Published : 27 Jul 2019 09:39 AM
Last Updated : 27 Jul 2019 09:39 AM

360: உரைநடையில் வெண்பா..

உரைநடையில் வெண்பா...

பதிப்பாளர் ‘சாளரம்’ வைகறைவாணன் தமிழ் படித்த புலவரும்கூட. திருவையாறு அரசர் கல்லூரியில் தி.வே.கோபாலய்யரிடம் தமிழ் பயின்றவர். மரபில் தோய்ந்தவர் என்றாலும் நவீன இலக்கியத்திலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். பூமணியின் நாவல்களையும் சிறுகதைகளையும் முழுத்தொகுப்புகளாக வெளியிட்டவர். இன்குலாப் முழுக் கவிதைத் தொகுப்பை முதலில் வெளியிட்டவரும் இவர்தான். மரபு, நவீனம் என்று இரண்டு வகைகளிலும் கவிதையெழுதுபவர் வைகறைவாணன். சமீபத்தில், அவரது உரைநடை வெண்பாத் தொகுப்பு ‘கொடை தருக, கோடி பெறுக’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. அதென்ன உரைநடையில் வெண்பா? வகையுளி இல்லாமல் தனிச்சொல் தவிர்த்து எழுதப்பட்ட இன்னிசை வெண்பாவுக்குத்தான் இப்படியொரு புதுப்பெயர் வைத்திருக்கிறார்.

ஈரோடு புத்தகக்காட்சி... இந்த முறை 12 நாட்கள்!

ஆகஸ்ட் மாதம் தொடங்கினாலே ஈரோட்டில் வாசகர்களுக்குத் திருவிழாக் காலம்தான்.  சென்னையை அடுத்து அதிகம் விற்பனையாகும் புத்தகக்காட்சி இது. மக்கள் சிந்தனைப் பேரவை ஆண்டுதோறும் நடத்திவரும் ஈரோடு புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 13-ம் வரைக்கும் 12 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.   மாலை நேரங்களில் தமிழின் முக்கிய ஆளுமைகள் சொற்பொழிவாற்ற இருக்கிறார்கள்.  ஆகஸ்ட் 8ம் தேதியை மகளிர் எழுச்சி தினமாகவும் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது மக்கள் சிந்தனைப் பேரவை.

உற்சாகம் களைகட்டும் தர்மபுரி புத்தகக்காட்சி 

பாரதி புத்தகாலயமும் தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து நடத்தும் தர்மபுரி புத்தகக்காட்சி ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 4 வரைக்கும் மதுராபாய் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. ‘இந்து தமிழ் திசை’ ஸ்டால் எண்: 50, 51

படைப்பாளிக்கு மரியாதை

சமீபத்தில் அகால மரணமடைந்த எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபாவின் குடும்பத்துக்கு நிதியுதவி செய்யுங்கள் என்று இலக்கிய நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து ஃபேஸ்புக்கில் வேண்டுகோள் முன்வைத்தனர். 11-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீபதியின் மகள் பாரதியின் படிப்புக்காகவும், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஸ்ரீபதி மனைவியின் மருத்துவச் செலவுக்கும் இந்த நிதியுதவி கோரப்பட்டது. இலக்கியவாதிகள், வாசகர்கள் என்று பல தரப்பினரும் நிதியுதவி தரவே, ரூ.4,42,000 சேர்ந்தது. கடந்த 13-ம் தேதி, கவிஞர் கரிகாலன், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், ஓவியர் சீனிவாசன், பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர் கேரளத்துக்குச் சென்று ஸ்ரீபதி குடும்பத்தினரிடம் அந்த நிதியைக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்கள். தமிழில் ஒரு படைப்பாளிக்குப் பொருளாதாரம் சார்ந்த எந்த உத்தரவாதமும் இல்லாத சூழலில் இது போன்ற செயல்பாடுகள் மிகுந்த ஆறுதலைத் தருகின்றன.

மீறல் இலக்கிய விருது

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மீறல் இலக்கியக் கழகமானது பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகளை அறிவித்துள்ளது. 2018-19-க்கான ஒளவை விருது கவிஞர் அ.வெண்ணிலாவுக்கும், கபிலர் விருது கவிஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கும், பாரி விருது கவிஞர் ஷாலின் மரிய லாரன்ஸுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடகத் திருவிழாவுக்குத் தயாராகும் சென்னை

தென்னிந்திய மக்கள் நாடக விழாவை சென்னை கேரள சமாஜத்துடன் இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் நடத்தவுள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலிருந்து சுமார் 20 நாடகக் குழுக்கள் நாடகங்களை நிகழ்த்தவிருக்கின்றன. சென்னை கேரள சமாஜம் அரங்கில் அக்டோபர் 2 முதல் 6 வரை நடைபெறவுள்ள இந்நாடக விழாவைக் கட்டணம் ஏதுமில்லாமல் கண்டுகளிக்கலாம்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x