Published : 18 Aug 2019 10:49 AM
Last Updated : 18 Aug 2019 10:49 AM

நகுலன்: வசீகரத் தனிப் பாதை 

நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புவெளியில் முன்னுதாரணமற்ற படைப்புப் பயணத்தை வெகு அநாயாசமாக மேற்கொண்டவர் நகுலன். பொதுவாக, ஒரு நவீனப் படைப்பாளி தன் காலம், சமூகம், வாழ்க்கை, மனித மனங்கள் பற்றி அறிவதற்கும் அவதானிப்பதற்குமான பாதையாக எழுத்தை அணுகுகிறார் என்றால், அதற்கு மாறாக, தன்னை அறிவதற்கான வழியாக எழுத்தை அணுகியவர் நகுலன். “எப்படி எப்படி எழுதினால் என்னைத் தெரிந்துகொள்ளலாம் என்றுதான் விதவிதமாக எழுதிப் பார்க்கிறேன்” என்கிறார் நகுலன். புனைவுப் பாதையின் வரலாறு அதுவரை உருவாக்கிக்கொடுத்த எந்தவொரு செளகரியத்திலும் கொஞ்சமும் தஞ்சமடையாமல், தன் படைப்புலகை நிர்மாணித்த தனிப்பெரும் படைப்பு சக்தி.

நவீனத் தமிழுக்கான நகுலனின் பெரும் கொடை அவரது நாவல்கள். தமிழில் அதிக அளவில் பெறுமதியான நாவல்கள் படைத்தவர்கள் என க.நா.சுப்பிரமணியன், தி.ஜானகிராமன், நகுலன் ஆகிய மூவரைக் கருதலாம். நாவல் என அறியப்பட்ட கலைப் பாதையில் தம் புனைவுப் பயணங்கள் மூலம் சில அரிய உச்சங்களை க.நா.சு.வும் ஜானகிராமனும் அடைந்தார்கள். க.நா.சு.விடம் பரிசோதனைரீதியான சில கிளைப் பாதைகள் உண்டு என்றாலும், அவை பிரதான மைய நீரோட்டத்தின் கிளை நதிகள்தான். எனில், முற்றிலும் புதிதான தனிப் பாதை வகுத்து, தனதான பிரத்தியேகத் தனிமொழியில் அபூர்வமான பிராந்தியங்களுக்குள் அநாயாசமாகப் பயணித்தவர் நகுலன். அது தனிப் பாதை மட்டுமல்ல, வெகு வசீகரமான கலைப் பாதையும்கூட. ‘நிழல்கள்’ (1965), ‘நினைவுப் பாதை’ (1972), ‘நாய்கள்’ (1974), ‘நவீனன் டைரி’ (1978), ‘இவர்கள்’ (1983), ‘சில அத்தியாயங்கள்’ (1983), ‘வாக்குமூலம்’ (1992) ஆகிய இந்த ஏழு நாவல்களும் வெவ்வேறு பதிப்பகங்களாலும், சொந்தச் செலவிலும் பிரசுரிக்கப்பட்டவை. எட்டாவதாகப் பிரசுரமான ‘அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி’ எனும் நாவல் 2002-ல் ‘காவ்யா’ பதிப்பகம் வெளியிட்ட ‘நகுலன் கதைகள்’ என்ற தொகுப்பில் நேரடியாக இடம்பெற்றது. அதுவரை அது தனிப் புத்தகமாக வந்திருக்கவில்லை. ஆனால், அதுதான் அவர் எழுதிய முதல் நாவல்.

1976-ல் நான் அந்த நாவலைக் கையெழுத்துப் பிரதியாகப் படித்தேன். சுந்தர ராமசாமி அதை 1965-ல் படித்திருக்கிறார்.
1975-ல் நகுலனுடன் ஏற்பட்ட முதல் சந்திப்புக்கும் நெருக்கத்துக்கும் பிறகு, கடிதத் தொடர்பு மூலம் நட்பும் உறவும் நீடித்தது. அச்சமயத்தில், அவரது நாவல்கள் பற்றி நான் எழுத இருந்த ஓர் ஆய்வுக் கட்டுரைக்காக, அதுவரை பிரசுரமாகாத, ‘அந்த மஞ்சள் நிறப் பூனை’ என்ற நாவலை, அதுதான் அவர் முதலில் எழுதிய நாவல் என்ற குறிப்போடு அனுப்பியிருந்தார். ஒருமுறை சுந்தர ராமசாமியிடம் நகுலனின் ‘அந்த மஞ்சள் நிறப் பூனை’ நாவல் படித்தது பற்றிக் குறிப்பிட்டேன். அதற்கு சுந்தர ராமசாமி, நகுலன் அவரிடம் முதலில் படிக்கக்கொடுத்த நாவல் அதுதான் என்றும், அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், அதனாலேயே தமிழ்ப் புத்தகாலயத்தில் நகுலனின் நாவலைப் பெற்று வெளியிடும்படி சொன்னதாகவும் கூறினார். ஆனால், ‘நிழல்கள்’ என்ற வேறொரு நாவலை அவர்களுக்குப் பிரசுரிக்க அனுப்பியிருக்கிறார் என்பது அது என்னிடம் முன்னுரைக்காக வந்தபோதுதான் தெரியும் என்றார். ‘அந்த மஞ்சள் நிறப் பூனை’ நகுலனிடமே பல காலம் இருந்தது. நகுலனுடைய நாவல்களில் ‘நினைவுப் பாதை’, ‘நாய்கள்’, ‘நவீனன் டைரி’, ‘வாக்குமூலம்’ ஆகிய நான்கும் சிறந்தவை. பிற நான்கும் குறிப்பிடத்தகுந்தவை.

நகுலன் உருவாக்கிய அசாத்திய நாவல் கலை மரபின் தொடக்கமாக அமைந்தது, ‘நினைவுப் பாதை’ நாவல். அவரது படைப்புகளில் நான் முதலில் படித்தது இந்த நாவல்தான். இதுதான் நகுலன் மீதான பிரமிப்பையும் கிறக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நகுலன் உருவாக்கிய புது எழுத்து மரபின் தொடக்கமாக அமைந்த ‘நினைவுப் பாதை’ ஓர் எழுத்தாளனைப் பற்றியது. அதாவது, அந்த நாவலை எழுதும் எழுத்தாளனின் நினைவுப் பாதை. எவ்விதத் தீர்மானமுமற்று நாட்குறிப்புத் தன்மையில் எழுதிச் செல்லப்படும் நாவலின் ஆரம்ப வரிகள் இவை: ‘இனி எழுதுவதற்கு என்ன இருக்கிறது, இனி எழுதவே கூடாது என்று இருந்தவன் இப்போது மறுபடியும் எழுதுகிறேன். இது மாத்திரமன்று. ஒருவித நியதியும் வகுத்துக்கொள்ளாமல்தான் எழுதுகிறேன். முதல் வாக்கியம் எழுதிய பிறகுதான் அடுத்த வாக்கியம் இப்படி அமையும் என்று அது அமையும்வரை எனக்குத் தெரியாது.’

இவ்வாறான தன்மையுடன் ஒரு எழுத்தாளனால் எழுதப்படும் ஒரு நாவல், எழுத்தாளன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சக எழுத்தாளர்கள், படைப்புச் சூழல், பதிப்புச் சூழல், விமர்சனச் சூழல், வாசக மனோபாவம் என்பவற்றோடு ஊடாடியும் உரையாடியும் விரிகிறது. தனிமையின் ஏகாந்தத்திலும் தனிமையின் அழுத்தத்திலும் வாழ்ந்த நகுலன், தன்னிலிருந்து தன்னைக் கண்டடையும் பிரயாசையாகத்தான் எழுதிச் செல்கிறார். நகுலனாகவும் நவீனனாகவும் தனக்குள்ளேயே உரையாடிக்கொள்கிறார். ஒரு மனிதனுக்கும் அவனுள் தகிக்கும் படைப்பாளிக்கும் இடையே நிகழ்ந்தபடி இருக்கும் உரையாடல்கள். ‘நவீனன் ஒரு எழுத்தாளன். நகுலன் ஒரு மனிதனின் புனைபெயர்’ என்கிறார் நகுலன்.

இந்தத் தனியனின் காதல் மனத் தகிப்பின் உருவகமாக, அவரது நினைவுப் பாதையில் ஒளிரும் மாய நிழலாக, சுசீலா அவரது நினைவில் தொடர்ந்துகொண்டிருக்கிறாள். ஓர் ஒளிச் சுடர் அவள். ‘சுசீலா நான் உருட்டும் ஜபமாலை. நான் கண்ட தெய்வம்’ என்கிறார் நகுலன். சதா அலையடித்துப் புரண்டுகொண்டிருக்கும் எண்ணவோட்டங்களிலிருந்து விடுபடுவதற்காக அவர் உருட்டும் ஜபமாலை, சுசீலா. அவரது திருமந்திரம். இப்படியான ஒரு நாவலை நகுலன் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவமாக உருவாக்கியிருப்பதுதான் இந்தப் படைப்பின் தனிச் சிறப்பு. இந்த நாவல்வழி நகுலன் உருவாக்கிய புது மரபின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் அமைந்தவையே அவரது மற்றுமிரு சிறந்த நாவல்களான ‘நாய்கள்’ மற்றும் ‘நவீனன் டைரி’.

நகுலனுடைய மற்றுமொரு சிறந்த நாவல், ‘வாக்குமூலம்’. முதுமையின் தனிமையில் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்பதற்கான விண்ணப்பத்தை அடைப்படையாகக் கொண்டது. அவரது தனிமையில் கருக்கொண்டிருக்கும் இந்நாவல், கலை மேதமையில் உருக்கொண்டிருக்கிறது. தனித்துவம் மிளிரும் எளிமையின் வசீகரம் நகுலன்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x