Published : 14 Sep 2019 09:35 AM
Last Updated : 14 Sep 2019 09:35 AM

சேப்பியன்ஸ்: யுவால் எறிந்த கற்கள்!

சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
யுவால் நோவா ஹராரி
தமிழில்:
நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் பதிப்பகம்
98194 59857

த.ராஜன்

வரலாற்று ஆய்வாளரான யுவால் நோவா ஹராரி 2011-ல் ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற புத்தகத்தை ஹீப்ரு மொழியில் வெளியிட்டபோது இஸ்ரேலில் அது மிகப் பெரும் அதிர்வலையை உண்டாக்குகிறது. 2014-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதும் உலகம் முழுக்க ஒருவித பதற்றத்தைக் கிளப்பிவிடுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு கோடி பிரதிக்கும் மேல் விற்பனையாகிறது. 50 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்படுகிறது. தனக்குப் பிடித்தமான பத்து புத்தகங்களின் பட்டியலில் இப்புத்தகத்தையும் சேர்க்கிறார் பில்கேட்ஸ். வரலாற்று ஆர்வலர்கள், மார்க்ஸியர்கள், பொருளாதாரம் - அறிவியல் - வேளாண் துறையைச் சேர்ந்தவர்கள், இலக்கிய வாசகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என்று பல்வேறு தரப்புகளின் மத்தியிலும் இப்புத்தகம் சலனத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாசகர்கள் இந்தப் புத்தகத்தைக் கொண்டாடித்தீர்க்கும்போது ஆய்வாளர்களோ கடுமையாக விமர்சிக்கிறார்கள். என்ன காரணம்?

மூன்று முக்கியமான புரட்சிகள் வரலாற்றின் பாதையைச் செதுக்கியது என்று இப்புத்தகம் தொடங்குகிறது. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அறிவுப் புரட்சியானது எவ்வாறு வரலாற்றின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது என்பதையும், சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான வேளாண் புரட்சியானது எவ்வாறு வரலாற்றின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது என்பதையும், 500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அறிவியல் புரட்சியானது எவ்வாறு வரலாற்றை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவந்தது என்பதையும் விவாதிக்கிறது. இந்த மூன்று புரட்சிகள் மனிதர்களையும், அவர்களது சக உயிரினங்களையும் எப்படிப் பாதித்துள்ளன என்பதைப் பற்றி சுவாரஸ்யமாகக் கதைக்கிறது.

வரலாற்றாளரும் பேராசிரியருமான யுவாலால் ஒரு புனைவு எழுத்தாளருக்கான உத்தியை மிக அநாயாசயமாகப் பயன்படுத்த முடிகிறது. வரலாற்றுத் தகவல்களைச் சிந்திக்கத் தூண்டும் விதமாக மாற்றி புதிய அர்த்தங்களைக் கற்பிக்கிறார். இந்த அம்சங்களெல்லாம் சேர்ந்து அலாதியான வாசிப்பைத் தருகின்றன. நெருப்பு, மொழி, வேளாண்மை என்று தொடர்ந்துவந்த மனித அறிவின் பரிணாமத்தில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட பணமும் முதலாளித்துவமும் அறிவியலும் இன்றைக்கு மனிதர்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை வரலாற்று ஆதாரங்களோடு சுவைபடப் பேசுகிறார் யுவால்.

மனிதப் பரிமாணம் தொடர்பான மிக எளிமையான வாதங்களில் தொடங்கி தேசியம், அரசு, அதிகாரம், சட்டம், மதம், மார்க்ஸியம், பணம், பொருளாதாரம், அறிவியல் என்று தீவிரமான விஷயங்களுக்குக் கூட்டிச்செல்கிறார். அவர் எழுப்பும் எளிமையான கேள்விகளிலிருந்துகூட சிக்கலான இடத்துக்கு சிந்தனையைத் தூண்டிவிடும் வல்லமை யுவாலுக்கு இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் யுவால் எழுப்பியிருக்கும் சுவாரஸ்யமான கேள்விகளையெல்லாம் நாம் பின்தொடர்ந்தால் சிறுகதைகளாக, நாவல்களாகக்கூட எழுதிப்பார்க்கலாம். அந்தளவுக்கு மிகவும் உயிர்ப்பான கற்பனைகளாக இருக்கின்றன. வங்கிப் பரிவர்த்தனையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு அத்தியாயத்தில் வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே நாளில் தங்கள் பணத்தையெல்லாம் வங்கியிலிருந்து எடுக்க நேர்ந்தால் என்னவாகும் என்று கேட்கிறார். இப்போது உயிர்த்திருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தோடு நியாண்டர்தால், டெனிசோவா போன்ற மனித இனங்களும் ஒருங்கே பிழைத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனைசெய்து பார்க்கச் சொல்கிறார். அவர் கேட்கிறார்: நியாண்டர்தால்கள் ஆதாம் மற்றும் ஏவாளின் வழித்தோன்றல்கள் என்று பைபிள் முழங்கியிருக்குமா? ரோமானியர்களின் பிரம்மாண்டமான படைப் பிரிவுகளிலோ அல்லது ஏகாதிபத்திய சீனாவின் நிர்வாகத்திலோ நியாண்டர்தால்களால் பணியாற்றியிருக்க முடியுமா? ஹோமோ பேரினத்தின் அனைத்து உறுப்பினர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளவர்கள் என்று அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் ஒப்புக்கொண்டிருக்குமா? அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுசேர வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களிடம் வலியுறுத்தியிருப்பாரா? இப்படி, வரலாற்றைப் புரட்டிப்போட முற்படும் ஆயிரமாயிரம் கேள்விகள் புத்தகம் முழுக்க நிரம்பியிருக்கின்றன.

அறிவியலுக்கு எதிரான கடுமையான குரலில் தொடங்கும் யுவால் எல்லா துறைகளின் மீதும் புதிய பார்வையை முன்வைக்கும் அதேவேளையில், ஒவ்வொரு துறையின் மீதும் கல்லெறிந்துவிட்டும் செல்கிறார். நம் மூதாதையர் இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்தனர் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதை நம்பக் கூடாது என்று சொல்கிறார். அதற்கான ஆதாரங்களையும் அடுக்குகிறார். மிகச் சொற்பமான எண்ணிக்கையில் வாழ்ந்த மேட்டுக்குடியினரையே வரலாறு முன்வைத்து பெரும்பாலான சாமானியர்களைப் புறக்கணித்தது என்று சாடுகிறார். மார்க்ஸியர்களையும் கோபப்படுத்திப்பார்க்கத் தயங்கவில்லை.

யுவாலின் பகடி தொனிக்கும் மொழியைக் கச்சிதமாகக் கைப்பற்றியிருக்கும் நாகலட்சுமி சண்முகத்தின் சரளமான மொழிபெயர்ப்பு, அரிய புகைப்படங்களுடன் கூடிய வடிவமைப்பு என மிகச் சிறப்பாக தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறது ‘மஞ்சுள்’ பதிப்பகம். கண்மூடித்தனமாக மதத்தைக் கொண்டாடும், தேசியத்தை விடாப்பிடியாக விமர்சிக்க மறுக்கும், அறிவியலைக் கண்டு அதிசயிக்க மட்டுமே செய்யும், மனிதகுல வரலாற்றை நேர்மறையானதாகவே அணுகும் நமது நண்பர்களைச் சீண்டிப்பார்க்க விரும்பினால் இப்புத்தகத்தைப் பரிசளிக்கலாம்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x