Published : 17 Aug 2019 09:50 am

Updated : 17 Aug 2019 09:50 am

 

Published : 17 Aug 2019 09:50 AM
Last Updated : 17 Aug 2019 09:50 AM

தமிழ்வழி ஆங்கிலம் கற்க ஒரு நல்ல கையேடு!

english-tutorial-book

எஸ்.கோபாலகிருஷ்ணன்

ஆங்கில ஆசான்
நலங்கிள்ளி
கிழக்குப் பதிப்பகம் ராயப்பேட்டை,
சென்னை–14.
விலை: ரூ.600
தொடர்புக்கு: 044 – 42009603


மொழியில் நன்கு புலமையடையவும் எந்தச் சூழலிலும் தவறின்றிப் பேசவும் அடிப்படையான இலக்கண விதிகளைத் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. இலக்கண வழி ஆங்கிலத்தைக் கற்பிக்கும் ஏராளமான நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்திருக்கின்றன என்றாலும், எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதியிருக்கும் ‘ஆங்கில ஆசான்’ இலக்கணத்தின் வழியாக ஆங்கிலத்தை எளிய தமிழில் விரிவாகவும் தெளிவாகவும் கற்றுத் தரும் அரிதான நூல்.

தமிழ்வழிக் கல்வி பயின்றோர் தங்களுக்கு ஆங்கிலம் பேச வராது என்று புழுங்கும் தாழ்வுமனப்பான்மையைத் தகர்க்கிறார் நலங்கிள்ளி. ஆங்கிலம் உட்பட வேறெந்த அந்நிய மொழியையும் கற்க தாய்மொழிப் புலமை அவசியம் என்கிறார். பல மொழி அறிஞர்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்வழியில் படித்து, மதுரை செல்லூர் நெசவுத் தொழிலாளர்களுக்கு 15 ஆண்டுகள் ஆங்கிலம் கற்பித்ததன் வழியாக ஆங்கில ஆசிரியராகி தமிழ்வழியில் ஆங்கிலம் கற்பதற்கான இந்த நூலை எழுதியிருப்பதன் மூலம் தாய்மொழிக் கல்வியே பன்மொழி அறிவுக்கு வளமான அடித்தளம் என்பதற்கான வாழும் உதாரணமாகத் திகழ்கிறார் நலங்கிள்ளி. நெசவுத் தொழிலாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கத் தான் உருவாக்கிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நூலை எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

764 பக்கங்களைக் கொண்டிருக்கும் இந்த நூல், பத்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒன்பது அதிகாரங்கள் காலத்துக்கும் (tense) அதன் பல்வேறு வகைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ‘காலம் மற்றும் அதன் வகைகளில் நிபுணத்துவம் பெற்றுவிட்டால், ஆங்கிலப் பெருங்கடலில் பெருமளவுக்குக் கடந்துவிட்டதாகச் சொல்லலாம்’ என்பதே முதல் அதிகாரத்தின் அறிமுக வரிகள். இந்த ஒன்பது அதிகாரங்களில் காலத்தின் ஒவ்வொரு வகைக்கும் விரிவான விளக்கங்கள், அவை பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள், சூழல்கள் ஆகியவை தக்க உதாரணங்களுடன் தனித் தனியான பகுதிகளாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ‘be’, ‘do’, ‘have’ போன்ற ஆங்கிலத்தில் பல பொருள்களையும் பயன்பாடுகளையும் கொண்ட சொற்கள் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதையும் ஒவ்வொரு அதிகாரத்திலும் விளக்கியுள்ளார். நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சில உதாரணச் சொற்றொடர்களைப் படித்தால் இப்படிப்பட்ட சொற்றொடர்களையெல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பயன்படுத்துகிறோமா என்ன என்ற கேள்வி எழும். ஆனால், ஆங்கிலத்தில் காலம் எவ்வாறெல்லாம் பயன்படக்கூடும் என்ற அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கி, அவற்றைக் கற்பிக்கும் நோக்கத்திலேயே அவை சேர்க்கப்பட்டுள்ளதாகப் புரிந்துகொள்ளலாம். இவற்றை முழுமையாகப் படித்தால் ஆங்கிலத்தில் காலம் என்பதை எந்தச் சூழலுக்கு எவ்வாறு பயன்படுத்தி சரியான வாக்கியங்களை அமைக்க வேண்டும் என்பதில் தேர்ச்சி அடையலாம்.

துணை வினைகளில் எதை, எங்கே பயன்படுத்த வேண்டும் என்பது ஆங்கிலத்தில் கரைகண்டுவிட்டதாகப் பெயர்பெற்றவர்களே தடுமாறும் இடம். குறிப்பாக can-could, may-might, will-would-shall, போன்ற சொற்களெல்லாம் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் நடைமுறை இருந்துவருகிறது. இவற்றில் சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. இந்த ஒவ்வொரு சொல்லுக்கும் தனிப் பயன்பாடுகளும் இருக்கின்றன. காலத்தைப் பொறுத்தும் நாம் யாரிடம் பேசுகிறோம் என்பதைப் பொறுத்தும் இந்தச் சொற்களின் பயன்பாடு மாறும். இவை ஒவ்வொன்றும் எளிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலைப் படித்த பிறகு, காபி சாப்பிடப் போகலாமா என்று மேலதிகாரியிடம் கேட்பதற்கும், அதே கேள்வியை நண்பரிடம் கேட்பதற்கும் ஆங்கிலத்தில் எப்படி வெவ்வேறு வகையான வாக்கியங்களை அமைப்பது என்பது போன்ற விஷயங்களில் தெளிவு கிடைக்கும்.

பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘பயிற்சி வினாக்கள்’, ‘அன்றாட உரையாடல்கள்’ ஆகிய பகுதிகள் அன்றாடப் பேச்சுக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்தப் பெரிதும் உதவுபவை. ஆயிரம் வினாக்களும் 15 உரையாடல் சூழல்களும் கொடுக்கப்பட்டிருப்பது எதையும் விரிவாகவும் விளக்கமாகவும் அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கும் விதமாகவும் கொடுக்கும் ஆசிரியரின் உந்துதலுக்குச் சான்றாகிறது. சில இடங்களில் உதாரணங்கள், விளக்கங்களைக் கொடுத்துவிட்டு இணையதளங்கள் மூலம் அவற்றில் மேலதிகப் பயிற்சிகளைப் பெறலாம் என்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். ‘இந்த நூலை வாங்கிவிட்டால் நீங்கள் ஆங்கிலத்தில் ஈடு இணையற்ற நிபுணர் ஆகிவிடலாம்’ என்றெல்லாம் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசாமல், எதையும் மேலும் கற்பதற்கான இடம் இருப்பதைக் குறிப்பிட்டு அதற்கான வழிகளைச் சொல்வதிலும் அக்கறை செலுத்தியிருப்பது இந்த நூலின் நோக்கத்துக்கு அணி சேர்க்கிறது. தமிழ்வழி ஆங்கிலம் பயில விரும்புபவர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய மிகச் சிறந்த கையேடு இது!

- எஸ்.கோபாலகிருஷ்ணன்,
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.inதமிழ்வழி ஆங்கிலம்ஆங்கில ஆசான்நலங்கிள்ளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x