னலாக இருக்கலாம்; அமரர் ஊர்தியில் மயானத்துக்குப் போகும் ஒருவர் எழுந்து அமர்ந்து கவிஞனைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.

பிரான்சிஸின் கவிதைகளில் வரும் பெண்கள், முத்தம், குழந்தைகள் எல்லோரும் இங்குள்ளவர்கள்போலத் தோன்றுகிறார்கள்; ஆனால், இங்குள்ளவர்கள் இல்லை. கவிஞனது ஜீவிதமும் இங்கிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஆனால், கவிஞனும் கவிதையும் உருவாக்கும் உத்வேகம் நிச்சயமாக நம்முடையது; நம் மொழியினுடையது. பிரான்சிஸ் அதைத் தனது கற்பனை உச்சம் கொண்ட புனைவால், வெளியீட்டால் சாதித்துள்ளார்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x