

ஜூலை 26 - மு.கு.ஜகந்நாத ராஜா பிறந்தநாள்
‘முன்னத்தி ஏர்' என எவருமில்லாச் சூழலில் பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று, இலக்கியங்களில் தோய்ந்து, தமிழ் இலக்கியம் மற்றும் தத்துவத் தளங்களில் தனி முத்திரை பதித்தவர் ‘பன்மொழிப் புலவர்' மு.கு.ஜகந்நாத ராஜா. இந்தியத் தத்துவச் செழுமையில் தோய்ந்த இவர் பாலி மொழியிலிருந்து மூன்று பவுத்தத் தத்துவ நூல்களைத் தமிழ்ப்படுத்தினார். பாலி மொழியிலுள்ள பவுத்த மறைகள், புத்தரின் உயரிய சிந்தனைகளை உபநிடதங்களுக்கே உரிய நடையில் உணர்த்துகிறது இவருடைய ‘தீக நிகாயம்' நூல். கிருஷ்ணதேவராயர் ஆண்டாளின் வரலாற்றை வைத்து இயற்றிய ‘ஆமுக்த மால்யத’ (சூடிக்கொடுத்தவள்) தெலுங்குக் காவியத்தைத் தமிழாக்கியது இவரது பெரும் பணிகளில் ஒன்று. 1990-ல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது இதற்குக் கிடைத்தது. தமிழுக்கான இவருடைய நேரடிப் பங்களிப்பு, ஒரு வசன கவிதையும், மூன்று காவியங்களும், பனிரெண்டு பிற நூல்களுமாகும். தமிழின் நவீன இலக்கிய வட்டத்தினர் இவருடைய படைப்பாற்றலின் செறிவை முழுதுமாய் அறிந்திருக்கவில்லை என்பது ஒரு துயரமே.
பெயர் சொல்லும் பணிகள்
தமிழ் இலக்கிய வளத்தைப் பிற மொழியினர் உய்த்துணர மொழிபெயர்ப்புக் கலையின் பங்களிப்பு முதன்மையானது. சுவை மிகுந்த முத்தொள்ளாயிரப் பாடல்களைப் பன்மொழிப் புலவர் மலையாளத்தில் ‘முத்தொள்ளாயிரம்', கன்னடத்தில் ‘முக்தஹரா', தெலுங்கில் ‘முத்யாளஹாரம்' என்ற பெயர்களில் மொழியாக்கம் செய்தார். தேர்வு செய்யப்பட்ட சங்க அக இலக்கியப் பாடல்களை இவர் ‘தமிழ் காவ்யாம்ருதம்' எனவும், புறநானூற்றை ‘வெளி நானூறு' எனவும் தெலுங்கில் வெளியிட்டது பெரிதாகப் பேசப்பட்டது. அகத்துறைப் பாடலான ‘எழுநூறு காதைகள்' எனப்படும் ‘காதா சப்த சதி'-யையும், ஜயவல்லபனின் ‘வஜ்ஜலாக்கம்' நூலையும் பிராகிருதத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தது இவருடைய பெயரை நிலைநிறுத்தும் பெரும் பணியாகும்.
“வேத கால வடமொழியானது மூல திராவிட மொழியின் செல்வாக்கால் பிராகிருதம் என்ற மக்கள் மொழியாகத் திரிந்தது. மக்கள் மொழியாகத் திரிந்த மொழி என பிராகிருதத்தைச் சொன்னால், நூல் வழக்கில் நிலைநிறுத்தப்பட மொழி சமஸ்கிருதம் எனலாம். முன்பே செய்யப்பட்டது பிராகிருதம். செம்மை ஆக்கப்பட்டது சமஸ்கிருதம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பவுத்த மத வழக்கியல் மொழியாகத் திகழ்ந்த பிராகிருத மொழிக்குப் ‘பாலி' என்று பெயர். வடமொழி என்கிற சமஸ்கிருதம், பாகதம் என்கிற பிராகிருதம், திராவிடம் என்கிற தமிழ் ஆகிய முப்பெரும் மொழிகளின் கலப்பில்லாத ஒரு தனி மொழி இந்தியாவில் இல்லை . . . சமஸ்கிருதம் என்கிற கங்கையும், பிராகிருதம் என்கிற யமுனையும், திராவிடம் என்கிற சரஸ்வதியும் திரிவேணியாகக் கலந்து பாய்ந்து பாரதப் பண்பாட்டை வளர்த்துள்ளது” என்பது பன்மொழிப் புலவரின் பார்வை.
அபூர்வ நூலகம்
ஜகன்னாத ராஜா, பத்தாயிரம் நூல்களைக் கொண்ட அபூர்வ நூலகம் ஒன்றைத் தன் இல்லத்தி லேயே அமைத்துள்ளார். அவருடைய மருமகனும் பேராசிரியருமாகிய கே.ஜி.ராதாகிருஷ்ணனின் நெறியாள்கையில் ‘ஜகந்நாத ராஜா இலக்கிய, தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை’ (J.R.L.R. Trust) பெரும் நிதிச் சுமைகளுக்கு இடையில் நூலகத்தைப் பராமரித்து வருகிறது.
மு.கு.ஜ-வின் நூல்களுள் தலையாயது எனக் கருதப்படுவது- ‘வடமொழி வளத்திற்கு தமிழரின் பங்கு'. பிராகிருத மொழியின் அகத்துறைப் பேரிலக்கியம் 503 பாடல்களால் ஆன ‘காதா சப்த சதி'யை தமிழ்ச்சங்க இலக்கியங்களுடன் இணைகூறத் தக்க ஒரே ஒரு பிறமொழி இலக்கியம் என மதிப்பீடு செய்யும் மு.க.ஜ, ஒரு முக்கியமான கருத்தைப் பதிவுசெய்கிறார்.
“சங்க அக இலக்கியத்தின் சம காலத்தே எழுந்த பிராகிருத மொழியிலுள்ள ‘காதா சப்த சதி' என்னும் சிறந்த அக இலக்கியத்தோடு ஒப்பிட்டால் ஓர் உண்மை தெரிகிறது. வடமொழி நூல் மரபில் ஸ்வதீயா (குல மகளிர்); பரகீயா (பிறரை நாடுபவள்); சமான்யா (பரத்தை) என மூவகைப் பெண்டிரைக் காண முடியும். வடமொழி இதிகாச புராணங்களிலும், ‘காதா சப்த சதி'யிலும் தன் கணவனையன்றிப் பிற ஆடவருடன் காதல் உறவு கொள்ளும் பெண்கள் பற்றிய வருணனைகள் உண்டு. இந்த மனிதகுலத்து நடப்புக்கு தமிழ்ச்சா தியும் விதி விலக்கன்று. ஆனால், தமிழ் அக இலக்கியத்தில் பரகீயா வகைப் பெண்ணைச் சுட்டும் ஒரு பாடல் கூட இல்லை” என்கிறார் மு.கு.ஜ.
மணிமேகலைக் காப்பியத்தில் வரும் பசிப்பிணி தீர்த்தல், பவுத்த மத தர்க்கங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட மு.கு.ஜ. தன் மகளுக்கும் மணிமேகலை என்று பெயரிட்டார். 1958-ம் ஆண்டு ‘மணிமேகலை மன்றம்' என்கிற இலக்கிய அமைப்பைத் தொடங்கினார். மணிமேகலைக் காப்பியத்தில் வரும் பாத்திரமான ஆபுத்திரன் பெயரில் பன்மொழிப் புலவர் ‘ஆபுத்திர காவியம்' எனும் காப்பியத்தை யாத்திருக்கிறார். விவாதங்களில் ஈடுபடுவதைப் பெருமளவு தவிர்க்கும் இவர் கடவுள் மறுப்புக் கோட்பாட்டைத் தனக்குள்ளே கனியச் செய்து அவற்றை ஆபுத்திரன் பாத்திர வாயிலாக வெளிப்படுத்துகிறார்.
‘உடலினைத் தவிர்த்து உயிர்தனித் திலையெனும்
அறிவுடன் வாழ்க்கையை அன்புடன் இன்பாய்
பொலியும் வகையில் புத்தியின் துணையுடன்
வாழ்தல் வேண்டும் தாழ்வற வேண்டும்
தானே எதற்கும் தலைவன் மற்ற
சுவர்க்கமும் நரகமும் சுத்தப் பொய்யே.
அறம் பொருள் இன்பம் அடைதல் வேண்டும்
வீடெனும் பொய்ம்மை வீடல் வேண்டும்
காணற் கியலா கடவுளை நம்பி
காணும் உலகில் இன்பங் களைந்து
ஏமாந்திடுதல் எளியவர் செயலாம்'
தனது கையில் அமுத சுரபியிருந்தும் சாவகத் தீவினர் பசி நீக்க முடியாமல் போனதால் பட்டினி கிடந்து உயிர் நீத்தவன் ஆபுத்திரன்.
நூல் வடிவம் பெறாதவை
‘தமிழக - ஆந்திர வைணவத் தொடர்புகள்' - ‘இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம்' - ‘தமிழும் பிராகிருதமும்' ஆகியன நூல் வடிவில் வெளி வந்து வரவேற்பைப் பெற்றன. நூல் வடிவம் பெறாத இவருடைய கட்டுரைகள் இன்னும் ஒரு நூறு இருக்கலாம்.
அக்டோபர் 97-ல் இலக்கிய பீடம் இதழில் இவர் எழுதிய ‘தமிழில் தத்துவ நூல்கள்'; எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரில் இடம்பெற்ற ‘பிற மொழி இலக்கியங்களில் தமிழகம்'; ஆகிய கட்டுரைகள் மு.கு.ஜ.வின் உழைப்பையும், தத்துவ விசாலத்தையும் எடுத்தியம்புகின்றன. இரண்டாவதாகச் சொன்ன கட்டுரையின் நிறைவுப் பகுதியில் மு.கு.ஜ. சொல்கிறார். “மலையாள முதல் காவியம் இராம சரிதப் பாட்டு. இதன் ஆசிரியர் ‘தமிழ் செய்தேன்' என்றே குறிப்பிடுகிறார்.”
மேடைகளில் எடுபடாத மென்மைக் குரலும், தானே தன்னை முன்னிலைப்படுத்துவதில் அசூயையும், படைப்பாளிகளின் உள்குத்து அரசியலில் அணிசேராமையும், இவருக்குரிய ஒளி வட்டத்தில் நிழல்கவியச் செய்தன. எனினும், இவர் அறிந்த பல்வேறு மொழிகளின் தவசீலர்களும் அருட்கவிகளும் இவருக்கு அருளிய சாந்த சீலம் இவரை மேன்மைப்படுத்தியது.