Published : 25 Aug 2019 09:45 AM
Last Updated : 25 Aug 2019 09:45 AM

மொழிபெயர்ப்பு என்பது மொழி, இலக்கியம், பண்பாடு கடந்த செயல்பாடு!- வெ.ஸ்ரீராம் பேட்டி

த.ராஜன்

நூற்றாண்டு கடந்த மொழிபெயர்ப்பு வரலாற்றில் வெ.ஸ்ரீராமின் இடம் தனித்துவமானது. தமிழ் வாசகர்களிடம் பரவலாகத் தாக்கத்தை ஏற்படுத்திய பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ நாவலின் மொழிபெயர்ப்பாளராகத் தமிழுக்கு அறிமுகமானவர். இவரது ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் மிகுந்த முக்கியத்துவமும் தனித்துவமும் கொண்டவை. இவர் மொழிபெயர்த்த ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ கவிதைத் தொகுப்பு, தமிழ்க் கவிதைகளின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரெஞ்சு இலக்கியம், சினிமா, கலாச்சாரத்தை தமிழ் மக்களிடம் சீரிய வகையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரான்ஸ் அரசாங்கம் இவருக்கு இரண்டு முறை செவாலியே விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

பிரெஞ்சு கற்றுக்கொள்ள எப்படி நேர்ந்தது? நிறைய மொழிகளை ஒருவர் கற்றுக்கொள்வதில் உள்ள அனுகூலங்கள் என்னென்ன?

காம்யு, பால்ஸாக், விக்டர் ஹ்யூகோ என்று எண்ணற்ற பிரெஞ்சு இலக்கியங்களை ஆங்கிலத்தில் படித்திருந்தேன். இந்த அற்புதமான இலக்கியங்களெல்லாம் மூல மொழியில் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்த்துவிட நினைத்ததுதான் பிரெஞ்சு கற்றுக்கொள்ளக் காரணம். எந்தவொரு மொழியாக இருந்தாலும் அதை நீங்கள் எதற்காகக் கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அதன் அனுகூலம் இருக்கிறது. இன்று பிரெஞ்சு அல்லது வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் - ஆங்கிலம் உட்பட - இலக்கியத்துக்காகக் கற்றுக்கொள்ள விரும்புவதில்லை. வேலைக்குச் செல்வதை நோக்கமாகக் கொண்டு பயன்மதிப்புக்காக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதென்பது என்னை வருந்தச்செய்யும் விஷயம்.

காம்யுவின் ‘அந்நியன்’ நாவல் மூலமாக மொழிபெயர்ப்புக்குள் நுழைகிறீர்கள். ‘க்ரியா’வின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பும் அதுதான். முதல் புத்தகமாக காம்யுவைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

மவுன்ட் ரோடு எல்எல்ஏ கட்டிடத்தில் 1970-களில் நிறைய இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். ‘நடை’ எழுத்தாளர்கள் நிறையப் பேர் அங்கு வருவார்கள். அங்கேதான் ‘க்ரியா’ ராமகிருஷ்ணனும் அறிமுகமாகிறார். எனது பிரெஞ்சு இலக்கிய, சினிமா அறிவை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, ஆங்கிலக் கட்டுரைகள் மூலமாக அவர்கள் காம்யுவை அறிந்துவைத்திருந்ததற்கும், நான் நேரடியாக பிரெஞ்சிலிருந்து தெரிந்துவைத்திருந்த காம்யுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அப்போது வந்துகொண்டிருந்த ‘பிரக்ஞை’ சிறுபத்திரிகையில் இதைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்டார்கள். காம்யுவின் உலகத்தைப் பேச வேண்டுமென்றால், அவரது படைப்பிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டியது அவசியம் இல்லையா? ஆங்கில மேற்கோள்களைக் காட்ட முடியாது; ஆங்கிலத்தில் திரிந்துபோயிருக்கிறது என்பதுதானே எனது வாதம். ஆக, எனது வாசிப்பைச் சொல்வதற்கு முன்னால் காம்யு என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அப்போதுதான் காம்யுவின் படைப்பைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

காம்யு, சார்த்ர், ப்ரெவெர் என நீங்கள் மொழிபெயர்த்த பலரும் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள். நீங்கள் மொழிபெயர்ப்பதற்கு முன்பாக இங்கே பிரெஞ்சு இலக்கிய வாசிப்பு என்னவாக இருந்தது?

‘அந்நியன்’ நாவல் மொழிபெயர்ப்பாகி அதன் பதிப்புக் குறிப்புக்காகத் தகவல்களைத் திரட்டத் தொடங்கினோம். என்னென்ன மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாகியிருக்கின்றன என்று நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா (என்பிடி) ஒரு விவரப் பட்டியல் வெளியிட்டிருந்தது. பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு வந்த புத்தகங்கள் என ஒரு 52 தலைப்புகள் இருந்தன. ஆனால், பெருவாரியான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்திலிருந்து வந்தவை. பாண்டிச்சேரியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்த ஒன்றிரண்டு படைப்புகள் பிரெஞ்சிலிருந்து நேரடியாக வந்திருக்கலாம். பெரும்பாலான படைப்புகள் முழுமையானதாக அல்லாமல் சுருக்கப்பட்ட பதிப்பாக இருந்தது. அவை வெறும் கதைக்காக மொழிபெயர்க்கப்பட்டவை.

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் காம்யு இருக்கிறார். எந்தக் கூட்டங்களில் பேசினாலும் காம்யுவின் பெயரை நீங்கள் உச்சரிக்காமல் இருந்ததில்லை. காம்யு மீது உங்களுக்கு மிகப் பெரும் அபிமானம் வருவதற்கு என்ன காரணம்?

காம்யுவின் சிந்தனை முறைகளும், அதிலிருந்து அவர் கண்டறிந்த விஷயங்களை இலக்கியமாக்கிய விதமும்தான் முக்கியமான காரணம். காம்யுவின் முதல்கட்ட வளர்ச்சியில் கிரேக்கச் சிந்தனையின் தாக்கம் இருந்தது. பிற்காலத்தில், கீதையின் தத்துவச் சிந்தனைகளும் காம்யுவை ஆக்கிரமித்திருக்கின்றன. காம்யுவின் படைப்புகள் அத்தனையிலும் கடமையைப் பற்றிப் பேசும் பகுதிகளிலெல்லாம் பகவத் கீதையின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருக்கும். இரண்டாம் உலகப் போர், ஐரோப்பியச் சூழ்நிலையின் பின்னணியில் நாம் ‘அந்நியன்’ நாவலைப் புரிந்துகொள்ள முற்பட்டால், அதற்கு வேறு பரிணாமம் கிடைக்கும். வெறுப்பின் உச்சத்தில் இருக்கக்கூடிய சமூகம் அது. அச்சமூகத்துக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுக்காமல், அதேசமயத்தில், அச்சமூகத்தை நாசக்கார வேலையிலும் இறங்கவிடாமல், பொறுமையாக இருந்து ஆக்கபூர்வமான வேலையைச் செய்ய வேண்டும் என்றும், அச்சமூகத்துக்கு என்ன மாதிரியான பார்வையைக் கொடுக்க வேண்டும் என்றும் பிரெஞ்சு சமூகத்துக்கு காம்யு எடுத்துவைத்த முதல் அடிதான் ‘அந்நியன்’ நாவல். அபத்தத்தை எதிர்கொள்ளும் புதுவிதமான பார்வையை முதன்முறையாக பிரெஞ்சு சமூகத்துக்கு இந்நாவலின் வழியே அறிமுகப்படுத்துகிறார் காம்யு.

உங்கள் மொழிபெயர்ப்புகளின் பொது அம்சமாக இந்த ‘அபத்தம்’ இருக்கிறது. ‘அபத்தத்தால் இயங்கும் உலகம்’தான் உங்களது இலக்கிய மொழிபெயர்ப்புகள் எனலாமா?

உண்மைதான். நான் மொழிபெயர்த்த புத்தகம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அபத்தப் பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது. ‘குட்டி இளவரசன்’ நாவலில் வரும் அபத்தம் வெகுளித்தனமான ஒரு சிறுவனின் பார்வையிலானது. குற்றமறியாத அந்தச் சிறுவனின் கண்களுக்கு அபத்தங்களெல்லாம் தென்பட்டுவிடுகின்றன. சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடகத்தில் வரும் அபத்தம் சித்தாந்தரீதியிலானது. ‘எதிலும் ஏகபோக உரிமை இருந்தால் மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இருக்காது; சுதந்திரம் இருந்தால் மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இருக்கும் என்கிறார்கள். ஆனால், அதில் ஒரு முரண்பாடு இருக்கிறது’ என்கிறது பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகம். ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ தொகுப்பில் வரும் பல்வேறு கவிதைகளிலும், ழூல் ரோமேனின் ‘க்னோக்’ நாடகத்திலும் வெவ்வேறு விதமான அபத்தங்கள் வெளிப்படுகின்றன.

உங்கள் நாற்பது ஆண்டுகால மொழிபெயர்ப்புப் பயணத்தில் 12 புத்தகங்கள் மட்டுமே மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்களது தேர்வு முறை குறித்துச் சொல்லுங்கள்...

மொழிபெயர்ப்பானது மொழி, இலக்கியம், பண்பாடு தாண்டிய செயல்பாடாகத் தோன்றியது. அந்த நோக்கத்தில்தான் மொழிபெயர்ப்புக்கான படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறேன். எனக்குப் பிடித்த, எல்லோருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய, தமிழ்ச் சமூகத்தில் இருப்பவர்களும் அதிக விலகலைக் கொண்டிராத புத்தகங்களாக இருக்க வேண்டும். காம்யுவின் ‘அந்நியன்’ நாவலில் வரக்கூடிய தனிநபர் அபத்தமும், சார்த்ரின் ‘மீள முடியுமா?’வில் வரக்கூடிய ‘நரகம் என்பது மற்றமைதான்’ என்பதும் எல்லா சமூகத்துக்கும் பொருந்தக்கூடியவை. இது எல்லாவற்றையும் தூக்கியடிப்பது மாதிரியான புத்தகம் ‘குட்டி இளவரசன்’. எத்தனை ஜென்மமானாலும் நிலைத்து நிற்கக்கூடிய புத்தகம் அது.

‘குட்டி இளவரசன்’ நாவலை நாற்பது முறைக்கும் மேல் வாசித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

ஆமாம். ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப் புது விஷயங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் ஊற்று அது. ‘குட்டி இளவரசன்’ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் பெரிய கொள்கை வருகிறது. அதை ஒரு வயதான மனிதர் குழந்தை யின் பார்வையில், குழந்தையின் மொழியில் சொல்கிறார். அதுதான் அந்தப் புத்தகத்தின் அழகு. 16 வயதிலிருந்து 75 வயது வரை படிக்க உகந்ததுபோன்ற வேறு புத்தகத்தை நான் பார்த்ததே கிடையாது. அதுபோல, ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிது புதிதான விஷயங்கள் புலப்படுகின்றன. ‘குட்டி இளவரசன்’ நாவல் ஓர் அதிசயம்.

பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்ப்பதன் அனுகூலங்கள் என்னென்ன?

நீ, நீங்கள் என்ற வித்தியாசம் ஆங்கிலத்தில் இல்லை. தமிழிலும் பிரெஞ்சிலும் இருக்கிறது. ‘அந்நியன்’ நாவலில் முதலில் நீங்கள் என்று வருவது பிற்பாடு நீ என்று ஆவதாக இருக்கும். ஒருவேளை, இதை நாம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தால் இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது சாத்தியமே இல்லை. ‘அந்நியன்’ நாவலின் முதல் பத்தியில் ‘இதற்கு ஒன்றும் அர்த்தமில்லை’ என்பது ஆங்கில வடிவில் ‘விச் லீவ்ஸ் தி மேட்டர் டவுட்ஃபுல்’ என்று மொழிபெயர்ப்பாகியிருந்தது. வாழ்க்கையின் அர்த்தமின்மை என்ற கருத்தாக்கத்தை முதல் பத்தியிலேயே சுட்டிக்காட்டிய காம்யுவின் தனித்தன்மை இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் அடிபட்டுப்போய்விடுகிறது. போலவே, ‘அந்நியன்’ நாவலில் ‘அம்மா’, ‘தாயார்’ என்ற இரண்டு சொற்களையும் சூழலைப் பொறுத்து மெர்சோ பயன்படுத்துகிறான். 1946-ல் வெளியான ஸ்டூவர்ட் கில்பெர்ட்டின் முதல் மொழிபெயர்ப்பில் கவனம் பெறாத இந்த அம்சத்தை மேத்யூ ஹார்ட் 1989-ல் வெளியிட்ட தனது மொழிபெயர்ப்பில் திருத்தியிருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பு 1980-ல் முதலில் வெளிவந்தது. நாம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தால் இந்த நுட்பங்களையெல்லாம் தவறவிட்டிருப்போம்.

பிரெஞ்சு சமூக, கலாச்சாரச் சொல்லாடல்களை இன்னொரு கலாச்சாரத்துக்கு மொழிபெயர்க்கையில் நேரும் சிக்கல்களை எப்படிக் கையாள்கிறீர்கள்?

மொழிபெயர்ப்பானது சொற்களை மட்டுமே சார்ந்திருப்பதில்லை என்பதால், பிரெஞ்சு கருத்தாக்கத்துக்கும், பண்பாட்டு அம்சத்துக்கும் தமிழில் சரியான சொல் இல்லை எனும்போது, அங்கிருந்து அந்தச் சொல்லைக் கடன்வாங்கிக்கொள்ளலாம். இதுபோன்ற சமயங்களில் பதிப்பாளர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். நிறைய உரையாடி, குறைவான சுதந்திரத்தோடு ஒரு முடிவுக்கு வருவோம். ஒருவேளை ஏதேனும் வார்த்தைப் பயன்பாட்டால் பொருள் திரிவதாகத் தோன்றினால், அடிக்குறிப்புகள் கொடுத்துவிடுவோம். எனது எல்லா படைப்புகளுக்குமே எடிட்டர் ராமகிருஷ்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு பிரெஞ்சு தெரியாது. ஆனால், அதை அவர் ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுப்பார்ப்பார். சந்தேகம் வரும் இடங்களைக் குறித்து வைத்துக் கேள்விகள் கேட்பார். ஒரு வாக்கியம் சரியாக வர வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் வரைகூட உரையாடியிருக்கிறோம். முறையாகக் கலந்தாலோசிப்பதன் மூலம் மொழிபெயர்ப்பின் தன்மை வளம்பெறுகிறது.

உங்களது மொழிபெயர்ப்பு பாணி என்ன? ஒரு படைப்புக்காக உங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்வீர்கள்?

ஒரு வாக்கியத்தைப் புரிந்துகொள்வதோ, கதையைப் புரிந்துகொள்வதோ மட்டும் இலக்கியம் அல்ல. சொல்லாடல், உள்வாங்கிக்கொள்ளும் மொழியின் அமைப்பு, தொனி இவற்றிலெல்லாம் என் முதன்மையான அக்கறை இருக்கும். வாக்கியங்களை உடைத்தாலும் அதன் தன்மை மாறாது என்றால் மட்டும் உடைத்துக்கொள்வேன். இல்லையென்றால், அதை அப்படியே மொழிபெயர்ப்பதுதான் சரி. மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளை, ஆய்வுகளை வாசித்துக்கொள்வேன். பிரான்ஸில் உள்ள பல்வேறு தரப்பினர்களுடனும் - சாதாரண வங்கி ஊழியரில் தொடங்கி பேராசிரியர்கள் வரைக்கும் - உரையாட முற்படுவேன். அப்படிப் பேசும்போது படைப்புகளை இன்னும் நுட்பமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. வார்த்தைப் பயன்பாட்டைப் பொறுத்தவரை தற்காலத் தமிழைப் பயன்படுத்துகிறேன்.

அதனால்தான், நீங்கள் மொழிபெயர்த்தவற்றில் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’, ‘மெர்சோ: மறுவிசாரணை’ தவிர, பிற எல்லா படைப்புகளும் உங்களுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவையாக இருக்கின்றன எனலாமா? நீங்கள் க்ளாசிக்ஸ் பக்கமும் போகவில்லை, சமகாலப் படைப்புகள் மீதும் உங்கள் அக்கறை இருக்கவில்லை...

ஒருவகையில் அப்படியும் சொல்லலாம். பெரும்பாலான பிரெஞ்சு கிளாசிக் படைப்புகளில் அவர்களது பண்பாட்டுப் பின்புலம் வெகு ஆழமாக இருக்கிறது. அன்றைய அவர்களது அன்றாடமும் பழக்கவழக்கங்களும் பிரெஞ்சு சமூகத்துக்கே இப்போது அந்நியமாகிவிட்டன. அதனால்தான், கிளாசிக் படைப்புகளை மொழிபெயர்க்கவில்லை. ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ நாவலை மொழிபெயர்க்கும்போது பியரெத் ஃப்லுசியோ சமகாலத்தவர் என்பதால், அவரிடம் சில சந்தேகங்கள் கேட்க முடிந்தது. அவர் சில இடங்களில் தமிழுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளும்படி சொன்னார். அவர் அனுமதி கொடுத்தும் அதை நான் செய்ய விரும்பவில்லை. நான் வெறும் கூரியர்தான். அங்கிருப்பதைக் கொண்டுவந்து இங்கு சேர்ப்பவன். மூலப் பிரதியில் கைவைப்பதற்கு மொழிபெயர்ப்பாளனுக்கு எந்த உரிமையும் இல்லை.

தற்காலத் தமிழைப் பயன்படுத்துவதாகச் சொன்னீர்கள். ‘அமர்ந்தார்’ என்றுகூட நீங்கள் எழுதுவதில்லை. ‘உட்கார்ந்தார்’ என்றே பயன்படுத்துகிறீர்கள். எல்லா சொற்களும் நேரடியாக இருக்கின்றன...

எது மொழிக்கு இயல்பாக இருக்கிறது, எது இயல்பாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இலக்கியம் என்றில்லை; சினிமா, ஊடகம் என எல்லா இடங்களிலும் பொருத்தமில்லாமல் பயன்படுத்துகிறோம். ‘இளம் வாலிபர் சுட்டுக் கொலை’ என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். ‘இளம் வாலிபர் சுடப்பட்டுக் கொலை’ என்பதுதான் சரி. ‘இளம் பெண் தூக்கிலிட்டு சாவு’ என்று எழுதுவார்கள். ‘இளம் பெண் தூக்கிட்டு சாவு’ என்று இன்னும் ஒருபடி மேலே போவார்கள். இரண்டுமே தவறு இல்லையா? இன்னொரு பிடிக்காத விஷயம் என்னவென்றால், தேவையில்லாமல் பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது. ‘ஒரு நாள் விடுப்பு எடுப்பதை மறந்துவிட்டு, அந்தக் காரியம் செய்தேன்’ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘ஒரு நாள் விடுப்பு எடுப்பதை தியாகம் செய்துவிட்டு, அந்தக் காரியம் செய்தேன்’ என்று எழுதுவார்கள். பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் சுருங்கிப்போய்விடும். பிறகு, உண்மையிலேயே பெரிய காரியங்களுக்காக அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அது சாதாரணமாகத் தோன்றிவிடும்.

சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடகத்துக்கு இரண்டு ஆங்கில மொழியாக்கங்கள் வந்திருக்கின்றன. ஒரு தலைப்பு ‘இன் கேமரா’, இன்னொன்று ‘நோ எக்ஸிட்’. நீங்கள் தமிழில் மொழிபெயர்க்கும்போது இந்த இரண்டு தலைப்புகளிலிருந்து மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்?

‘வீ க்லோ’ (Huis Clos) என்பது பிரெஞ்சு தலைப்பு. ‘இன் கேமரா’ என்று அர்த்தம். இந்தத் தலைப்பையும், ‘நோ எக்ஸிட்’ என்பதையும் நாம் தமிழில் பயன்படுத்த முடியாது. இறந்ததற்குப் பிறகாவது புத்தி வரும் என்று சொல்வார்கள்; ஆனால், சார்த்ர் சொல்கிறார், ‘செத்தாலும் புத்தி வராது. யாருமே இந்த நிலைமையை விட்டு மீள முடியாது’ என்று. அதனால், ‘மீள முடியுமா?’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

அறிவுஜீவிகளுக்கிடையேயான 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் போர் என்று சார்த்ர், காம்யுவுக்கு இடையேயான விவாதம் பேசப்பட்டது. நீங்கள் இதில் யார் பக்கம் நிற்பீர்கள்??

கம்யூனிஸத்திலிருந்து காம்யு வெளியேறியதுதான் அவர்கள் இருவருக்குமான முரண்பாட்டின் தொடக்கம். ஸ்டாலினின் ஒடுக்குமுறையை காம்யு விமர்சிக்கிறார். ‘ஒரு சமூகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால், புரட்சிகரமான செயல்பாடுகளால்தான் சாத்தியம். அந்தச் சமயங்களில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அதற்காக நாம் இதை விட்டுக்கொடுக்க முடியாது. ஸ்டாலின் இல்லையென்றால் பழையபடிதானே சமூகம் செல்லும்’ என்பது சார்த்ரின் வாதம். காம்யுவைவிட சார்த்ர் ஆழமான தத்துவவாதியாக இருந்தாலும், அவரது அரசியல்ரீதியான கருத்துகள் பலவும் பிற்காலத்தில் அடிபட்டுப்போய்விட்டன. காரணம் என்னவென்றால் சித்தாந்தரீதியில், தத்துவக் கோட்பாட்டுரீதியில் சார்த்ர் வாழ்க்கையைப் பார்த்தார். காம்யுவோ மனிதாபிமானத்தோடு சேர்த்துப் பார்க்கிறார். அதனால்தான், காம்யுவின் படைப்புகள் இலக்கியமாகிவிடுகின்றன; சார்த்ரின் படைப்புகள் கோட்பாடுகளாகின்றன. நான் காம்யுவின் பக்கம்தான்.

காம்யுவின் ‘அந்நியன்’ குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன என்றாலும், இன்னொரு நாவலாக அதை அணுகியிருந்தது காமெல் தாவுத்தின் ‘மெர்சோ: மறுவிசாரணை’. காம்யுவை மொழிபெயர்த்த நீங்கள் இந்த நாவலையும் மொழிபெயர்த்தது சுவாரஸ்யமானது. காம்யு இருந்திருந்தால் இந்நாவலை எப்படி எதிர்கொண்டிருந்திருப்பார்?

அப்படி யோசித்துப் பார்த்ததில்லை. ஆனால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிச்சயம் சந்தோஷப் பட்டிருப்பார். காமெல் தாவுத் தான் காம்யுவைவிட காம்யுவை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பவர் என்று நினைக்கிறேன். மிகுந்த ஆர்வத்தோடு ‘மெர்சோ: மறுவிசாரணை’ நாவலை மொழிபெயர்த்தேன். ஒவ்வொரு பக்கத்திலும் காம்யுவினுடைய எழுத்தின் பிரதிபலிப்போ எதிரொலியோ மேற்கோளோ இருந்துகொண்டே இருக்கும். காமெல் தாவுத் பிறப்பால் ஒரு அரேபியர், அவரது தாய்மொழி அல்ஜீரியர், அவர் பிரெஞ்சு கற்றுக்கொண்டு, காம்யுவை உள்வாங்கிக்கொண்டு, பிரெஞ்சில் நாவல் எழுதுகிறார். அவரது பிரெஞ்சு அவ்வளவு அழகாக இருக்கிறது. அது பெரிய அற்புதமாக எனக்குப் படுகிறது.

இலக்கிய வாசிப்பு என்பது ஒரு சமூகத்தின் சிந்தனை முறையையே மாற்றியமைக்கக்கூடியது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக, பிரான்ஸுக்குப் பல முறை பயணித்திருப்பவராக அங்கே எப்படியான சிந்தனை முறை இருப்பதாக அவதானிக்கிறீர்கள்?

மனிதகுல மேம்பாட்டுக்காக நீங்கள் அரசியலின் உதவியையும், மதத்தின் உதவியையும், எவ்வித சித்தாந்த உதவியையும் நாடலாம். ஆனால், கும்பல் சேர்ந்துகொண்டு கோஷமிட்டு மனிதகுலத்துக்கு எதிராகச் செல்லக் கூடாது என்பது அவர்களது சிந்தனை முறையின் மையமான நிலைப்பாடாக எனக்குத் தோன்றுகிறது. அவர்களது சிந்தனை முறையில், எல்லா விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட பெட்டிக்குள் போட்டுவைக்கும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. இது எந்த ‘இஸம்’ என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். எந்த ஒரு விஷயத்துக்கும் இதுதான் தீர்வு என்று திட்டவட்டமான முடிவுகளை அவர்கள் முன்வைப்பதில்லை. பிரெஞ்சு சிந்தனை முறையில் மட்டுமல்ல; ஐரோப்பிய சிந்தனை முறையில் இருக்கும் ஒரு முக்கியமான அம்சம் இது. அவர்களது வாசிப்பு விரிவாகவும் ஆழமாகவும் இருக்கிறது. பிரெஞ்சு சமூகம் உரையாடல்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டதாக இருக்கிறது. சரித்திரரீதியாகப் பார்த்தோமென்றால், அங்கே தத்துவங்கள் எல்லாமே உரையாடல் மூலம்தான் சாத்தியமாகியிருக்கின்றன. நமது சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடல்களே இல்லை. இங்கே மேடைப் பேச்சும் வம்புப் பேச்சும்தான் இருக்கிறது.

எழுத்தாளர்களுக்கு ஒரு சமூகம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு பிரெஞ்சு சமூகத்தை உதாரணமாகச் சொல்வார்கள். அது குறித்து?

உண்மைதான். எழுத்தாளர்கள் மீதும் புத்தகங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட சமூகம் அது. நடிகர்களை மோகிக்கும் பழக்கம் அங்கே இல்லை. பிரெஞ்சு கலாச்சாரத்தில் கவிதை வாசிப்பதையே ஒரு தொழில்முறை வேலையாக வைத்திருக்கிறார்கள். சில கொள்ளையடிக்கும் பணக்காரர்களைத் தவிர, அங்கே வசதியாக இருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வசதி குறைவாக இருக்கும் பிரெஞ்சுக்காரர்களைப் பார்த்தால் ஒருவித குற்றவுணர்வு இருக்கிறது. தன்னிடம் இருக்கும் வசதியைக் காட்டிக்கொள்வதை வக்கிரமானதாகப் பார்க்கிறார்கள். எவ்வளவு உயரிய பண்பு அது. இவையெல்லாம் 20-ம் நூற்றாண்டின் பிரான்ஸ். இப்போது நிறைய மாறிக்கொண்டுவருகிறது. எல்லா நாடுகளையும் போலவே பிரான்ஸும் அதன் தனித்தன்மையை இழந்துவருகிறது.

பிரெஞ்சு தத்துவங்களுக்கும் நமது தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகளாக எதைப் பார்க்கிறீர்கள்?

மேலை நாட்டுத் தத்துவத்தின் அடிப்படை மனிதன். நம்முடையது பிரபஞ்சம். அங்கே கிறிஸ்துவத் தத்துவம், அறிவுஜீவித் தத்துவம் என்று தனித்தனியாக இருக்கிறது. நம்மிடையே கடவுளும் தத்துவமும் ஒன்றுகலந்துவிட்டது. ஆதிசங்கரரிடம் மதத்தைத் தாண்டிய ஒரு தத்துவம் இருக்கிறது. ஆனால், அவரை இந்து மதத்தோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பதால், அதன் முழு வீச்சும் தெரிவதில்லை. சித்தர்களையும் திருமூலரையும்கூட ஒரு குறிப்பிட்ட மதம், சைவம், வைணவம் என்று அதற்குள் அடக்க முடியாது. மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவு குறித்து அவர்கள் பேசுகிறார்கள். பிரெஞ்சு தத்துவத்தை அங்கே அரசியலுக்குள் கொண்டுவரும் போக்கும் உண்டு. ‘தத்துவச் சிந்தனை இலக்கியத்தில் இழையோட வேண்டும்’ என்றார் காம்யு. அது மனிதகுலத்தை மேம்படுத்த வேண்டும், அடிமைப்படுத்தக் கூடாது என்பது அவரது கருத்து.

1980-90களில் தமிழ்ச் சூழலில் பிரெஞ்சு அலை வீசியது. அதற்கு முன்பாக ரஷ்ய அலை, 90-களுக்குப் பிறகாக லத்தீன் அமெரிக்க அலை என்று சூழல் மாறுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனக்கு இந்த ‘அலை’ என்று நம் சூழலில் சொல்வதன் மீது உடன்பாடு இல்லை. அயல் இலக்கியத்தின் சில பண்புகளை உள்வாங்கிக்கொண்டு, அதைத் தமிழில் பிரதி எடுப்பதையோ அல்லது அதில் ஊக்கம் பெற்று ஒரு படைப்பை உருவாக்குவதையோ என்னால் ‘அலை’ என்று சொல்ல முடியாது. நமது மொழியில், இலக்கியத்தில் தீவிரமாகப் பிரதிபலித்ததாக நான் நினைக்கவில்லை. அப்படியொரு அலை வீசும் அளவுக்கு இங்கே தீவிரமான வாசிப்பு நிகழவில்லை.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x