Published : 08 Sep 2019 10:11 AM
Last Updated : 08 Sep 2019 10:11 AM

சாதிய உணர்வுகள் எல்லோருக்குள்ளுமே படிந்திருக்கின்றன!- மு.குலசேகரன் பேட்டி

த.ராஜன்

அருகே இருந்து பார்க்க நேர்ந்த தோல் தொழிற்சாலையின் விளைவுகளையும், வளர்ச்சித் திட்டங்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அசாதாரணமான சூழ்நிலையின்போது மனித மனங்களில் வெளிப்படும் தனித்துவமான உணர்ச்சிப்போக்கையும் நுட்பமாகப் பதிவுசெய்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு மு.குலசேகரனின் ‘அருகில் வந்த கடல்’. இத்தொகுப்பை மட்டும் முன்வைத்து நிகழ்த்தப்பட்ட உரையாடல் இது. வேலூர் மாவட்டம் பாப்பனபள்ளியில் பிறந்து வளர்ந்த இவர், வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். ‘ஒரு பிடி மண்’, ‘ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ‘அருகில் வந்த கடல்’ சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியிருக்கின்றன. இவர் ஒரு ஓவியரும்கூட. இரண்டாவது சிறுகதைத் தொகுப்புக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் அவரோடு உரையாடியதிலிருந்து...

‘அருகில் வந்த கடல்’ தொகுப்பின் சிறந்த கதையாக ‘அழிக்கவியலாத கறை’யை நினைக்கிறேன். காதலித்த உயர் சாதிப் பெண் கைகூடிவிட்ட பிறகும்கூட இந்தச் சாதி உருவாக்கி வைத்திருக்கும் வரலாற்று அழுத்தம் அவனைத் தத்தளிப்பில் வைத்திருக்கிறதே?
சாதி உருவாக்கி வைத்திருக்கும் காலங்காலமான தாழ்வுணர்ச்சியைச் சுலபத்தில் போக்கிக்கொள்ள முடியாது. ஆதிக்க சாதிகள் வெளிப்படுத்திவிடும் தவறான சமிக்ஞைகள் மனரீதியாகப் பெரும் கலவரத்தை உண்டாக்கிவிடக்கூடும். சாதிய உணர்வுகள் எல்லோருக்குள்ளுமே எச்சசொச்சங் களாகப் படிந்திருக்கின்றன. நீண்ட சாதியடுக்கில் ஒரு சாதி அடியில் இருப்பினும் தன் இனம் உயரிய பண்பாட்டைக் கொண்டிருப்பதாக நம்புகிறது. எக்காரணத்தாலும் பிறரைத் தாழ்த்த நினைக்கும் தீய குணத்துக்கு இது கருவியாகிறது. சாதி அடையாளங்கள் பெரும்பாலும் வெளியாகும் இடங்களாக சாவும் திருமணமும் இருக்கின்றன. ஏனெனில், அவை பெரும் சமூக நிகழ்வுகளாக இருக்கின்றன. குறிப்பிட்ட இக்கதையில், உயர்சாதி என்ற ஈர்ப்பாலும்தான் அவளை அவன் காதலிக்கிறான். குடும்பம் எனும் நிறுவன விதிகளை மீறியமைக்காக அவனை, தாங்கள் மேன்மையான சாதியென்று அவளது உறவினர்கள் புறக்கணிக்கின்றனர். தன் சாதிக்கென சகிப்பும் உழைப்புமான தனிப்பெருமை உள்ளதைக் காட்டி, அவன் அதை எதிர்கொள்கிறான்.

ரத்தம்போல ஓடும் தொழிற்சாலைக் கழிவு, அணை கட்டுவதற்கான, நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கான நில அபகரிப்பு என அரசு நடவடிக்கைகளால் மனிதர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் உங்கள் கதைகளில் ஒரு சரடாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வளர்ச்சியின் பெயரால் துயருரும் எளியவர்கள் உங்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறார்களா?

இயற்கையின் மீது மிகப் பெரிய இடையீடுகளை ஒருபோதும் நிகழ்த்தக் கூடாது. பெருந்தொழில்கள், சாலைகள், அணைகள் போன்றவை அடிப்படையில் தவறானவை என்று வரலாறு காட்டியிருக்கிறது. மேல் இருப்பவர்கள் பயனைப் பெறும்போது மொத்த துன்பத்தையும் கீழே உள்ளவர்கள்தான் சுமந்தாக வேண்டும். அவர்களுடைய அன்றாட வாழ்க்கை மீட்க இயலாதபடி முழுதாகக் குலைக்கப்படுகிறது. திட்டமிடுபவர்கள் பலன் பெறுவதற்கு அதிமாற்றம் சிந்திக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, அகன்ற சாலைகளானது சொகுசு வாகனங்களின் மீதுதான் அதிக அக்கறைகொள்கின்றன. அவை பொதுப் போக்குவரத்தையும் எளிய வாகனங்களையும் மறுதலிக்கின்றன; பாதசாரிகளை முழுமையாக ஒறுக்கின்றன. பாதுகாப்பையும் ஒழுங்கையும் மலிவையும்தான் சேவைகளாகப் போக்குவரத்து பேண வேண்டுமேயொழிய, பிரம்மாண்டத்தையல்ல. இதற்கெல்லாம் சுலபமான இலக்குகளாக இருப்பவர்கள் சாமானியர்கள்தான். ஆகவே, அதுபோன்ற பெருங்கதையாடல்களை இந்தப் புனைவுகள் எதிர்க்க நினைக்கின்றன.

பல கதைகளில் தோல் தொழிற்சாலை இடம்பெறுகிறது. தோல் தொழிற்சாலையின் தற்போதைய நிலை, மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் இதையெல்லாம் இத்தனையாண்டு இடைவெளிக்குப் பிறகு என்னவாக அவதானிக்கிறீர்கள்?

நடந்ததைத் திருத்திக்கொள்ள முடியாத தூரத்தைக் கடந்துவந்துவிட்டோம். ஆதியிலிருந்து தோல் பொருட்களின் பயன்பாடு நிலவியிருக்கிறது. அது ஒருவகையில் இயற்கையானதும்கூட. இடையில், தோல்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் பெரும் தோல்வி ஏற்பட்டிருக்கிறது எனலாம். முதலில், தாவரப் பொருட்களைக் கொண்டு பதனிடும் முறை. பிறகு, ரசாயனப் பதப்படுத்தும் முறை. அடுத்து, கடும் ரசாயனங்களைக் கொண்டு தோல்களை உன்னதமாக மாற்றுவதாக வளர்ந்திருக்கிறது. இதனால், நீரும் நிலமும் முற்றாக மாசடைந்துவிட்டன. விவசாயமும் சிறுதொழில்களும் விளிம்பு நிலையை எட்டிவிட்டன. ஒரு மக்கள்நல அரசுதான் கழிவுநீரை, சாக்கடைகளைக் கையாள வேண்டும். அதைத் தனிமனித மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது. இப்போது சமூக ஆர்வலர்களின் செயல்பாடும், நீதித் துறையின் தலையீடும், விழிப்புணர்வும் சேர்ந்து நிலைமை மேம்பட்டிருக்கிறது என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. நாம் பின்னோக்கிச் செல்ல முடியாது.

அசாதாரண சூழலில் துளிர்க்கும் காமத்தைக் கதையாக்கி இருக்கிறீர்கள். இதைக் கோடிட்டுக்காட்ட நினைத்தது ஏன்?

இதுவரை அடியில் உறைந்திருந்த உணர்வுகளெல்லாம் இக்கட்டான நேரங்களில்தான் உருகத் தொடங்குகின்றன. தமக்கென்று இட்டுக்கொண்டிருந்த தடைகளைக் கண்காணிப்பு தளரும் வாய்ப்பு கிடைத்த அச்சமயத்தில் சுலபமாக மீற எத்தனிக்கின்றன. அடைய முடியாதவை என நினைத்தவையெல்லாம் சந்தர்ப்பத்தால் அடித்துக்கொண்டு அருகில் வருகின்றன. அதனாலேயே அத்தருணங்கள் அபூர்மானவையாகின்றன. காமம் எல்லோருக்குள்ளும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறது. பெரும் நெருக்கடிகளில் மற்றவர்களை இனம்காணும் மனநிலை வாய்க்கும்போது அடிப்படையான உணர்வுகள் கிளர்ந்து மேலெழக்கூடும். அதேபோல், காமவுணர்வு நிறைவேறும்போது அது சிக்கலான சூழ்நிலையை ஒன்றுமில்லாததாக்கிவிடும், அசாதாரண சூழலை வேண்டுமென்றே வளர்த்துக் கற்பிதம்கொள்ள எத்தனிக்கும். இந்தக் கணத்தை எழுதுவது ஒருவகையில் எனது தனித்துவமும்கூட.

கனவிலிருந்து விழிப்பதுபோல உங்கள் கதைகளின் முடிவுகள் கைகளுக்குள் சிக்காமல் நழுவிவிடுகின்றன. ஏன் இந்த உத்தி?
கதை என்பது முடிவற்ற ஓர் அனுபவமென்றால், அது எங்கு தொடங்கி முற்றுப்பெறுகிறது என்பதை எழுது பவனாலும் தீர்மானிக்க இயலாது. கதையின் முடிவு என்பது வாழ்க்கையின் முடிவின்மையை உணர்த்துவதாக இருக்க வேண்டும். நேரடியாகக் காணும் கனவாகத்தான் கதை இருக்கிறது. நாம் யாரோ காணும் கனவுதான் என்று எண்ணும்போது எழுதுவதும்கூடக் கனவாகிவிடுகிறது. பிறகுதான் அதில் மறைந்துள்ள தர்க்க நியாயங்களைக் கற்பித்துவிட முனைகிறோம். இந்தக் கதைகூறல் முறையைக் கனவுநிலை யதார்த்தம் எனலாம். கனவுதான் சிறுகதையுடன் ஒத்துப்போகிற வடிவம். எல்லாக் கனவுகளும் விழிக்கையில் அறுந்து துண்டாகி முடிகின்றன. இதுவரை கண்டவற்றுக்குப் பல அர்த்தங்களை வழங்கி ஓய்கின்றன. என் கதைகளின் முடிவுகளும் அறுந்து துண்டாகி வாசகரின் மனநிலைக்கு ஏற்ப பல அர்த்தங்களை வழங்குவதாக நம்புகிறேன்.

ஒரு கதை செழுமை பெறுவதில் செம்மையாக்கத்தின் பங்கு என்னவாக இருக்கிறது? உங்கள் கதைகளை நஞ்சுண்டன் செம்மைப்படுத்திய அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்...

அர்த்தங்களை மாற்றிவிடும் ஒற்றுப் பிழைகளை நீக்குவதில் தொடங்கி வாக்கிய அமைப்புகள், தவறான தகவல்கள், முரண்பாடுகள், கவனக் குறைபாடுகளைச் சீராக்குவது என எந்தவொரு பிரதியும் செம்மையாக்கத்தைக் கோரி நிற்கிறது. அதன் நோக்கம் பிரதியை வெறுமனே தரப்படுத்துவது மட்டுமல்ல; மேம்படுத்துவதும்கூட. நஞ்சுண்டன் முதலில் என் கதை ஒன்றைச் செம்மையாக்கியபோது அவர் அக்கதையின் பல வரிகளை மீள எடுத்துக் கூறினார். அது வியப்பூட்டுவதாக இருந்தது. அவர் ஒருபோதும் கதையின் தொனியை மாற்றிவிடுவதில்லை. வாக்கியங்கள் முன்பின்னாக அமையும் நடைகளையும்கூட அனுமதிக்கிறார். ஆனால், சில சமயங்களில் சொற்களில் குழம்பித் தவிக்கும் கதைசொல்லியைக் கதையின் போக்கை மாற்றாமல் மீட்கிறார். செம்மையாக்கம் ஒரு துறையாக நம்மிடையே உருவாக வேண்டும்.

சிறுகதை எழுதும்போது உங்கள் கவிமனம் எப்படியான செல்வாக்கு செலுத்துகிறது?

கவிதைகளின் மூலம்தான் மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்திருக்கிறது. அதுவும் நம் மரபில் அனைத்தும் செய்யுள் வடிவில்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. மனித வாழ்வை நன்றியுடன் துதிப்பதற்கான ஆதி கலை வடிவம் கவிதைதான். எந்த மனமும் கவித்துவத்தில் உத்வேகமடைய முடியும். எல்லா தர்க்கங்களையும் மீறி நுட்பமான விஷயங்களை அழுத்தி உணர்த்திவிட முடிகிற கவித்துவ மனோநிலைதான் கதைகளின் நோக்கமும்கூட. மேலும், கவிதையின் படிமங்களும் குறியீடுகளும் புனைவுகளினுடைய உருவகங்களின் வீச்சை விரிவாக்குவதில் ஒத்துழைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x