Published : 25 Jul 2015 10:38 AM
Last Updated : 25 Jul 2015 10:38 AM

`துக்ளக் தர்பாரின் மந்திரிகள்

சோவின் எழுத்துகளையும் அவரையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ‘ஒசாமஅசா’ ஒரு படி மேலே. குமுதத்தில் தொடராக வந்து தொகுக்கப்பட்ட இந்த நூல் தன்னுடைய சுயசரிதை அல்ல என்று சோ சொன்னாலும், கிட்டத்தட்ட இது அப்படித்தான்.

சோவின் குடும்ப வரலாற்றில் தொடங்கி அவருடைய சமகால அனுபவங்கள்வரை வாழ்வில், அவர் சந்தித்த வெவ்வேறு மனிதர்களின் வாயிலாகச் சொல்லியிருக்கிறார். ஒரு பத்திரிகையாளர் என்பதைத் தாண்டி பல பரிமாணங்களைக் கொண்டவர் சோ என்பதால், உள்ளூர் மருத்துவரில் தொடங்கி தேசிய தலைவர்கள்வரை நாம் அறிந்த / அறியாத பல்வேறு ஆளுமைகளின் பல்வேறு முகங்களும் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன.

குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம், இந்தப் புத்தகம் சோவால் எழுதப்பட்டது அல்ல. சோ சொல்லி பத்திரிகையாளர் மணாவால் எழுதப்பட்டது. ஆனால், இந்த விஷயம் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை என்றால், வாசகர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. அப்படியொரு அசலான பதிவு.
பொதுவாக, ‘துக்ளக்’ என்றால், நமக்கு சோவின் முகம்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவரோடு கூடவே அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஒரு அணி உண்டு. அந்த அணியைப் பற்றி சோ சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்தின் ரசானுபவமான பகுதிகளில் ஒன்று. அதை அப்படியே ‘தி இந்து’ வாசகர்களுக்குத் தருகிறோம்.

மதலை: துக்ளக்கைத் துவங்கியதில் இருந்து என்னுடன் தொடர்ந்து பணியாற்றுகிறவர். மிகவும் பொறுமையானவர். வாழைப்பழத்தையும்,வெண்டைக்காயையும் சேர்த்துப் பிசைந்து, விளக்கெண்ணெயில் தோய்த்து எடுத்து உருவாக்கிய கருத்துகள் இவரிடமிருந்து வரும். கல்லில் இருந்து நார் உரித்துவிடலாம். மதலையிடம் இருந்து ஒரு அபிப்பிராயத்தை வாங்கிவிட முடியாது.

சத்யா: நகைச்சுவைப் பிரியர். ஒரு மரணத்திற்கு அனுதாபச் செய்தி எழுதுவது என்றால், அதைக்கூட கொஞ்சம் தமாஷாக எழுதலாமே என்று சொல்பவர். விற்பனைக்கு எந்தக் கருத்து உதவுமோ, அதைச் சொல்வதுதான் பத்திரிகை தர்மம் என்று நம்புகிறவர்.

ரமேஷ்: தான் சொன்னதுதான் சரி என்ற பிடிவாதம் இல்லாதவர். ஏனென்றால் இன்று சொன்னதை நாளை மாற்றிவிடுவார். அதோடு மட்டுமல்ல; `நான் அப்படிச் சொல்லவே இல்லை' என்றும் அடித்துப் பேசுவார். சர்வக் கட்சி அரசியல்வாதிகளிடமும் நல்ல பழக்கம் உண்டு. அவர்களுடைய அத்தனை குண விசேஷங்களும் சகவாசதோஷத்தினால் இவருக்கும் வந்துவிட்டது. அதனால் கொள்கை என்ற வறட்டுப் பிடிவாதம் எல்லாம் கிடையாது.

மணா: ஆரம்பக் காலத்தில் இவர் `லக்ஷ்மணன்' என்ற இயற்பெயரிலேயே துக்ளக்கில் எழுதிக்கொண்டிருந்தார். தமிழ் ஆர்வம் மிக்கவர். அதனால் இலங்கைத் தமிழ், இந்தியத் தமிழ், சென்னைத் தமிழ் என்று தமிழுக்குப் பின்னாலும் மறைந்துகொண்டிருப்பார். இவர் இலக்கியத் தமிழுடன் கொண்டிருக்கும் நெருக்கத்தினால் தமிழை வெறித்தனமாகக் கொண்டாடிக்கொண்டு, அதன் காரணமாகச் சிக்கல்களைத் தோற்றுவிப்பவர்களுடன் இவருக்கு நெருங்கிய உறவு இருக்கும்.
அதை நாம் தவறாக எடுத்துக்கொண்டுவிடக் கூடாது. இப்போதும்கூட இந்த `ஒசாமஅசா' தொடரை நான் டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யச்செய்ய அதை இவர் எழுத்தில் வடித்திருக்கிறார். அதில் என்னுடைய அணுகுமுறை கொஞ்சமும் பாதிக்கப்படாத விதத்தில் பார்த்துக்கொண்டு இந்தத் தொடரை முடிக்கப்போகிறார். நேர்மையானவர். நல்ல எதிர்காலம் உள்ளவர்.

ஸ்வாமிநாதன்: இவரிடம் ஒரு மிக நல்ல விஷயம் உண்டு. இவர் கருத்தினால் எந்தத் தொந்தரவும் ஏற்படாது. ஏனென்றால் இவர் என்ன சொல்கிறார் என்று யாருக்கும் புரியாது. வாயில் வெற்றிலையைக் போட்டுக்கொண்டு, “ழ்ழ்ழழ்ழ்ழழ்ழ்ழ்” என்றுதான் இவருடைய அபிப்பிராயம் எல்லாம் வெளிவரும். விவாதம் முடிந்தவுடன் என்ன கருத்து வந்தாலும் சரி, வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்து `நான் அதைத்தான் சொன்னேன்' என்று கூறிவிடுவார்.

ராமச்சந்திரன்: மார்க்சிஸம், லெனினிஸம், பெண்ணியம், சுற்றுச்சூழலுக்கு மதிப்பு இப்படியெல்லாம் ஏதாவது சொல்லிக் கொண்டு சமூகத்தைத் தாங்கள்தான் முன்னிறுத்தப்போகிறோம் என்கிற கனவில் மிதப்பவர்கள் நிறையப் பேருண்டு.அந்தச் சிந்தனையில் இருந்து அவர்களை மாற்றுவது லேசான காரியமாக இருக்காது. ஆனால் அந்தச் சாதனையை நான் செய்துகாட்டியிருக்கிறேன்.
வண்ணநிலவன் என்கிற புகழ் பெற்ற இலக்கியவாதி அவருடைய போறாத காலத்தினால் துக்ளக் ஆபீஸிற்கு வந்து சேர்ந்தார். காரசாரமாக எல்லோரிடமும் இடதுசாரித் தத்துவங்கள், முற்போக்குச் சிந்தனைகளை எல்லாம் விவாதித்துக்கொண்டிருப்பார். துக்ளக்கில் சேர்ந்த பிறகு அவற்றைப் பற்றி அவரிடம் யாராவது பேசினால் `உருப்படாத தத்துவங்கள்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். அந்த அளவுக்கு அவரை மாற்றிய பெருமை எனக்குண்டு. ராமச்சந்திரன் என்கிற இயற்பெயருள்ள அவருடைய தமிழ் நடையிலுள்ள வீச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.

வசந்தன்பெருமாள்: இவர் எதையும் மிக அழகாகப் பார்ப்பவர். ஒரு செய்தி, பத்திரிகையில் வந்தால், அதன் பின்னணி என்ன, அதிலுள்ள உண்மை என்ன, அது எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதை எல்லாம் பற்றி தீவிரமாகச் சிந்தித்து, சுயமாக சிந்தித்து அதை கட்டுரை ஆக்குவதில் வல்லவர். தவிர, நன்றாக மொழிபெயர்ப்பார். இவர் பேசுவதைக் கேட்டால், தினமும் இவர் தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரையும் சந்திக்கிறாரோ என்ற சந்தேகம் வந்துவிடும். இவர் எதைச்சொன்னாலும் `ஜனங்க எல்லோரும் இப்படித்தான் பேசிக்கிடறாங்க” என்று ஆரம்பத்திலாவது அல்லது முடிவிலாவது சொல்லிவிடுவார்.

எஸ்.ஜே. இதயா: துக்ளக்கின் தென் மாவட்டச் சிறப்பு நிருபர். தேர்தல் என்று வந்துவிட்டால் போதும். இவர் மிகவும் ஆர்வத்துடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிடுவார். மக்களைச் சந்தித்துக் கருத்துக்களைக் கேட்பார். திங்கட்கிழமை காலை ஃபோன் பண்ணி “சார்... அ.தி.மு.க.தான் ஸ்வீப்” என்பார். அன்று இரவு ஃபோன் பண்ணி “அ.தி.மு.க.வுக்கு சான்ஸ் இல்லை” என்பார். செவ்வாய்க்கிழமை ஃபோன் பண்ணி மறுபடியும் “அ.தி.மு.க.வுக்கு ஸ்வீப்தான் சார்” என்பார். ஏன் இப்படி மாற்றி மாற்றிப் பேசுகிறீர்களே என்றால், “இருக்கும் நிலவரத்தைத்தான் சொல்கிறேன்.
எல்லாம் ஈகுவல் ஃபைட்டாகத்தான் இருக்கு” என்பார். அதனால் அவருக்கு `ஈகுவல் ஃபைட் இதயா' என்ற பெயர் வைத்தோம். ஆனால், அவர் தருகிறஅரசியல் கட்டுரைகள் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும். இலங்கைக்கும், குஜராத்திற்கும் சென்று மற்ற பத்திரிகைகளில் வராத கட்டுரைகளைத் தந்திருக்கிற அவர், தானாகச் சிந்தித்து எழுதக் கூடியவர்.

இப்படிப்பட்ட பல குணாதிசயங்களைக் கொண்டவர்கள் துக்ளக் ஆசிரியர் குழுவில்இருக்கிறார்கள். இவர்களில் பலருடைய தனிப்பட்ட அபிப்பிராயங்கள் பல சமயங்களில் என்னுடைய கருத்தில் இருந்து மாறுபட்டே நிற்கும். இருந்தாலும் கருத்து வேறுபாடுகளை மனஸ்தாபங்களாக ஆக்கிக்கொள்ள மாட்டார்கள்.

ஆசிரியர் குழு மற்றும் கார்ட்டூனிஸ்ட்கள் என்னுடைய அபிப்பிராயங்களைப் பற்றிசெய்யும் விமர்சனங்கள் எனக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. நான் புரியும் வாதத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் அவை உதவும். தவறு செய்யாமலும் தடுக்கும்.

இவர்கள் எல்லாம் தங்கள் அபிப்பிராயங்களை மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, முதுகிற்குப் பின்னால் என்னை விமர்சனம் செய்பவர்களாக இருந்திருந்தால் ‘துக்ளக்’ என்றோ படுத்திருக்கும். என்னுடைய விமர்சனங்களும் என்றோ உளுத்துப்போயிருக்கும். அப்படி எல்லாம் நடக்கவிடாமல் தடுத்தது இவர்கள் அனைவருடைய மனம் திறந்த விமர்சனங்களே. ஒருவிதத்தில் இது எப்பேர்ப்பட்ட பலம்!"

சோவின் ‘ஒசாமஅசா’
எழுத்தும் தொகுப்பும்: மணா
விலை: இரண்டு தொகுதிகளும் சேர்த்து ரூ. 380
வெளியீடு: குமுதம் பு(து)த்தகம்,
சென்னை-10, தொலைபேசி எண்: 044-26426124

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x