Published : 04 Aug 2019 09:56 AM
Last Updated : 04 Aug 2019 09:56 AM

சீலே: குளிர்ந்த நீரில் ஸ்பானியக் குளியல்

சாரு நிவேதிதா

சீலேயின் சாலைகளைப் பார்த்தால் அது மூன்றாம் உலக நாட்டைப்போலவே தெரியவில்லை. ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டைப் போலவேதான் இருந்தது. சாலை எத்தனை அகலமாக இருந்ததோ அதைவிட இரண்டு மடங்கு அகலத்துக்கு நடைபாதை. பிரதான சாலை என்றால், நம் அண்ணா சாலையைப் போல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கிறது. கிராமங்களில்கூட சாலைகள் மிக நேர்த்தியாக இருந்தன. சந்தியாகோ நகரின் மெட்ரோ ரயில்பாதைகள் பாரிஸ் நகர் மெட்ரோவை எனக்கு ஞாபகப்படுத்தின. மழை பெய்தால் சாலைகளில் நீர் தேங்கவில்லை. சாக்கடை இல்லை. பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியவில்லை. எங்குமே வறுமை கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனாலும், சீலே ஒரு மூன்றாம் உலக நாடுதான் என்பதற்குப் பல அடிப்படை யதார்த்தங்கள் இருந்தன.

பெரும்பாலான சீலேயர்கள் புகைக்கிறார்கள். சிகரெட் துண்டுகளை அப்படி அப்படியே சாலையில் போட்டுவிடுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் அது சாத்தியம் இல்லை. அபராதம் உண்டு. பூஜ்யம் டிகிரி குளிரில் எந்த இடத்திலும் வெந்நீர் இல்லை. விரல் நரம்புகள் வலிக்கும் அளவில் குளிர்ந்த நீரில்தான் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஷவரில்கூட சமயங்களில் ஐஸ் மாதிரி தண்ணீர் வந்தது. நான் தங்கியிருந்தது மிகப் பெரிய விடுதி என்றாலும் அறையில் ஹீட்டர் இல்லை. ஓட்டல் நிர்வாகத்திடம் சொன்னால் யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. அதை விடுங்கள். விமான நிலையத்தில் உள்ள இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கே ஆங்கிலம் தெரியவில்லை. போலீஸுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. பயண வழிகாட்டிகளைத் தவிர, வேறு யாருக்குமே ஆங்கிலம் தெரியவில்லை. அப்போதுதான் எனக்கு சீலேயின் கல்வித் துறையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது.

லத்தீன் அமெரிக்காவிலேயே சிறந்த கல்விமுறை சீலேயில்தான் என்கிறது புள்ளிவிவரம். மக்களில் 96% பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். இது ஒருசில ஐரோப்பிய நாடுகளே சாதித்திராதது. ஆனால், சீலேயின் கல்வித் தரம் மிக மோசமாக இருக்கிறது. கல்விமுறையும் இந்தியாவைவிட மோசம். இதுதான் லத்தீன் அமெரிக்காவின் சிறப்பான கல்விமுறை என்றால் கொலம்பியா, மெக்ஸிகோ, வெனிசுவலே போன்ற மற்ற நாடுகளின் கல்வித்தரத்தைப் பற்றி நாம் ஊகித்துக்கொள்ளலாம். இந்தியாவில் ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்று இருக்கிறதல்லவா? இத்தனை இடஒதுக்கீடு இருந்தும் இங்கே குப்பை அள்ளும் ஒரு தொழிலாளியின் பிள்ளை ஐஐடியில் படிக்கும் வாய்ப்பு அபூர்வம்தானே? இந்த வித்தியாசம் சீலேயில் மிகவும் அதிகம்.

உயர்நிலைப் பள்ளி வரை கல்வி இலவசம். ஆனால், தரம் மிகக் கீழே இருக்கிறது. ஒரு சமூகத்தில் மொழி அறிவு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுதான் அந்தச் சமூகத்தை மதிப்பீடு செய்ய முடியும். சீலேவில் ஒரு வாரத்தில் ஒரு மணி நேரம்தான் ஆங்கிலம் கற்பிக்கிறார்கள். அதனால், பன்னிரண்டு ஆண்டுகள் படித்துவிட்டு, வெறுமனே ‘ஏபிசிடி’ மட்டும் கற்றுக்கொண்டு வருகிறார்கள். எண்களுக்குக்கூட ஆங்கிலம் தெரியாததால், ஒரு விமான நிலைய அதிகாரியிடம் “நான் எந்தத் தளத்துக்குப் போக வேண்டும்?” என்று கேட்டால் “ஸிங்க்கோ” என்கிறார். ஸ்பானிஷ் தெரியாமல் ஒன்றுமே நடக்காது; எனக்கு ஓரளவு ஸ்பானிஷ் புரிந்துகொள்ள முடியும் என்பதால், என்னால் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது.

பல்கலைக்கழகம், கல்லூரி வாசல்களில் பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அங்கே குழுமியிருந்த மாணவர் தலைவர்கள் சிலரிடம் மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு பேசினேன். “மத்தியதர வர்க்கத்தினரால்கூட உயர் கல்வியைப் பெற முடியவில்லை. பெற்றோரின் அத்தனை சம்பளமும் கல்விக் கட்டணத்துக்கே செலவாகிறது. அதனால், அரசாங்கம் அப்படிப்பட்ட பெற்றோருக்குப் பண உதவி செய்கிறது. இதன் விளைவு என்னாகும் என்றால், கல்வி ஒரு சந்தைப் பொருளாக மாறும். கல்வி நிலையங்களின் முதலாளிகள் மேலும் பணக்காரர்கள் ஆவார்களே தவிர, உண்மையான ஏழை மாணவர்களால் தரமான கல்வியைப் பெற முடியாமல் போகும்” என்றார்.

மேட்டுக்குடியினரின் கல்வி, நாம் கற்பனையும் செய்ய முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். சந்தியாகோ நகரின் மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதியைப் பார்க்க நினைத்து வழிகாட்டி ரொபர்த்தோவிடம் சொன்னேன். அழைப்பிதழ் இல்லாமல் அந்தக் குடியிருப்புப் பகுதிக்கே செல்ல முடியாது என்றார். ஏதாவது ஒரு வீட்டிலிருந்து அழைப்பு இருந்தாக வேண்டும். மேட்டுக்குடியினரின் கல்வி நிலையங்களை நம் ஊர் மாதிரி உயர் நடுத்தர வர்க்கத்தினர்கூட பயன்படுத்த முடியாது. அவ்வளவு செலவு. பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே அந்தக் கல்வியைத் தம் பிள்ளைகளுக்குத் தர முடியும். இதனால் கல்வியில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது.

இப்போதைய சீலே அதிபர் செபஸ்தியான் பிஞேரா (70) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது முன்னோர்களில் சிலர், சீலேயின் அதிபராக இருந்துள்ளனர். தந்தை அமெரிக்காவில் சீலே தூதராக இருந்தவர். சீலேயின் மிகப் பெரிய பணக்காரர் பிஞேரா. விமான நிறுவனம், தொலைக்காட்சி நிறுவனம், தேசத்தின் மிகப் பெரிய வங்கி போன்றவற்றின் சொந்தக்காரர். இவரது முன்னோரில் ஒருவர் இன்கா பேரரசராக இருந்தவர். அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்பைவிடப் பணக்காரர்.

பல நாடுகளில் இப்போது வலதுசாரி, மதவாத, இனவாத அரசியல் அலை அடித்துக்கொண்டிருக்கிறது. அதன் சீலே வாரிசுதான் பிஞேரா. சீலேயின் ட்ரம்ப். சீலேயின் மோடி. இடதுசாரிகள் செல்வாக்கு மிக்க நாடு இது. இருந்தும் சீலேயில் பிஞேரா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம், இடதுசாரிகளால் பொருளாதார வீழ்ச்சியைச் சரிசெய்ய முடியவில்லை. பிஞேரா ஏற்கெனவே 2010-14 காலகட்டத்தில் அதிபராக இருந்திருக்கிறார். பிஞேரா வலதுசாரியாக இருந்தாலும் சீலேயின் பொருளாதார வீழ்ச்சியைக் கொஞ்சமாவது சரிசெய்வார் என்று சராசரி மனிதர்கள் நம்புவதால்தான் அவர் மீண்டும் அதிபராகியிருக்கிறார். அவரை எதிர்த்த இடதுசாரிப் பத்திரிகையாளர் அலஹாந்த்ரோ குய்யர் யாருமே எதிர்பாராத விதத்தில் தோற்றுவிட்டார். குய்யர் தோற்றதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்: ஒன்று, இடதுசாரிகளுக்குள் ஒற்றுமை இல்லை (அதிபர் தேர்தலுக்கு நான்கு வேட்பாளர்களை நிறுத்தின இடதுசாரிக் கட்சிகள்); இரண்டு, பெருவாரியான மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தில் சிறிதளவு முன்னேற்றத்தையாவது எதிர்பார்க்கிறார்கள்.

இடதுசாரிகளின் கோட்டையான சீலேயில் பெருவாரி மக்களால் விரும்பப்படாத வலதுசாரியான பிஞேரா தேர்தலில் வென்றதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இளைஞர்களின் அரசியலற்றதன்மை: 18 வயதிலிருந்து 24 வயதுள்ள இளைஞர் கூட்டத்தில் 80% பேர் வாக்கே அளிக்கவில்லை என்கிற அளவுக்கு அரசியலற்றதன்மை இளைஞர்களைப் பீடித்திருக்கிறது. இது பிஞேராவுக்கு மிகவும் சாதகமாகப் போயிற்று.

பல விஷயங்களிலும் சீலேவையும் இந்தியாவையும் ஒப்பிட்டுப்பார்த்தபடி நகர்ந்தேன். இரண்டு விஷயங்களில் சீலே லத்தீன் அமெரிக்காவிலேயே முதன்மை இடத்தில் விளங்குகிறது. சீலேயில் மருத்துவர்களையே பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு மக்கள் நோய் நொடி குறைந்தவர்களாக வாழ்கிறார்கள். மற்றொன்று, காந்தி கனவு கண்ட சமூகத்தைப் போல் நள்ளிரவில்கூடப் பெண்களும் ஆண்களும் எந்தப் பயமும் இன்றி நடமாடுகிறார்கள். இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் சீலேயர்கள் மிகவும் பெருமை கொள்கிறார்கள்!

- சாரு நிவேதிதா, ‘ஸீரோ டிகிரி’, ‘ராஸ லீலா’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x