செய்திப்பிரிவு

Published : 07 Sep 2019 09:55 am

Updated : : 07 Sep 2019 09:56 am

 

நூல்நோக்கு: கொரியக் கவித்துவம்

book-reviews

கொரியக் கவித்துவம்

மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில்: கொரியக் கவிதைகள்
தமிழில்: பா.இரவிக்குமார், ப.கல்பனா,
பரிசல் வெளியீடு,
திருவல்லிக்கேணி,
சென்னை-600005
9382853646
விலை: ரூ. 150

உதிரும் இலைகளின் பாடல் என்ற சீன மொழிபெயர்ப்புக் கவிதை நூலின் மூலம் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமானவர் ப. கல்பனா. அவரும் கவிஞர் பா.இரவிக்குமாரும் சேர்ந்து கொரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பாலான கவிதைகளின் தொனி மென்மையாகவும் சில கவிதைகள் வலியை உரக்கப் பேசுபவையாகவும் உள்ளன. இந்தக் கவிதைகளில் பனி திரும்பத் திரும்ப வருகிறது. நாம் அறியாத ஒரு நிலப்பரப்பை இந்தக் கவிதைகள் எளிய சொற்களின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவருகின்றன. ‘நினைவென்பது/ வெற்று இருக்கையொன்றில் அமர்தல்/ மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் அமர்தல்’ என்ற வரிகள் தமிழில் எழுதப்பட்ட கவிதையைப் போலவே அவ்வளவு இயல்பாகவும் அழகாகவும் உள்ளன.

காற்றின் அலை வரிசை

ஹாம் ரேடியோ:
ஓர் அறிமுகம்
தங்க.ஜெய்சக்திவேல்
டெஸ்லா பதிப்பகம்
மயிலாப்பூர்,
சென்னை- 600 004.
+91 9791349884
விலை: ரூ.100

வானொலிகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்வதன் வாயிலாக ஒரு காலகட்டத்தையே நாம் அறிந்துகொள்ள முடியும். வானொலிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஜெய்.சக்திவேல் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், ஹாம் ரேடியோ குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. ஹாம் ரேடியோ என்பது என்ன, அதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, ஹாம் ரேடியோவுக்கான உரிமைகளை எப்படிப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அரிதாக அறியப்பட்ட ஹாம் ரேடியோவானது தகவல்தொடர்பு, பொழுதுபோக்கோடு நின்றுவிடுவதில்லை; இயற்கைச் சீற்றங்களின்போது இதன் பயன்பாடு அளப்பரியது. வானொலி மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும், ஊடகத் துறை மாணவர்களுக்கும் இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.

- ச.ச.சிவசங்கர்

ஓரம் போ

மாடும் வண்டியும்
முனைவர் த. ஜான்சி பால்ராஜ்
என்சிபிஎச்,
சென்னை-600098
044- 26251968
விலை ரூ.130.


மாட்டு வண்டியில் மண் வாசனையோடு பயணப்பட்ட நாட்களை நினைவூட்டுகிறது இந்நூல். நூலாசிரியர் மாட்டு வண்டியை அக்குஅக்காக ஆய்ந்து நூலை எழுதியிருக்கிறார். மாட்டு வண்டியின் அமைப்பு, வகைகள், வெவ்வேறு பயன்பாடுகள், ரேக்ளா வண்டிகள், தண்ணீர் கொண்டுவரும் நகரத்தார் பகுதி வண்டிகள், வண்டியின் முக்கிய பாகமான சக்கரங்களின் உராய்வைக் குறைக்கும் மை தயாரிப்பு, வண்டி மாடுகளின் வகைகள், அவற்றின் நோய்களுக்காகப் போடும் சூட்டின் அடையாளங்கள் வண்டிகளைத் தயாரிக்கும் மரத்தச்சர்கள், சக்கரங்களுக்கு இரும்பு வளையம் மாட்டும் கொல்லர்கள், மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் கிராம வைத்தியர்கள் என்று பல விஷயங்களையும் நினைவில் நிறுத்துகிறது நூல்.

Book reviewsநூல்நோக்கு
Popular Articles

You May Like

More From This Category

More From this Author