

சி.மோகன்
நவீனத் தமிழ் இலக்கியத்தில் தனிப் பாதை வகுத்து, அதனூடாக மேற்கொண்ட நெடிய பயணங்கள் மூலம் தனதான கலைப் பிராந்தியத்தைக் கட்டமைத்தவர் நகுலன். அந்தப் பிராந்தியத்தில் வாசம் செய்வதில் நிறைவடைந்தவர். காலம், வாழ்க்கை, மனிதர்கள், தருணங்கள், வார்த்தைகள் ஆகியவற்றில் மாறாத திகைப்பும் வியப்பும் கொண்டியங்கிய கலை மனம் இவரது. காரண-காரியத் தர்க்க உலகுக்கு அப்பாற்பட்ட படைப்புலகை நிர்மாணித்தவர். தனிமையின் வாசனை சூழ்ந்த உலகம். நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுத்தின் எல்லா ஊடகங்களிலும் பயணித்தவர்.
1959-ல் சி.சு.செல்லப்பாவால் தொடங்கப்பட்ட ‘எழுத்து’ இதழே இவரது எழுத்துலகப் பிரவேசத்தின் தொடக்கம். அதன் முதல் ஆண்டிலிருந்து, தன்னுடைய 38-வது வயதில், கட்டுரைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கியவர். ‘எழுத்து’ காலப் பத்தாண்டுகளும் அதில் கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பங்களித்திருக்கிறார். தொடக்கத்தில் அவரது படைப்புகள் புத்தகங்களாவதற்குத் தமிழ்ப் பதிப்புச் சூழல் சாதகமாக இல்லை. சிறுபத்திரிகைகளில் மட்டுமே கடைசி வரை எழுதிய நகுலன், தனது எழுத்து சிறுபத்திரிகை வாசகர்களிடையே கவனம் பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அந்த அளவில்கூட அவர் தொடக்கத்தில் கவனம் பெறவில்லை. அவரது முற்றிலும் சோதனைரீதியான படைப்புகளை வெளியிட பதிப்புச் சூழலும் அனுசரணையாக இல்லை. இந்நிலையில், அவரே தனது புத்தகங்களை வெளியிட்டுக்கொள்ளும்படி ஆனது. ‘ஐந்து’ தொகுப்பு முன்னுரையில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எனக்கு வேலையிலிருந்து ஓய்வுபெற இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ஓய்வுபெற்ற பிறகு, என் சொந்தச் செலவில் புத்தகங்களைப் பிரசுரிக்க முடியுமா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அந்த நிலையில், இந்த இலக்கியச் சூதாட்டத்தில் என் கடைசிப் பைசாவையும் விளையாட முற்பட்ட துணிவே இந்த ‘ஐந்து’.”
காலம் மெல்ல மெல்ல அவரது அருமையை உணரத் தொடங்கியது. ஆனால், இது நிகழத் தொடங்கியபோது, அவருக்கு எழுபது வயதுக்கும் மேலாகிவிட்டது. மறதியும் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. 1990-களின் மத்தியிலிருந்து நகுலன் ஒரு வசீகரக் கலை ஆளுமையாக அறியப்படலானார். இந்தப் புதிய அலை உருவாவதற்குப் பிரதான காரணமாக இருந்தவர் கோணங்கி. நகுலனுடைய படைப்புலகம், படைப்பு மனோபாவம், வாழ்க்கை முறை, தனிமை, கலை நம்பிக்கை ஆகியவற்றின் மீது கோணங்கி கொண்ட வசீகர ஈடுபாட்டில் அவரை ஆர்வத்துடன் சந்திக்கத் தொடங்கினார். 1994-ல் அவர் நகுலனோடு நிகழ்த்திய நேர்காணலும், அதைத் தொடர்ந்து அவர் கொண்டுவந்த ‘கல்குதிரை’ நகுலன் சிறப்பிதழும் சில அதிர்வலைகளை உருவாக்கின. நேர்காணல் சந்திப்புக்குப் பின்னான இரவில் கோணங்கி எழுதிய ‘நகுலன் இறந்த பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது’ என்ற சிறுகதை, நகுலன் சிறப்பிதழில் இடம்பெற்றது. அது நேர்காணல் சிறப்பிதழின் முக்கிய அம்சமாக அமைந்தது. அவர் ஊர் சுற்றி இலக்கிய ஆர்வலர்களுடன் உரையாடுபவர் என்பதால், அவரது மந்திரச் சொல்லாடல்களில் கேட்பவர் கொண்ட மாய வசீகரம், நகுலனை ஓர் அற்புதக் கலை ஆளுமையாக அறியவும் உணரவும் வழிவகுத்தது.
நகுலனின் தனிமையும், தனித்துவமும், பேதமையும் அவரைச் சென்று பார்க்கவும், உரையாடவும், நேர்காணல்கள் மூலம் அவரைப் பதிவுசெய்வதற்குமான விழைவுகளை ஏற்படுத்தின. அய்யனார் 1998-ல் ஒரு நேர்காணல் மேற்கொண்டு, அது ‘புதிய பார்வை’ இதழில் வெளியானது. 2000 ஆண்டின் தொடக்கத்தில் தி.பாண்டியராஜு, விக்ரமாதித்யன், செந்தில்குமார், பாண்டித்துரை இணைந்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கினர். ஆர்.ஆர்.சீனிவாசன் நகுலனை அழகிய புகைப்படங்கள் மூலம் வசப்படுத்தினார்.
‘காவ்யா’ பதிப்பகம் அவரது எல்லா எழுத்துகளையும் 2001, 2002-களில் தொகுப்பு நூல்களாகக் கொண்டுவந்தது. ‘நகுலன் நாவல்கள்’, ‘நகுலன் கவிதைகள்’, ‘நகுலன் கதைகள்’, ‘நகுலன் கட்டுரைகள்’ என அவை வெளிவந்தன. நகுலனின் எழுத்துகள் பற்றிய பலரின் பார்வைகளை உள்ளடக்கிய தொகுப்பாக 2004-ல் ‘நகுலன் இலக்கியத் தடம்’ என்ற நூலையும் ‘காவ்யா’ கொண்டுவந்தது. இக்காலகட்டத்தில் ‘காவ்யா’ வெளியிட்ட நகுலன் பற்றிய இன்னொரு சிறப்பான வெளியீடு, ‘கண்ணாடியாகும் கண்கள்.’ 2003-ல் நகுலனுடைய 82-வது வயதில், ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த நகுலனுடைய புகைப்படங்களுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளும் கொண்டு, ஆர்.ஆர்.சீனிவாசன் தொகுத்த ஓர் அழகிய நூல். தமிழில் ஓர் அரிய முதல் முயற்சி.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் நகுலனின் தனித்துவமான உயரிய பங்களிப்பென்பது அவரது நாவல்களும், கவிதைகளுமே. அவரது கட்டுரைகளும் சிறுகதைகளும் குறிப்பிடத்தகுந்தவை. எனினும், அவரது கலை மேதமையின் அபூர்வ வெளிப்பாடுகளாக அமைந்தவை நாவல்களும் கவிதைகளும்.
மனமெனும் புதிர் நிலத்தில் விளையும் மொழியின் கொடையே நகுலனின் கவிதைகள். ‘காவ்யா’ வெளியிட்டுள்ள முழுக் கவிதைத் தொகுப்பு, மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஏழு பகுதிகளாக அது அமைந்துள்ளது: முதல் பகுதியில் 1959-69 வரையான பத்தாண்டுக் காலத்தில் அவர் ‘எழுத்து’ இதழில் எழுதிய கவிதைகளும், அதனையடுத்த 5 பகுதிகளில் புத்தகங்களாக வெளிவந்த, ‘இரு நீண்ட கவிதைகள்’, ‘மூன்று’, ‘ஐந்து’, ‘கோட்ஸ்டாண்ட் கவிதைகள்’, ‘சுருதி’ ஆகியவையும், கடைசிப் பகுதியில் இறுதிப் பத்தாண்டுக் கவிதைகள் எனவுமாக இத்தொகுப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. நகுலனுடைய 40 ஆண்டு காலக் கவித்துவப் பயணத்தின் அழகிய தடங்களின் அருமையான பதிவு. இப்பயணத்தில், இக்காலகட்டங்களில் வெளியான எல்லா சிறுபத்திரிகைகளிலும் அவரது கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ‘எழுத்து’, ‘ஞானரதம்’, ‘நீலக்குயில்’, ‘கொல்லிப்பாவை’, ‘ழ’, ‘ஸ்வரம்’, ‘கணையாழி’, ‘கனவு’, ‘மீட்சி’, ‘விருட்சம்’, முன்றில்’, கல்குதிரை’ என இது நீள்கிறது.
எளிய வார்த்தைகளின் திகைப்பூட்டும் சேர்மானங்களில் கவித்துவம் கொள்ளும் கவிதைகள் இவருடையவை. எவ்வித ஒப்பனையும் அலங்காரமும் அற்றவை. எனினும், அவை தன்னியல்பாகக் கொள்ளும் தத்துவ உள்ளுறையும் தொனியும் பிரமிக்க வைப்பவை. அவரது ஒரு எளிய கவிதை இது: ‘வழக்கம் போல/ எனது அறையில்/ நான் என்னுடன் இருந்தேன்/ கதவு தட்டுகிற மாதிரி/ கேட்டது/ யார்? என்று கேட்டேன்/ நான்தான் சுசிலா/ என்றாள்.’ அவருடன் மட்டுமே அவர் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அறையில், மன மொழி புரியும் விந்தைகளில் அவரது வாழ்வும் எழுத்தும் சுடர்கொண்டிருந்தன.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com