Published : 24 Aug 2019 09:48 AM
Last Updated : 24 Aug 2019 09:48 AM

பிறமொழி நூலகம்: லெமான் பிரதர்ஸ் நிறுவன நெருக்கடி கற்றுத்தரும் பொருளியல் பாடம்

ஃபயர்ஃபைட்டிங்: தி பைனான்சியல் கிரைசிஸ் அண்ட் இட்ஸ் லெசன்ஸ்
பென் எஸ்.பெர்னான்கே, டிமோதி எஃப் கீத்னர்,
ஹென்றி பால்சன் ஜூனியர்
பெங்குவின் புக்ஸ்
விலை: ரூ.499

அமெரிக்காவின் லெமான் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் வரம்பில்லாமல் வழங்கிய அடைமானக் கடன் தொகைகள், வாராக் கடன்களாக மாறியதால் மூழ்கியது. அதனால் 2008 செப்டம்பர் 15-ல் தொழில் துறை நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி, 1929-1939 காலத்தில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் ஏற்பட்டிருந்ததைவிடப் பெரிதாக இருந்தது. லெமான் பிரதர்ஸ் நிறுவன நெருக்கடி ஏன், எதனால், எப்படி ஏற்பட்டது என்று ஏராளமான புத்தகங்கள் எழுதப்படுகின்றன. எவ்வளவு புத்தகங்கள் எழுதப்பட்டாலும் அதன் முழுப் பரிமாணத்தையும் அவை வெளிப்படுத்திவிட்டன என்று கருத முடியாது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் என்ற மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பதவி வகித்த பென் எஸ்.பெர்னான்கே, நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக 2003-2009 வரை பதவி வகித்த டிமோதி எஃப் கீத்னர் (2009-2013 வரை அமெரிக்க நிதியமைச்சர்), 2006-2009 காலத்தில் அமெரிக்க நிதியமைச்சராக இருந்த ஹென்றி பால்சன் ஜூனியர் ஆகியோர் லெமான் பிரதர்ஸ் நிறுவனம் மூழ்கியபோது முக்கியப் பொறுப்புகளை வகித்தபடியே அதற்கு நேரடி சாட்சியாக இருந்தவர்கள். இவர்கள் மூவரும் எழுதிய புத்தகம்தான் ‘ஃபயர் ஃபைட்டிங்: தி பைனான்சியல் கிரைசிஸ் அண்ட் இட்ஸ் லெசன்ஸ்’. அந்த நெருக்கடி குறித்து 240 பக்கங்களில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளனர். எஞ்சியவை வரைபடங்கள், படித்துப் பார்ப்பதற்கான வழிகாட்டுக் குறிப்புகள்தான்.

பல காரணங்களுக்காக இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவது, எழுதிய மூவருமே அப்போது முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இரண்டாவது, இந்தியாவிலும் இப்போது வங்கியல்லாத நிதித் துறையில் இதே போன்ற நெருக்கடிகள் முற்றிவருகின்றன. மூன்றாவது, இப்போது அமெரிக்க நிதித் துறையின் நிலைமை என்ன, இம்மாதிரி நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த என்ன ஏற்பாடுகள் உள்ளன என்று அறிய இது மிகவும் முக்கியம். இந்த நெருக்கடியைத் தீர்த்த கதாநாயகர்களாக இம்மூவரும் இப்புத்தகத்தில் தங்களைக் காட்டிக்கொள்ளவில்லை. பெரிய நெருக்கடி வரும் என்றே நாங்கள் எதிர்பார்க்கவில்லை, பல அறிகுறிகளை நாங்கள் சரியாக கவனிக்கத் தவறிவிட்டோம் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளனர். அடைமானத் துறையில் பிரச்சினைகள் இருப்பதைக் கண்டாலும் அது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கணிக்கத் தவறிவிட்டோம் என்கின்றனர். கட்டுப்படுத்த முடியாதபடிக்கு எதுவும் கையை மீறி விடாது என்றே அதீத தன்னம்பிக்கையில் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர். பொருளாதாரமும் நிதித் துறையும் தங்களைத் தாங்களே சரிசெய்துகொண்டுவிடும் என்றும் நம்பியதாகக் கூறுகின்றனர். இப்படிப்பட்ட நிதித் துறை நெருக்கடிகளைச் சமாளிக்கும் உத்தியோ, சட்டமோ, வழிமுறையோ இப்போதும்கூட அமெரிக்க நிதித் துறைத் தலைவர்களிடம் இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர்.

நிதித் துறையின் எந்தப் பகுதியை யார் கட்டுப்படுத்துவது என்பதில் திட்டவட்டமான புரிதல்கள் இன்றளவும் இல்லை என்று புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. நிதித் துறையில் எதிர்ப்படும் சில மாறிலிகள் எத்தகைய தன்மை வாய்ந்தது என்பது இன்னமும் புரியாமலேயே இருக்கின்றன என்கின்றனர். வாராக்கடன் சுமையில் தத்தளிக்கும் வங்கித் துறையும் கடன் கேட்பவரின் நிதித் தகுதியைப் பாராமல் கடனை வழங்கிய வங்கியல்லா நிதித் துறையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகத் தொடர்வதால் இந்திய நிதி நிர்வாகிகள் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x