Published : 08 Sep 2019 10:20 am

Updated : 08 Sep 2019 10:20 am

 

Published : 08 Sep 2019 10:20 AM
Last Updated : 08 Sep 2019 10:20 AM

நகுலன்: தனிமையின் ஜெபமாலை

nagulan

சி.மோகன்

தனிமையின் உள்ளார்ந்த விழிப்பில் படைப்புகளை உருவாக்கியபடியும் வாழ்வை நகர்த்தியபடியும் இருந்த நகுலனின் இயற்பெயர் டி.கே.துரைஸ்வாமி. 1921 ஆகஸ்ட் 21-ல் தாய்வழி ஊரான கும்பகோணத்தில் பிறந்தவர். அவரது 14-வது வயதில், 1935-ல் அவர்களுடைய குடும்பம் திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்தது. அதைத் தொடர்ந்து 86 வயது வரையான தன் வாழ்நாள் முழுவதும் திருவனந்தபுரத்திலேயே வாழ்ந்தவர். திருமணம் செய்துகொள்ளாதவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், ஆங்கில முதுகலைப் படிப்பை வெளிமாணவராக நாக்பூர் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இவானியர் கல்லூரி, ஆங்கிலத் துறையில் பணிபுரிந்தபடியே, நனவோடை உத்தியில் வெர்ஜீனியா வுல்ஃப் எழுதிய நாவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பணிபுரிந்து பேராசிரியராக ஓய்வு பெற்றவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன உலக இலக்கியத்திலும் வளமான வாசிப்பனுபவம் கொண்டவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே எழுதியவர். தமிழில் நகுலன் என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் டி.கே.துரைஸ்வாமி என்ற இயற்பெயரிலும் எழுதினார்.

திருவனந்தபுரத்தின் கெளடியார் பகுதியில் கோல்ஃப் லிங்க்ஸ் சாலையின் ஓர் இறக்கத்தில் மரங்கள் அடர்ந்த பசுமையான பகுதியில் அவர் வாசம் புரிந்த தனி வீடு இருந்தது. அங்கு அவர் ஒரு தனியனாகவே வசித்துவந்தார். இந்த வீட்டுக்கு 1975-78 வரையான காலங்களில் மூன்று முறை சென்றிருக்கிறேன். என் அக்காலச் சந்திப்புகளின்போது இலக்கியப் பிரதிகள் பற்றிய அவதானிப்பிலும், படைப்பாளிகளின் மனோபாவங்கள் குறித்தும், சிறுபத்திரிகை இயக்கச் சச்சரவுகள் பற்றியும் தீர்மானமான அபிப்பிராயங்கள் அவரிடம் இருந்தன. லெளகீகத்தையும் இலக்கியத்தையும் தனித் தனியே அததற்குரிய சாமர்த்தியங்களோடு அணுகும் படைப்பாளிகள் குறித்து அவரது பேச்சில் வியப்பும் கிண்டலும் சரளமாக வெளிப்படும். திருவனந்தபுர நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு உத்வேகமாகவும் ஞான குருவாகவும் விளங்கிய அதேசமயம், அவர்களுடைய படைப்பு மற்றும் வாழ்க்கை மனோபாவம் குறித்த தெளிந்த அவதானிப்பும் அவரிடம் இருந்தது. ஆனால், அவரது வாழ்நாளின் கடைசி 10 ஆண்டுகளில் அவரைச் சந்தித்தவர்களின் பதிவுகள், அவரது நினைவுகள் பிசகுவதையும் பேச்சின் இழைகள் அறுபடுவதையும் வெளிப்படுத்துகின்றன.
என் ஆரம்ப கால சந்திப்புகளில், திருவனந்தபுரத்தில் வாழ்ந்த கவிஞர் ஷண்முக சுப்பையாவைக் கவியாகவும் நண்பராகவும் நகுலன் மிகவும் நேசித்தார். அவர் உடல் நலமற்றிருந்த சமயத்தில், ஒருமுறை ஷண்முக சுப்பையாவைப் பார்க்க என்னைக் கூட்டிச் சென்றார். ஷண்முக சுப்பையாவின் மரணம் நகுலனின் தனிமையை மேலும் கூட்டியது. அதேசமயம், அவரது தனிமைதான் அவரது உள் உலகில் அவர் எப்போதும் திளைத்திருப்பதற்குத் துணையாக இருந்திருக்கிறது. “உள் உலகில் இருப்பதுதான் குதூகலமாக இருக்கிறது” என்கிறார் நகுலன். தனிமையின் துணையின்றி எழுத்தில்லை. நகுலனின் தனிமையும் அவர் நேசித்த உள் உலகமுமே அவர் மிகுந்த வேட்கையுடன் எழுத்துலகில் இயங்கியதற்குப் பிரதான காரணம்.

நகுலன் பற்றிய ஆவணப்படத்தை 2003 இறுதியில் நகுலனுடைய 82-வது வயதில் தி.ஜா.பாண்டியராஜூ ஒளிப்பதிவுசெய்து இயக்கியிருக்கிறார். நகுலனிடம் பெரும் அபிமானம் கொண்ட கவிஞர் விக்ரமாதித்யன் நேர்காணல் செய்திருக்கிறார். இலக்கிய ஆர்வலர் மதுரை செந்தில்குமார் இதன் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்ட, தகிக்கும் மன அவசங்கள் கொண்ட மதுரை நண்பர் பாண்டித்துரை, நேர்காணலின் ஓரிடத்தில் தான் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருப்பதைக் குறிப்பிடுகிறார். இது அந்த 4 நாட்களும் நகுலனை இம்சித்தபடி இருக்கிறது. ஏன், எதற்கு என மீண்டும் மீண்டும் கேட்டபடி இருக்கிறார். பிறகு ஓரிடத்தில், வெர்ஜீனியா வுல்ஃப் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டு விசனத்துடன் பேசுகிறார்.

இந்த ஆவணப்பட நேர்காணலின் முக்கிய அம்சம், அவரது மத்திய வயதிலிருந்து அந்த வீட்டில் பணியாளராக இருந்த கோமதி அம்மாளின் பதிவு. நகுலனின் குடும்ப நிலத்தை ஊரில் பராமரித்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நகுலனுடைய அப்பாவும் அம்மாவும் உடல் நலமிழந்தபோது வீட்டு வேலைகளைப் பார்க்கவும், அவர்களைப் பேணவும் அனுப்பி வைக்கப்பட்டவர். நகுலனின் குடும்பப் பின்புலம், குடும்ப உறுப்பினர்கள், நகுலனுடைய விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறை, தன் குடும்பம், குழந்தைகள் பற்றி அவர் கூறுகிறார். நகுலன் மீது அவர் கொண்டிருக்கும் கரிசனம் நெகிழ்ச்சியளிக்கிறது.

38-வது வயதில் ‘எழுத்து’ இதழில் கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்து வாழ்வைத் தொடங்கினார் நகுலன். க.நா.சு.விடம் ஏற்பட்ட நட்பும் உறவும் அவரளித்த உத்வேகமும் எழுத்துலகப் பயணத்துக்கு வழியாக அமைந்தன. இலக்கியத்தில் சோதனை முயற்சிகளின் அவசியம் பற்றித் தொடர்ந்து வலியுறுத்திவந்த க.நா.சு.வின் அபிமான எழுத்தாளராக அவர் உருவானார். க.நா.சு.வோடு உரையாடுவதில் உற்சாகமும் உத்வேகமும் பெற்றுக்கொண்டிருந்தார். க.நா.சு.வும் அவருக்கு மிகவும் பிடித்த இரண்டு சம்பாஷணைக்காரர்களென மெளனியையும் நகுலனையும் குறிப்பிடுகிறார்.

நிறை வாழ்வு வாழ்ந்து 86-வது வயதில் 2007 மே 17-ல் மரணமடைந்த நகுலன், தன் வாழ்நாளில், சாந்தோம் கம்யூனிகேஷன் சென்டர் விருதும், குமாரன் ஆசான் விருதும், அமெரிக்க வாழ் தமிழர்களின் விளக்கு விருதும் பெற்றிருக்கிறார். தீவிர இலக்கிய வாசகர்களால் மட்டுமே அறியப்பட்டுக் கொண்டாடப்பட்டவர். இன்னும் இரண்டாண்டுகளில் நகுலனின் நூற்றாண்டு (2021) வரவிருக்கிறது. அது இலக்கிய உலகில் சிறப்பாகக் கொண்டாடப்படுமெனில், நம் காலத்துக்கு நாம் செய்த அரிய கடமைகளில் ஒன்றாக அமையும். நவீனத் தமிழ் இலக்கியத்தின் உயரிய பெருமிதம் நகுலன்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com


தனிமையின் ஜெபமாலைNagulan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author