Published : 24 Aug 2019 10:21 AM
Last Updated : 24 Aug 2019 10:21 AM

நூல்நோக்கு: ஓவியங்கள் வழி சமூக வரலாறு

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்
அரவக்கோன்
கிழக்கு பதிப்பகம்
ராயப்பேட்டை,
சென்னை–14.
விலை: ரூ.250
044 – 4200960

சுவரோவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி வெவ்வேறு சாம்ராஜ்ய காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் என இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்தும் நூல் இது. இது தனிநபர்களின் ஓவியங்களைப் பற்றியது அல்ல; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஓவியங்களைப் பற்றியது. அதனாலேயே அரவக்கோனின் கட்டுரைகள் வழி ஓவியங்களோடு சேர்த்து ஒரு காலகட்ட சமூக வரலாற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஓவியங்கள் குறித்துப் பரவலான விவாதம் நடைபெறாத நம் சூழலில், இந்நூலின் முக்கியத்துவம் கருதி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

- ரா.பாரதி

வாழ்க்கையை விசாரிக்கும் சினிமா

ஆழங்களினூடு...
எம்.ரிஷான் ஷெரிப்
வம்சி புக்ஸ்
டி.எம்.சாரோன், திருவண்ணாமலை - 606601.
விலை: ரூ.350
94458 70995

கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புகள் வழியாக இலக்கியப் பங்களிப்பு செய்துகொண்டிருந்த ரிஷான் ஷெரிபுக்குள் ஒளிந்திருக்கும் சினிமா ரசிகன் எழுதிய புத்தகம் இது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற மிக முக்கியமான சிங்களம், தமிழ், மலையாள சினிமாக்களோடு, பிற தேசப் படங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். அதோடு, திரைக் கலைஞர்களுடன் அவர் நிகழ்த்திய நேர்காணல்களும் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா எனும் கலையைப் பேசுவதன் வழியாக வெவ்வேறு விதமான வாழ்க்கையை விசாரணை செய்வதாக அமைந்திருக்கும் தொகுப்பு இது.

- கதிரவன்

அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகள்

காளி
ச.விசயலட்சுமி
பாரதி புத்தகாலயம்
தேனாம்பேட்டை, சென்னை-18.
விலை: ரூ.130
044-24332424

நான்கு கவிதைத் தொகுப்புகளும், இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் தந்த ச.விசயலட்சுமி ‘காளி’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் புனைவுலகில் களம் இறங்கியிருக்கிறார். ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடலான லண்டாய் கவிதைகளை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இவரது பெரும்பாலான கதைகளில் விளிம்புநிலை மாந்தர்களே மையமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள். சென்னை கூவம் சார்ந்த மக்களின் வாழ்க்கையானது யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளில் பதிவாகியிருக்கின்றன. இக்கட்டான சூழ்நிலைகளை இவரது பெண் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் விதம் மிகவும் நுட்பமானது. பெண்கள், பெண்ணுரிமை, பெண்ணெழுத்து என்று இயங்கிவந்ததன் வெளிப்பாடு அது.

- கார்த்திகேயன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x