

சி.மோகன்
நனவு மனம், நனவிலி மனம், ஆழ்மனம் என்றான மனித மன அடுக்குகளில் நனவு மனமும் நனவிலி மனமும் சதா எண்ணவோட்டங்களில் சலனித்தபடி இருக்கின்றன. ஆழ்மனம் தொன்மமாகத் தொடரும் படிமங்களின் உறைவிடமாக இருக்கிறது. நனவு மனதிலும் நனவிலி மனதிலும் அலையடித்தபடியும் ஆரவாரமற்றும் சலனித்துக்கொண்டிருக்கும் மனவோட்டங்கள் வார்த்தைகளால் ஆனவை. மனம் வார்த்தைகளில் புரண்டபடி இருக்கிறது. மனம் தன்னிச்சையாக உருவாக்கும் வார்த்தைகள், சொற்றொடர்களின் அவதானிப்பிலும், அது அப்படியாகச் சலனிப்பதிலுள்ள புதிரிலும் வியப்பும் திகைப்பும் கொள்ளும் கலை மனம் நகுலனுடையது. மரபும் நவீனமும், பேதமையும் மேதமையும் கலந்துறவாடும் படைப்பு சக்தி. வார்த்தைகள் திரும்பத் திரும்பவும், மாற்றி மாற்றியும் அமைவதில் திருமூலரின் திருமந்திர அம்சமும், மனவோட்டங்களை வார்த்தைகளின் வழி பின்தொடர்வதில் நவீன நனவோடை உத்தியும் முயங்கிக் களிக்கும் படைப்புகள் இவருடையவை. மனதின் தனிமொழி, பிரவாகம்கொள்ளும் எழுத்து. மிகமிகத் தனித்துவமான படைப்பு மேதை. இவரின் தன்மையிலான ஒரு படைப்பாளி, அதற்கு முன்னும் இருந்ததில்லை; பின்னும் வந்ததில்லை.
1975-ல் சுந்தர ராமசாமி ‘காகங்கள்’ இலக்கிய அமைப்பைத் தொடங்கினார். அதன் முதல் கூட்டம் அந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நாகர்கோவில் விடுதியொன்றின் விசாலமான அறையில் ஆரம்பமானது. காலையில் ஓர் அமர்வு, மதியம் ஓர் அமர்வு. காலை அமர்வில் வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ சிறுகதைத் தொகுப்பு பற்றி நான் கட்டுரை வாசித்தேன். மதியம் சுந்தர ராமசாமியின் ‘நடுநிசி நாய்கள்’ கவிதைத் தொகுப்பு பற்றி ந.முத்துசாமி அனுப்பிவைத்திருந்த கட்டுரையை உமாபதி வாசித்தார். இந்தக் கூட்டத்துக்குத் திருவனந்தபுரத்திலிருந்து நகுலன், நீல.பத்மநாபன், ஆ.மாதவன், ஷண்முக சுப்பையா வந்திருந்தனர். நகுலனின் எழுத்துகள் மீது நான் தனிக் கிறக்கம் கொண்டிருந்த காலமது. அதுவரை வெளிவந்திருந்த அவருடைய ‘நிழல்கள்’, ‘நினைவுப்பாதை’, ‘நாய்கள்’ ஆகிய நாவல்களையும் அவர் வெளியிட்ட, இன்றளவும் ஒரு லட்சியத் தொகுப்பாக நான் கருதும் ‘குருக்ஷேத்திரம்’ நூலையும், அதில் இடம்பெற்றிருந்த அவருடைய ‘ரோகிகள்’ குறுநாவலையும், சிறுபத்திரிகைகளில் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருந்த அவருடைய கவிதைகளையும் வாசித்திருந்தேன்.
சுந்தர ராமசாமியின் ‘நடுநிசி நாய்கள்’ கவிதைத் தொகுப்பு பற்றிய முத்துசாமியின் கட்டுரை வாசித்து முடிக்கப்பட்டவுடன் தொடங்கிய கலந்துரையாடலின்போது நகுலன் சொன்னார்: “கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ நெடுங்கவிதை பற்றி, திருவனந்தபுரத்தில் நாங்கள் கூடி விவாதித்தோம். அந்த விவாதத்தில் பேசப்பட்டவற்றை நான் தொகுத்து எழுதுவதென முடிவெடுத்தோம். அந்த சமயத்தில்தான், ‘சுயம்வரம்’ பற்றி ‘விழிகள்’ இதழில் உங்களுடைய கட்டுரையைப் பார்த்தோம். மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் பேசியதைத் தொகுத்து நான் எழுதியிருந்தால் அது எனக்கும் புரிந்திருக்காது, படிப்பவர்களுக்கும் புரிந்திருக்காது” என்று சிரித்தபடியே சொன்னார். அப்போது எனக்கு வயது 23. அந்த இளம்வயதில் அது, கூச்சம், மகிழ்ச்சி, எக்களிப்பு என்றான உணர்ச்சிக் கலவைக்கு என்னை ஆளாக்கியது.
கூட்டம் முடிந்ததும் மாலை நகுலன் என்னிடம், “நீங்கள் எங்களோடு திருவனந்தபுரம் வர முடியுமா?” என்று கேட்டார். அது எனக்கு வியப்பூட்டியது. நான் சுந்தர ராமசாமியிடம் சொல்லிவிட்டு அவர்களோடு திருவனந்தபுரம் சென்றேன். அன்று முன்னிரவிலிருந்து அநேகமாக இரவு 11 மணி வரை நீல.பத்மநாபனின் வீட்டில் உரையாடல் தொடர்ந்தது. பெரும்பாலும் நகுலன்தான் முன்னெடுத்தார். அவை பெரும்பாலும் அன்றைய இலக்கிய அபிப்ராயங்கள், சச்சரவுகள் பற்றியவை. நானும் என் அபிப்ராயங்களைத் தயக்கமின்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.
மற்றவர்கள் பிரிந்து சென்ற பிறகு, அன்றிரவு நீல.பத்மநாபனின் வீட்டில் தங்கினேன். மறுநாள் காலை தன்னுடைய அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன்பாக, நீல.பத்மநாபன் என்னை நகுலன் வீட்டில் விட்டுச்சென்றார். நான் எங்கும் தங்கும் முகாந்திரத்துடன் சென்றிருக்கவில்லை. காலையில் சிறிது நேரம் நகுலனிடம் உரையாடிவிட்டு மதுரை திரும்பினேன். தனித்த உரையாடலில் நகுலன் வெகு பாந்தமாக, வெவ்வேறு திசைகளில் பயணிப்பவராக இருந்தார். கல்விப் புலத்தில் நவீன இலக்கியம் சார்ந்த உதாசீனம் குறித்த கவலையை வெளிப்படுத்தினார். பழந்தமிழ் இலக்கியத்திலும்கூட தமிழ்ப் பேராசிரியர்களின் அறிவு இலக்கியத்துவமற்றதாக இருப்பது குறித்த ஆதங்கம் வெளிப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாகக் க.நா.சுப்பிரமணியத்திடம் அவர் கொண்டிருந்த அபார மதிப்பு வெளிப்பட்டபடி இருந்தது. க.நா.சு.வைப் பின்தொடர்வதுதான் மீட்சிக்கான பாதை என்பதாக அவருடைய எண்ணம் இருந்தது.
அதன் பிறகு, நகுலனுடன் கடிதத் தொடர்பு இருந்துகொண்டிருந்தது. அந்த ஆண்டில் மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எம்ஏ முடித்துவிட்டு அங்கேயே ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். ‘தமிழ் நாவலின் போக்குகள்’ பற்றியது என் ஆய்வு. ஆய்வு மாணவர்களுக்கான கருத்தரங்கில் நகுலனின் நாவல்கள் பற்றிய கட்டுரை வாசிக்க முடிவெடுத்தேன். 1976-ம் ஆண்டு அது. அதுவரை வெளிவந்திருந்த, ‘நிழல்கள்’, ‘நினைவுப் பாதை’, ‘நாய்கள்’ ஆகிய நாவல்களின் அடிப்படையில் நகுலனின் படைப்புலகை அணுக முனைந்தேன். அதுபற்றிக் குறிப்பிட்டு, ‘வேறு நாவல்கள் இருக்கிறதா?’ என்று அவருக்குக் கடிதத்தில் கேட்டிருந்தேன். அவர் ‘அந்த மஞ்சள் நிறப் பூனை’ என்ற நாவலின் கையெழுத்துப் பிரதியை அனுப்பினார். அதுதான் அவருடைய முதல் நாவல் என்றும், அது இதுவரை புத்தகமாகவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய நாவல்கள் பற்றி அப்போது நான் எழுதிய கட்டுரை திருப்திகரமாக அமையவில்லை. அதனால், அதை வாசிக்க விரும்பிப் பலமுறை கேட்டும் அவருக்கு நான் அனுப்பவில்லை.
திரை உலக மேதை இங்மெர் பெர்க்மன், ரஷ்யத் திரைக் கலைஞன் ஆந்ராய் தார்க்கோவ்ஸ்கி பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான் மனித மன உலகில் பிரவேசிப்பதற்காக அதன் கதவுகளைத் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கிறேன். அந்தத் தட்டல் சத்தங்கள்தான் என்னுடைய திரைப்படங்கள். ஆனால், தார்க்கோவ்ஸ்கிக்கு மனித மனக் கதவுகள் தாமாகத் திறந்து வழி விடுகின்றன. அவர் அநாயாசமாக உள்ளே புகுந்து சஞ்சரிக்கிறார்.” நகுலன், தன் மனக் கதவுகளைத் தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருக்கிறார். அவருடைய கலை மனதின் இந்த இடையறா பிரயாசைகளில் எழும் சப்தங்களின் அதிர்வுகள்தான் அவருடைய படைப்புகள்.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com