Published : 07 Sep 2019 10:04 am

Updated : 07 Sep 2019 10:04 am

 

Published : 07 Sep 2019 10:04 AM
Last Updated : 07 Sep 2019 10:04 AM

சீனப் புரட்சி: ஒரு பத்திரிகையாளனின் தீர்க்க தரிசனம்!

chinese-revolution

கவனகன்

அமெரிக்கப் பத்திரிகையாளரான எட்கர் ஸ்நோ 1928-லிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகள் சீனாவில் தங்கி பணிபுரிந்தவர். சீன மொழியைப் பயின்று அம்மொழியில் பேசும் திறமையையும் வளர்த்துக்கொண்டவர். அவரது செய்திக் கட்டுரைகளின் வாயிலாகவே மேலையுலகம் சீனப் புரட்சியின் வீரியத்தையும் விவேகத்தையும் அறிந்துகொண்டது. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு ‘ரெட் ஸ்டார் ஓவர் சைனா’ என்ற தலைப்பில் 1937-ல் வெளிவந்தது. அடுத்தடுத்த பதிப்புகள் திருத்தங்களுடனும் கூடுதல் சேர்க்கைகளுடனும் வெளிவந்தன. 1971-ல் வெளிவந்த பதிப்பின் இந்த மொழிபெயர்ப்பு 1921-ல் தொடங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, 1949 அக்டோபர் 1 அன்று பீகிங்கில் மக்கள் சீனக் குடியரசை அறிவிப்பதற்கு இடையிலான நீண்ட நெடிய அரசியல் பயணத்தை விவரிக்கிறது.

ஒருவகையில், மேலையுலகப் பத்திரிகைகளுக்காக எழுதப்பட்ட செய்திக் கட்டுரைகளின் திருத்தப்பட்ட வடிவம் என்று இப்புத்தகத்தைச் சொல்லலாம். ஆனால், இக்கட்டுரைகள் செய்திகளை மட்டுமே சொல்பவையாக இல்லை. சீனப் புரட்சி வெற்றியை நோக்கி எடுத்துவைத்த ஒவ்வொரு அடியையும் அருகிலிருந்து பதிவுசெய்த வரலாற்று ஆவணமாகவும், அப்புரட்சியைத் தலைமையேற்று நடத்திய மா சேதுங்கின் வாழ்க்கை வரலாறாகவும் அமைந்திருக்கிறது. நடப்பதை வெளியுலகுக்குச் சொல்லும் ஒரு செய்தியாளராக மட்டுமின்றி, புரட்சிக்கு சீனா தயாராகிக்கொண்டிருக்கிறது என்று முன்கணிக்கும் தீர்க்கதரிசியாகவும் எட்கர் ஸ்நோ இருந்திருக்கிறார். எனவேதான், மேலை நாடுகளில் மட்டுமின்றி, சீனாவிலும் இந்நூல் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

1917-ல் ரஷ்யப் புரட்சி வெற்றிபெற்ற அடுத்த பத்தாவது ஆண்டிலேயே சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் சோவியத் உருவாக்கப்பட்டுவிட்டது. நான்கு முனைகளிலிருந்தும் தொடர்ந்து தாக்குதலைச் சந்தித்துவந்த அந்தப் பகுதிக்குள் ஏறக்குறைய ஒன்பது ஆண்டு காலம் யாரும் நுழைய முடியாத காரணத்தால் அங்கு என்ன நடந்தது என்று செய்திகள்கூட வெளியாகவில்லை. சீனாவை அப்போது ஆண்டுகொண்டிருந்த தேசிய மக்கள் கட்சியின் தலைமைத் தளபதியான சியாங் கை ஷேக் கம்யூனிஸ்ட்டுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தார். அந்நடவடிக்கையின்போது மா சேதுங்கின் மனைவியும் சகோதரியும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தெற்குப் பகுதியிலிருந்து வெளியேறி 6,000 மைல்கள் நெடும்பயணத்தை மேற்கொண்டு, சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தை அமைத்துக்கொண்டார் மா சேதுங்.

சீனாவின் மஞ்சூரியாவை ஜப்பான் கைப்பற்றிய நிலையில் உள்நாட்டு யுத்தங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அப்போதும் அவர்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை விலக்கிக்கொள்ள சியாங் கை ஷேக் தயாராக இல்லை. உள்நாட்டு சர்வாதிகாரம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இரண்டையும் எதிர்த்து நின்றாலும், அது எவ்விதம் தொடரும் என்று எந்த உறுதியும் சொல்ல முடியாதிருந்த சூழலில்தான் மா சேதுங்கை நேரில் கண்டு உரையாடினார் எட்கர் ஸ்நோ.

1936-ல் வடமேற்குப் பகுதியான யேயானில் மா சேதுங்கை எட்கர் ஸ்நோ சந்தித்தபோது, சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளும் புறமுமாய் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்தது. தேசியவாத சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தன. இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்ப்புறக் குழுக்களுக்கும், மா சேதுங் தலைமையேற்றிருந்த கிராமப்புற சோவியத்துக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றிப்போயிருந்தன. அந்த முதல் சந்திப்புக்கும் சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதற்கும் இடையே சீன அரசியல் களத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தேறின.

இரண்டாம் உலகப் போரின் நேரடி விளைவுகளை சீனாவும் அனுபவிக்க நேர்ந்தது. சியாங் கை ஷேக் தலைமையிலான தேசிய மக்கள் கட்சி ஜப்பானை எதிர்ப்பதற்கு அமெரிக்காவின் உதவியை நாடி நின்றது. ஆனால், ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட ஒத்துழைத்த கம்யூனிஸ்ட்டுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இப்படியொரு சூழலில்தான், ராணுவ நடவடிக்கையில் இறங்கி ஆட்சியைக் கைப்பற்றினார் மா சேதுங். தோற்றுப்போன சியாங் கை ஷேக், தைவான் தீவுக்குத் தப்பியோடினார். கம்யூனிஸ்ட் தலைமையிலான சீனாவை எதிரியாகவே பாவித்தது அமெரிக்கா. மற்றொருபக்கம் ஒரே சித்தாந்தத்தின் அடிப்படையிலானவை என்று சொல்லிக்கொண்டாலும்கூட சீனாவுடனான சோவியத் ரஷ்யாவின் உறவும் தொடரவில்லை.

தேசியவாதிகளையும் ஆக்கிரமிப்பாளர்களையும் ஒருசேர எதிர்த்துப் போராடி வென்ற மா சேதுங் அடுத்து பெருமுதலாளித்துவம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய இரண்டின் தாக்குதல்களிலிருந்தும் சீனாவைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். நூற்றாண்டு காலமாக வறுமையில் சிக்குண்டிருந்த சீனா, அதிலிருந்து விடுபட்டு, மேலெழுந்து இன்று உலகின் சந்தையைத் தீர்மானிக்கிற நாடுகளுள் ஒன்றாக வளர்ந்திருப்பது வரலாற்று அதிசயம். கூடவே, உள்கட்சி முரண்பாடுகளை ஒடுக்குவதற்காக சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்களும் தொடர்கின்றன. தனிநபர் சர்வாதிகாரத்துக்குப் பதிலாக கட்சி சர்வாதிகாரமாகவே சீனாவின் அரசியல் தொடர்கிறது. சிக்கு சிடுக்குகள் நிறைந்த சீனத்தின் அரசியல் வரலாற்றை அறிந்துகொள்ள எட்கர் ஸ்நோவின் புத்தகம் உதவுகிறது. புத்தகத்தின் முன்னிணைப்பான காலநிரலும் பின்னிணைப்பான அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் அதை மேலும் எளிமைப்படுத்தித் தருகின்றன.

வீ.பா.கணேசனின் மொழிபெயர்ப்பில் தமிழில் 2004-ல் வெளிவந்த இந்நூல் 15 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது பதிப்பாகத் தற்போது வெளிவந்திருக்கிறது. உலக அரசியலிலும் வர்த்தகத்திலும் சீனா பெற்றிருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. என்றாலும், சீன அரசியலின் முக்கியத் திருப்புமுனைக் காலகட்டத்தைப் பற்றிய சாட்சியமாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகம் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படும் பெருமையைப் பெற்றது.

கிராமப்புற விவசாயிகளின் புரட்சியை விவரிக்கும் புத்தகம் என்றாலும், உள்ளடங்கிய குரலில் சீனாவைப் பற்றிய விமர்சனங்களும் இந்நூலில் ஆங்காங்கே தென்படுகின்றன. ‘சீனாவின் வரலாறு என்பதே சமரசங்களைக் கொண்டது’ என்கிறார் ஓரிடத்தில் எட்கர் ஸ்நோ. நேருக்கு நேராக எதிர்நின்ற அமெரிக்காவுடன் சீனா எப்படி வர்த்தக உறவுகளை வளர்த்துக்கொண்டது என்ற கேள்விக்கு இதுவே பதிலாக இருக்க முடியும்.

அமெரிக்க-சீன வர்த்தகப் போர் தீவிரம் பெற்றுவரும் சூழலில் இந்நூலின் மறுவரவு முக்கியத்துவம் பெறுகிறது. ஆசியக் கண்டத்தில் இந்தியாவைப் போல நீண்ட நெடிய வரலாற்றையும் நெடும்பரப்பையும் அதிக மக்கள்தொகையையும் கொண்ட சீனாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் சமூகத் தளத்திலும் எப்படி எதிரொலித்தது என்பதும் அதன் நன்மை தீமைகளும் பக்கத்து நாடான நமக்கும் ஒரு பாடம்.


Chinese revolutionசீனப் புரட்சிசீன கம்யூனிஸ்ட் கட்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author