Published : 07 Sep 2019 09:57 AM
Last Updated : 07 Sep 2019 09:57 AM

மேலும் ஒரு முக்கியமான கேள்வி: சமூகம் என்பது யார்?

எக்ஸ்பீரியன்ஸ், காஸ்ட் அண்டு தி எவரிடே சோஷியல்
கோபால் குரு & சுந்தர் சருக்கை
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரெஸ்
விலை: ரூ.1,051

சமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பா அல்லது அது தனிமனிதர்களுக்கு அப்பால் இயங்கக்கூடிய ஒன்றா? தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடல், விவாதம், இணக்கம், மோதல் போன்றவை இரண்டு தனிமனிதர்களுக்கு இடையேயானதா அல்லது அவர்கள் சார்ந்திருக்கும், அவர்கள் வடிவமைத்திருக்கும், அவர்களை வடிவமைத்திருக்கும் சமூகங்களுக்கு இடையேயானதா? இங்கு தனிமனிதர்கள் எங்கு வெளிப்படுகிறார்கள், சமூகங்கள் எங்கு வெளிப்படுகின்றன?

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை மையப்படுத்துகிறது நம் காலத்தின் முக்கியமான தத்துவவியலாளரான சுந்தர் சருக்கையும், ஆய்வறிஞர் கோபால் குருவும் இணைந்து எழுதி, ‘ஆக்ஸ்போர்டு’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ‘எக்ஸ்பீரியன்ஸ், காஸ்ட் அண்டு தி எவரிடே சோஷியல்’ (Experience, Caste, and the Everyday Social) புத்தகம்.

சமூகத்தைத் தனிமனிதர்கள் எவ்வாறு உணர்கிறார்கள்? ஒரு தனிமனிதர் எவ்வாறு சமூகம் என்பதோடு உறவுகொள்ள முடியும்? எவ்வாறு ஒரு தனிமனிதர் பல சமூகங்களாக இருக்க முடியும்? இத்தகைய கேள்விகளை இப்புத்தகம் சமூகவியல் ஊடாகவும், தத்துவார்த்தமாகவும், அன்றாடத்தன்மை ஊடாகவும் அணுக முற்படுகிறது.

ஒரு தனிமனிதர் ஐம்புலன்கள் ஊடாகவே ஒரு சமூகமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார், பிற சமூகங்களோடு உறவுகொள்கிறார் என்பதை அன்றாடத்தன்மையிலான சமூகம் என்ற கருத்தாக்கத்தின் ஊடாக நூலாசிரியர்கள் அணுகுகிறார்கள். அதாவது, தனிமனிதரின் ஐம்புலன்கள் சமூகப் புலன்களாக மாறுவதன் ஊடாகவே ஒரு தனிமனிதர் தன்னைச் சமூகமாக வெளிப்படுத்திக்கொள்வதோடு, அதன் அடிப்படையிலேயே பிற சமூகங்களோடு உறவும்கொள்கிறார். உதாரணத்துக்கு, சமூகப் புலன்கள் ஊடாகத்தான் ஒரு தனிமனிதனை சாதிய எல்லைகள் கட்டமைக்கின்றன. தெருவோரம் நாற்றமடிக்கும் குப்பைத் தொட்டியைக் கடக்கும்போது, அந்த நாற்றத்தை வெறுப்பதன் ஊடாக அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டிய பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கும் மனிதர்களையும் சேர்த்து வெறுக்கிறோம். இங்கு பெளதிகப் புலன் சமூகத்தன்மை பெறுகிறது. இதுபோலவே தீண்டுதல் என்ற அத்தியாவசியமான புலனை மறுதலிப்பதன் ஊடாகவே தீண்டாமை என்ற சமூகப் புலன் சாத்தியப்படுகிறது.

ஆனால், சமூகம் என்பதன் வடிவம் என்ன? அதன் உருவம் என்ன? இக்கேள்வியை நூலாசிரியர்கள் முதன்மைப்படுத்துகிறார்கள். சமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பல்ல. ஆங்கிலத்தில், ‘கம்யூனிட்டி’ என்ற சொல் ஒரு தொகுப்பைக் குறிக்கிறது. ‘சொஸைட்டி’ என்ற சொல் பல ‘கம்யூனிட்டி’களின் தொகுப்பைக் குறிக்கிறது. ஆனால், ‘சோஷியல்’ என்கிற சொல், அதன் உள்ளார்ந்த பண்பில் வடிவமற்றது; உருவமற்றது என்கிறார்கள் நூலாசிரியர்கள். அது ஸ்தூல வடிவம் கொண்டதல்ல. அதாவது, நவீன அறிவியலில் ‘இயற்கை’ எவ்வாறு உருவமற்றதாகவும் வடிவமற்றதாகவும் இருக்கிறதோ அதுபோலவே சமூகமும் என்கிறார்கள். இத்தகைய வடிவமற்ற, உருவமற்ற சமூகத்தின் அதிகாரம் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை விவரிக்கிறார்கள்.

ஒரு ராணுவம் அல்லது நீதிமன்றம்போல உயிரும் உறுப்பும் கொண்ட பெளதிகத்தன்மையிலான அதிகாரத்தைப் பெற்றது அல்ல வேதங்களின் அதிகாரம். நவீன அரசின் அதிகாரமும் அப்படித்தான். அதுபோலவே சமூகங்களின் அதிகாரமும் பெளதிகத்தன்மை கொண்டதல்ல என்று விரிவாக விளக்குகிறார்கள். இத்தகைய பெளதிகத்தன்மையற்ற சமூகங்களின் அதிகாரமே பெளதிகப் புலன்களைச் சமூகப் புலன்களாக உருமாற்றுகிறது. மேலும், சமூகப் புலன்கள் ஊடாகவே அன்றாடத்தன்மையிலான சமூகம் கட்டமைக்கப்படுகிறது. இவ்விரண்டு செயல்முறைகளும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. ஆனால், நாம் சமூகத்தைப் புறவயப்படுத்துகிறோம். அன்றாடத்தன்மையிலான அனுபவங்கள் அர்த்தமற்றதாக்கப்படுகின்றன.

மேலும், ஒரு மனிதர் ஒரே சமயத்தில் பல சமூகங்களைச் சார்ந்து இருக்க முடியும் என்கிறார்கள் நூலாசிரியர்கள். உதாரணத்துக்கு, ஒருவர் சாதியச் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் தமிழராகவும் இந்தியராகவும் இருக்க முடியும். இது சாத்தியப்படுவதால், வெவ்வேறு சமூகங்களின் நிலைப்பாடுகளிலிருந்து உரையாடும் இரண்டு தனிமனிதர்களுக்கும் இடையேயான உரையாடல் என்பது இரண்டு சமூகங்களுக்கு இடையேயான உரையாடலாக அமைகிறது. பல சமூகங்களால் மனிதர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்போது, உரையாடல் என்பது தனிமனிதர்களுக்கு இடையேயானதாக இல்லாமல் சமூகங்களுக்கு இடையேயானதாக மாறுகிறது. ஆக, நாம் பல சமூகங்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்றால், பல சமூகங்களை உள்ளடக்கியவர்கள் என்றால், நம்முடைய ஐம்புலன்களும் சமூகப் புலன்களாகின்றன என்றால், நம்முடைய உரையாடல்களும் சமூகங்களுக்கு இடையேயான உரையாடல்களாக இருக்க முடியுமே தவிர, அது தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடலாக இருக்க முடியாது என்கிறார்கள் நூலாசிரியர்கள்.

அப்படியென்றால், சமூகங்களுக்கு இடையேயான உரையாடல்களை எதன் அடிப்படையில் நிகழ்த்த முடியும்? அம்பேத்கர் முன்னெடுத்த மைத்திரி என்ற பெளத்தக் கோட்பாட்டை நூலாசிரியர்கள் முன்வைக்கிறார்கள். ‘மைத்திரி’யை இரண்டு தனிமனிதர்களுக்கு இடையேயான பண்பாக இல்லாமல், இரண்டு சமூகங்களுக்கு இடையேயான பண்பாக விரிவுபடுத்துகிறார்கள். இதன்படி, இரண்டு சாதியத் தன்னிலைகளுக்கு இடையேயான உரையாடல் என்பது இரண்டு சாதியச் சமூகங்களுக்கு இடையேயான உரையாடலாகும்போது அது தனிமனிதரின் நோக்கத்தைத் துப்பறியும் அவசியத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. நாம் உருவமற்ற, வடிவமற்ற சமூக அதிகாரத்துக்கு எவ்வாறெல்லாம் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்த அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ‘மைத்திரி’ கருத்தாக்கத்தின் ஊடாகத் தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடல்களைச் சமூகங்களுக்கு இடையேயான உரையாடலாக முன்னெடுக்கலாம் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.

இதற்கு நமக்கு வரலாற்று உதாரணங்கள் பல இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகியோர் அவர்களது உரையாடல்களைச் சமூகங்களுக்கு இடையேயான உரையாடல்களாக முன்வைத்தார்கள்; சமூக அதிகாரத்தை விசாரணைக்கு உட்படுத்தினார்கள். நாம் காந்தியின் சத்தியத்தையும் அம்பேத்கரின் மைத்திரியையும் எதிரெதிராக முன்வைக்க வேண்டியதில்லை. இவற்றுக்கு இடையே படிநிலையை உருவாக்க வேண்டியதில்லை. காந்தியின் சத்தியம் மைத்திரியை உள்ளடக்கியது. அம்பேத்கரின் மைத்திரி சத்தியத்தை உள்ளடக்கியது. மைத்திரியை காந்தி, அம்பேத்கர் இருவரிடமும் காண முடியும் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.

- சீனிவாச ராமாநுஜம், ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ உள்ளிட்ட நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x