Published : 11 Aug 2019 09:21 AM
Last Updated : 11 Aug 2019 09:21 AM

புத்தகம் குறித்து எழுத்தாளர்களுடன் பேசினால் குழப்பிவிடுவார்கள்!- சந்தோஷ் நாராயணன் பேட்டி

படம்: ஷிவ கிருஷ்ணா

த.ராஜன்

தமிழ்நாட்டில் இப்போது புத்தக அட்டைப்பட வடிவமைப்பில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்தான்.
ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இவரது கற்பனைத் தீனிக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. இவரது அட்டைப்படமே தனியே ஒரு கதை பேசும். ஒரு ஓவியராகப் பயணத்தைத் தொடங்கி, பிறகு வடிவமைப்பாளராக பிரமாதப்படுத்தி, இப்போது எழுத்தாளராகவும் உருமாறியிருக்கும் சந்தோஷ் நாராயணனுடன் உரையாடியதிலிருந்து...

புத்தக வடிவமைப்புக்குள் வர வேண்டுமென எப்போது முடிவெடுத்தீர்கள்?

நான் சென்னை ஓவியக் கல்லூரி முடித்த காலத்தில் பெரும்பாலான ஓவிய மாணவர்கள் அனிமேஷன் துறைக்குச் சென்றார்கள். எனக்கு அதில் ஒவ்வாமை இருந்தது. எனது மாமா சுஜித் வழியாக அறிமுகமான இலக்கிய வாசிப்பானது புத்தக அட்டை வடிவமைப்பு மீது ஈர்ப்பை உருவாக்கியது. நான் புத்தக அட்டை வடிவமைப்பின் பக்கம் திரும்பியதற்கு மருது, ஆர்.பி.பாஸ்கரன், ஆதிமூலம் போன்றவர்களின் புத்தக அட்டை ஓவியங்களுக்கும் முக்கியமான பங்கிருக்கிறது.

ஒரு புத்தக அட்டைப்பட உருவாக்கத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரைவு வரையிலான உங்களது முன்தயாரிப்புகள், செயல்முறைகள் என்னென்ன?

முடிந்த வரை புத்தகத்தை முழுமையாகப் படிக்க முயல்வேன். குறைந்தபட்சமாக, புத்தகத்தைப் பற்றிய குறிப்புகளையாவது வாசித்துக்கொள்வேன். தேவைப்பட்டால எழுத்தாளருடன் ஒரு விவாதம். ஏதோ ஒருவகையில் புத்தகத்தின் உள்ளடக்கத்தை உள்வாங்கிக்கொள்வேன். பிறகு, அந்த உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அட்டையில் என்ன விஷுவலைக் கொண்டுவருவது என்று கற்பனையில் திளைக்கத் தொடங்கிவிடுவேன். ஐடியா கிடைத்த பிறகு அதை என்ன மாதிரியான பாணியில் (வெக்டார் ஆர்ட், கோட்டோவியம், போட்டோ மானிபுலேஷன், இத்தியாதி...) செய்வது என்பது அடுத்த கட்டம். இதையும் புத்தகத்தின் உள்ளடக்கம்தான் தீர்மானிக்கும்.

அட்டைப்பட உருவாக்கத்தில் எழுத்தாளருக்கும் உங்களுக்குமான உரையாடல் எப்படிப்பட்டது?

எழுத்தாளருக்கும் எனக்குமான உரையாடல் பெரும்பாலும் எழுத்து வழிதான். மிகக் குறைவாகவே எழுத் தாளர்களுடன் விவாதித்திருக்கிறேன். புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர்களுடன் ரொம்பவும் பேசக் கூடாது; பேசினால் குழப்பிவிடுவார்கள். ஏனென்றால், அவர்களுக்குச் சொல்ல நிறைய இருக்கும். எனக்கு இருப்பதோ ஒரே ஒரு பக்கம்தான்.

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வடிவமைக்கிறீர்கள். ஒரு புத்தகத்துக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வீர்கள்?

சில அட்டைகளின் விஷுவலை சில நொடிகளில் மனதில் உருவகித்துக்கொள்ள முடியும். சில நேரம் அது நீண்டுவிடவும் வாய்ப்புண்டு. பிறகு, தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாணிக்கு ஏற்ப நேரம் எடுக்கும். அரை மணி நேரத்திலும் ஒரு அட்டை வடிவமைப்பை முடித்திருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களாகியும் எனக்குத் திருப்தி இல்லாமல் இழுத்தடிப்பதும் நடக்கும்.

நீங்கள் இதுவரை வடிவமைத்ததில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் என்னென்ன?

அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் மீதும், நிறைய வண்ணங்களை வாரி இறைப்பதிலும் எனக்கு விருப்பமில்லை. ஏதாவது ஐடியா இருக்க வேண்டும், ஏதாவது சோதனை முயற்சிசெய்ய வேண்டும் என்று நினைப்பேன். பல வருடங்களுக்கு முன்பு ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘முச்சந்தி இலக்கியம்’ புத்தகத்துக்கு செய்த அட்டை எனக்கு மிகப் பிடித்தது. குஜிலி இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுப்புத்தகம் அது. அதன் அட்டையைக் குஜிலி இலக்கியங்களில் வரும் கோட்டோவியங்கள் போன்று செய்திருந்தேன். சமீபத்தில், அகரமுதல்வனின் புத்தகத்துக்கான அட்டையை வடிவமைக்க எனது ‘காமஃப்லாஜ்’ கால்சட்டையைக் கிழித்து, ஒரு பார்பி பொம்மையை உடைத்து ஒரு இன்ஸ்டல்லேஷன் ஆர்ட் செய்தேன். மனித உடல்கள் மீதான ராணுவ வன்முறையைச் சொல்லும் உள்ளடக்கம் கொண்ட கதைகள் அவை. இப்படி சோதனை மேல் சோதனைதான்.

அட்டைப்பட வடிவமைப்பில் வெற்றிடங்களையும் நிறங்களையும் எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?

பொதுவாக, மிகவும் மினிமலாகச் செய்வதுதான் எனது பாணி. ஆகவே, எனது அட்டைகளில் பெரும்பாலும் வெற்றிடங்கள்தான். வெற்றிடம் நாம் சொல்லவரும் விஷயத்தில் பார்வையாளரின் கவனத்தைக் குவிக்கத் தேவையாக இருக்கிறது. முன்பெல்லாம் மிகவும் மங்கிய நிறங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்பேன். இப்போதெல்லாம் ‘பாப்’ ஓவியங்களில் வருவதுபோல கவர்ச்சியான பளிச் வண்ணங்களைப் பயன்படுத்துகிறேன். அதேநேரம், புத்தகத்தின் மனநிலைக்குத் தகுந்தாற்போல இருக்க வேண்டும் என்பதில் கவனம் எடுத்துக்கொள்வேன்.

உங்களது சில வடிவமைப்புகள் ஒரே பாணியில் இருப்பதாகத் தோன்றுகிறது...

நான் ஒரு சிறந்த ஓவியன் அல்ல; வடிவமைப்பாளர் மட்டுமே. ஆக, சில ஓவியர்களுக்கு இருப்பதைப் போல எனக்கென்று ஒரு பாணி இல்லை என்பதுதான் எனது நிறையும் குறையும். சில நேரம் வெக்டார் ஆர்ட். சில நேரம் புகைப்படக்கலவை, நீர்வண்ண ஓவியம், கோட்டோவியம். சமீபத்தில் ஒரு அட்டைக்கு திருநீறும் குங்குமமும் கொண்டு வரைந்த ஓவியத்தைப் பயன்படுத்தினேன். திருப்பூர் பின்னலாடை ஆலைகளைப் பின்னணியாகக் கொண்ட ஒரு நாவலுக்கு கட்டிங் துணிகளை ஸ்கேன்செய்து, அதை கொலாஜ்செய்து பயன்படுத்தினேன். ஆனால், இதையெல்லாம் மீறியும் எனக்கென்று ஒரு தனித்துவமான பாணி அட்டையில் வந்துவிடும். அது ஒரு கலைஞனின் அடையாளம்.

ஒரு புத்தக வடிவமைப்பாளராக உங்களை மகிழ்விக்கும் விஷயம் எது?

நம் கற்பனையைத் தூண்டும் உள்ளடக்கம் உள்ள புத்தகங்கள். அதற்குக் கச்சிதமாக வந்து விழும் கற்பனைகள். பிறகு, அதைப் புத்தகமாகக் கையில் தொட்டு உணர்வது.

உங்கள் வேலையில் நீங்கள் மிகவும் விரும்பும் அம்சமும், வெறுக்கும் அம்சமும் என்னென்ன?

அட்டை வடிவமைப்பது மட்டும் அல்ல. லோகோ டிசைன்கள், விளம்பர வடிவமைப்புகளையும் செய்கிறேன். எதுவாக இருந்தாலும் ஒரு காட்சியைக் கற்பனை செய்வதற்கும் அதை வடிவமைப்பில் கொண்டுவந்து உருவம் கொடுப்பதற்கும் இடையில் நடக்கும் படைப்பின்பம்தான் எனது வேலையில் நான் விரும்பும் அம்சம். பயனாளிகளின் தேவையற்ற குறுக்கீடுகளை வெறுக்கிறேன். அப்படி குறுக்கிடுவதால் அவருக்கோ எனக்கோ படைப்புக்கோ எந்த பயனுமில்லை என்பதுதான் எனது அனுபவம்.

மற்ற வடிவமைப்பாளர்களில் யார் உங்கள் மனம் கவர்ந்தவர்கள்?

சமீபத்தில், மணிவண்ணன். சிறந்த ஓவியர். அவரது வடிவமைப்புகளெல்லாம் அட்டகாசமாக இருக்கும். வியந்துபார்ப்பேன். றஷ்மி, கலாநிதி, கதிர் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.

‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ புத்தகம் வாயிலாகப் புனைவு எழுத்தாளராகவும் உருமாறியிருக்கிறீர்கள். அது குறித்து?

அறிவியல் புனைவுக் குறும்படங்கள் போன்ற வடிவத்தில் எழுதப்பட்ட நூறு குறுங்கதைகளின் தொகுப்பு ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’. வழக்கமான அறிவியல் அருஞ்சொற்பொருட்களைக் கொண்டு விளையாடும் விஞ்ஞானக் கதைகளைப் போல அல்லாமல், அறிவியலைப் பின்னணியாக வைத்து அரசியல், வரலாறு, தொன்மங்கள், அதீத தொழில்நுட்பம், நுகர்வு வாழ்வின் அபத்தங்களைப் பேசும் குறுங்கதைகள். அதேநேரம், ஒரு இளம் காமிக்ஸ் வாசகர்கள்கூட சுவராசியமாகப் படிக்கும்வண்ணம் நான் வரைந்த நூறு படங்களுடன் வந்திருக்கிறது.

ஓவியர், வடிவமைப்பாளர், இப்போது எழுத்தாளர். அடுத்து என்ன?

ஓவியம், வடிவமைப்பு, எழுத்து, சினிமா என எல்லாமே ஏதோ ஒருவகையில் கதைசொல்லல்தான். அது காட்சியாக இருந்தாலும் சரி, மொழியாக இருந்தாலும் சரி. ஒரு ஓவியனாக இருப்பதால் என் எழுத்திலும் நான் சொல்வதைவிட காட்டவே விரும்புகிறேன். ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’கூட ஒரு வகையான ‘விஷுவல் டெக்ஸ்ட்’தான். எழுத்தும் ஓவியமும் இணையாகப் பயணிக்கும் துறை என காமிக்ஸ், சினிமா போன்றவற்றைச் சொல்லலாம். அதையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும்.

- த.ராஜன்,
தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x