Published : 31 Aug 2019 09:47 am

Updated : 31 Aug 2019 09:47 am

 

Published : 31 Aug 2019 09:47 AM
Last Updated : 31 Aug 2019 09:47 AM

மதுரையில் புத்தகக் கோலாகலம்:  250 அரங்குகள் | 2,00,000 தலைப்புகள் | 7,00,000 வாசகர்கள் 

madurai-book-festival

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் மதுரையில் நடத்தப்படும் புத்தகத் திருவிழா வெற்றிகரமாக 14-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவுக்காக 149 தமிழ் அரங்குகள், 67 ஆங்கில அரங்குகள், 7 மல்டி மீடியா அரங்குகள் உட்பட மொத்தம் 250 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன. புத்தகத் திருவிழாவுக்கு அனுமதி இலவசம்.

வரவேற்கிறது வாசிப்புலகம்

நேற்று நடந்த புத்தகக்காட்சி திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகரும், வாழ்த்துரை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும், “இதுவரையில் புத்தகத் திருவிழாவில் பங்கேற்காத புதியவர்களும் இம்முறை கண்டிப்பாக வர வேண்டும். வாசிப்புலகம் உங்களை வரவேற்கிறது” என்றனர். “கடந்த ஆண்டு 12 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு 15 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார் புத்தகக்காட்சி ஒருங்கிணைப்பாளர் வே.புருசோத்தமன்.

எதுவரை நடக்கிறது?

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 10% கழிவில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு 50% வரையிலும் தள்ளுபடி உண்டு.

சிறப்பு நிகழ்ச்சிகள்

ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை, பல்சுவை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், எழுத்தாளரும் மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், எழுத்தாளர்கள் இந்திரா சௌந்திரராஜன், வரலொட்டி ரெங்கசாமி, நெல்லை கவிநேசன், மாநகராட்சி ஆணையர் விசாகன், ஐபிஎஸ் அதிகாரிகளான சண்முகராஜேஸ்வரன், டேவிட்சன் தேவாசீர்வாதம், இரா.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

புதிய வெளியீடுகள்

புத்தகக்காட்சியில் மதுரை படைப்பாளிகளின் பத்து நூல்கள் அரங்கேற்ற விழா செப்டம்பர் 5 அன்று நடைபெறுகிறது. ‘தமிழர் சுற்றுவட்டப்பாதையில் தந்தை பெரியார்’, ‘மதுரைவீரன் கதைகள் மறுபார்வை’, ‘தமிழ் பண்பாட்டு மரபுகள்’, ‘உணவுக் களஞ்சியம்’ உள்ளிட்ட அந்த 10 நூல்களையும் பழ.கருப்பையா வெளியிடுகிறார். மறுநாள் (செப்டம்பர் 6) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் எழுதிய ‘அறிவு பற்றிய தமிழரின் அறிவு’ புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு, பழ.நெடுமாறன், பேராசிரியர் முத்துமோகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

செப்டம்பர் 1 அன்று இரா.திருநாவுக்கரசு ஐபிஎஸ் எழுதிய ‘குறள் விருந்து கதை விருந்து’ புத்தகமும், செப்டம்பர் 3 அன்று பேராசிரியர் இரா.பிரபாகர் எழுதிய ‘தமிழக வெகுசன இசையும் அரசியலும், அரசியலற்ற இசையும்’ புத்தகமும் வெளியிடப்படுகிறது. தமிழின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனின் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல்கதை’ எனும் புதிய நாவலும் வெளியாகியிருக்கிறது. கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்குச் செல்லும் ஒரு பையனுக்கும் அதே ஊருக்கு வரும் பெண்ணுக்குமான காதலைச் சொல்லும் நாவல் இது.

எழுத்தாளர்கள்-வாசகர்கள் சந்திப்பு

செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 9 வரை தினமும் மாலை 6.00 முதல் 7.30 வரை ‘உயிர்மை’ அரங்கு 197-ல் எழுத்தாளர்களுடன் வாசகர்கள் உரையாட ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. அ.முத்துகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், ஷாஜி, சுரேஷ்குமார் இந்திரஜித், அதீதன் சுரேன், ச.துரை, பெரு.விஷ்ணுகுமார், வே.நி.சூர்யா, எஸ்.செந்தில்குமார், கவின்மலர், சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, சிவபாலன் இளங்கோவன், சமயவேல் ஆகிய ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள். ‘உயிர்மை’ பதிப்பகரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரனும், எழுத்தாளர் ஆத்மார்த்தியும் இந்நிகழ்வை ஒருங்கிணைக் கிறார்கள்.

நிறைவேறும் நீண்டநாள் கோரிக்கை

ஆங்கிலேய அதிகாரியான ஜே.எச்.நெல்சன் எழுதிய ‘தி மதுரா கன்ட்ரி: எ மேனுவல்’ (The Madura Country: A Manual) என்ற புத்தகத்தை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்து வந்தனர். அந்த கோரிக்கை இப்போது நிறைவேறியிருக்கிறது. தி ஏசியன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் 950 பக்கம் கொண்ட அந்நூலை லெதர் பைண்டிங், கோல்டன் கோட்டிங்குடன் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. விலை ரூ.2,400. 5 பாகங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில், அரசியல் பகுதியை மட்டும் தமிழாக்கம் செய்து, தனி நூலாக (மதுரையின் அரசியல் வரலாறு 1868, விலை ரூ.360) வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

காந்தி 150

இப்புத்தகத் திருவிழாவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, சர்வோதய இலக்கியப் பண்ணை சார்பில், ‘மகாத்மா காந்தி: சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு’, ‘கோபாலகிருஷ்ண கோகலேயும் மகாத்மா காந்தியும்’, ‘மகாத்மாவும் மகாகவியும்’, ‘மகாத்மா காந்தியும் மீராபென்னும்’, ‘மகாத்மாவும் மகாதேவ் தேசாயும்’, ‘மதுரையில் காந்தி’, ‘மகாத்மா காந்தியும் கோராவும்’, ‘அண்ணலும் அமிருத் கெளரும்’, ‘அதிசய சோதனை: வினோபாஜியின் வாழ்க்கை வரலாறு’ ஆகிய சிறப்பு நூல்கள் வெளியிடப்படுகின்றன.

மாணவர்களுக்கான போட்டி விவரங்கள்
பொதுவாக, விடுமுறை நாட்களில் மட்டும்தான் காலையிலிருந்தே புத்தகக்காட்சி செயல்படும். ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கருத்தில் கொண்டு இம்முறை எல்லா நாட்களிலும் 11 மணிக்குத் தொடங்குவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 1: 5 முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

செப்டம்பர் 3: ‘தோளை உயர்த்திச் சுடர் முகம் தூக்கு’ என்ற தலைப்பில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், ‘ஊரவர் துயரில் நெஞ்சுருகுவீர் இருமின்’ என்ற தலைப்பில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், ‘சமய பேதம் வளர்த்தே தளர்வது நன்றா’ என்ற தலைப்பில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டி.

செப்டம்பர் 5: ‘நாயினும் கடையாய் நலிவது மேலா?’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி.

செப்டம்பர் 6: 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் பொது அறிவு பற்றிய வினாடி வினா நிகழ்வு.

போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அந்தந்தத் தேதிகளில் தங்களது பள்ளி/கல்லூரி அடையாள அட்டையுடன் பதிவுசெய்துகொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’ அரங்கு: 55F

புத்தகக்காட்சியில் வாசகர்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது ‘இந்து தமிழ் திசை’ அரங்கு (55F) பொது அறிவு 2019 (நடப்பு நிகழ்வுகள்), என்.கௌரியின் ‘ஆன்மா எனும் புத்தகம்’, டாக்டர் கு.கணேசனின் ‘மருந்தும் மகத்துவமும்’ போன்ற புதிய வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் மூன்றாம் பதிப்பு வெளியாகியிருக்கிறது.

தொகுப்பு: கே.கே.மகேஷ், ஜனநாயகம்


மதுரை புத்தகத் திருவிழா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author