Published : 18 Aug 2019 10:46 AM
Last Updated : 18 Aug 2019 10:46 AM

எழுத்தாளர்களின் நண்பன் புத்தகங்களின் காதலன்!

அம்ஷன் குமார்

முழு நேர எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு இணை யாக அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் எழுத்து, கலை ஆகியவற்றுக்குப் பங்களித்துவருகிறார்கள். சமீபத்தில், தனது அறுபதாம் வயதில் மறைந்த எம்.பாலசுப்ரமணியனும் அவ்வாறானவர் களில் ஒருவர். கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்பட உதவி இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், திரைப்பட சங்கத் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர். ஆந்திரா வங்கியில் பணிபுரிந்த அவரை எல்லோரும் ‘ஆந்திரா பேங்க் பாலு’ என்றுதான் அழைப்பார்கள். ஆவணப்பட இயக்குநரும் மிஷிகன் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஐ.என்.ஏ’ ஆவணப்படத்தில் ‘எம்.பாலசுப்பிரமணியன் என்கிற ஆந்திரா பேங்க் பாலு’ என்றே அவர் உதவி இயக்குநராக டைட்டிலில் இடம்பெறுகிறார்.

மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்த அவர், தனது பத்தொன்பதாம் வயதில் சென்னைக்கு வந்தவுடன் ஆரம்பத்தில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய நாளிலிருந்து திருமணம் ஆகும் வரை கால் நூற்றாண்டு காலம் அவர் திருவல்லிக்கேணி முருகேச நாயக்கர் மேன்சன் வாசியாக இருந்தார். விருந்தோம்பல் மிக்கவராதலால் சென்னைக்கு வரும் எழுத்தாளர்கள் பலரும் அவரது அறையில் தங்கிவிட்டுப்போவார்கள். சென்னைக்கு அப்பால் உள்ளவர்கள் புத்தகங்கள், சிறுபத்திரிகைகள் ஆகியவற்றைப் பதிப்பிக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடுவார்கள். அவருக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்.

கவிஞர் இளையபாரதியின் பதிப்பகத்துக்காக புதுமைப்பித்தன் உட்பட பல நூல்களுக்குத் தொகுப்பாசிரியராகச் செயல்பட்டார். அவர் தலைமையில் இயங்கிய மூவி அப்ரிசியேஷன் சொசைடிதான் உலகத் திரைப்பட நூற்றாண்டு விழாவைத் தமிழகத்தில் முதன்முதலாகக் கொண்டாடியது. அவர் திரைப்படங்கள் பற்றி பத்திரிகைகளில் எழுதினார். நல்ல கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தார். எழுத்தாளர்கள் பற்றி இயக்குநர் அருண்மொழியுடன் இணைந்து ஆவணப்படங்கள் தயாரித்தார்.

சி.சு.செல்லப்பா, அசோகமித்திரன், வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், எஸ்.பொன்னுதுரை ஆகியோர் அவரால் ஆவணப்படுத்தப்பட்ட எழுத்தாளர்கள். எனது படங்கள் பலவற்றிலும் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். எனது ‘ஒருத்தி’ படத்தில் வாய்பாடு சொல்லித்தரும் ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியராகவும் அவர் நடித்துள்ளார். அவருக்கு அருள்மொழி நங்கை என்கிற மனைவியும், சிபி ஆதித்யா என்கிற மகனும் உள்ளனர்.

பாலசுப்ரமணியன் பெரும் புத்தகப் பிரியர். அவர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை விட்டுச் சென்றுள்ளார். வாசகர்களுக்கு மட்டுமின்றி புதிதாக நூல்நிலையம் தொடங்க விழைபவர்களுக்கும் அது ஒரு பொக்கிஷம். நன்கொடை அளித்து அவற்றைப் பெற விரும்புபவர்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம்: 9444706257

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x