Published : 14 Sep 2019 09:41 AM
Last Updated : 14 Sep 2019 09:41 AM

நூல்நோக்கு: தமிழ் வளர்த்த பெரியாரியர்

புலவர் நன்னனின்
அகமும் புறமும்
நன்னன் குடி வெளியீடு
சைதாப்பேட்டை, சென்னை-15.
98845 50166
விலை: ரூ.400

நன்னனின் 95-வது பிறந்தநாளையொட்டி வெளிவந்துள்ள இத்தொகுப்பில், திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள், தமிழறிஞர்கள், சட்டத் துறையினர், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர் என்று பலரும் அவரைக் குறித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நன்னன் தம்மைப் பற்றி எழுதியவையும் அவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளும் இதில் அடக்கம். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி தமிழாசிரியராகவும், பின்பு கல்லூரிப் பேராசிரியராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் கல்வித் துறையில் தடம்பதித்தவர் நன்னன். தொலைக்காட்சியின் வாயிலாக 17 ஆண்டுகள் தமிழ் இலக்கணம் கற்பித்ததோடு தமிழியல், பெரியாரியல் தொடர்பாக 120-க்கும் மேற்பட்ட நூல்களையும் இயற்றியவர். தமிழுக்கும் திராவிட இயக்கத்துக்குமான அழுத்தமான பிணைப்புக்கு நன்னனின் வாழ்வு ஓர் உதாரணம்.

- செ.இளவேனில்

முத்தத்தின் துயர மொழி

ஒளி உன்னால் அறியப்படுகிறது
பழநிபாரதி
குமரன் பதிப்பகம்
தியாகராய நகர், சென்னை – 17.
விலை ரூ:80
044 – 24312559

திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை. ‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை நிறைத்துவிடும்போல இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகளின் கூச்சல் இல்லாமல் இருப்பது வாசிப்பின்போது ஒலியின் அமைதியை நம் பக்கம் கொண்டுவருகிறது. எல்லாக் கவிதைகளிலும் ஒருவித திட்டமிட்ட மெல்லோசை நிரம்பித் ததும்புகின்றன.

- மானா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x