

வேலூரில் 1929 செப்டம்பர் 7-ல் பிறந்த சார்வாகனின் இயற்பெயர் ஹரி ஸ்ரீனிவாசன். பள்ளிப் படிப்பை ஆரணியில் மேற்கொண்டார். வேலூரில் தாத்தா கிருஷ்ணய்யர் வீட்டில் இருந்த நூலகம், அவரது சிறுவயது வாசிப்புப் பழக்கத்துக்கு வித்திட்டிருக்கிறது. காந்திய நெறிகளிலும், இந்தியத் தத்துவ மரபிலும் தோய்ந்த குடும்பப் பின்புலம் இவரது. சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை மேற்கொண்டார். இக்காலகட்டத்தில் இவருக்கு கம்யூனிஸ இயக்கத்தோடும் மார்க்ஸிய சித்தாந்தத்தோடும் உறவும் பிடிப்பும் ஏற்பட்டது. பின்னாளில் இவர் ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தில் மருத்துவப் படிப்பையும் பணியையும் தொடர்ந்தபோது, இந்த ஈடுபாடு இன்னும் வலுப்பெற்றது. மார்க்ஸிய சித்தாந்த நூல்களில் அவரின் வாசிப்பு தீவிரமடைந்தது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகியிருக்கிறார். இவரது திருமணமும் லண்டனில்தான் நடைபெற்றது. இவரது மனைவி, இந்தியாவின் பிரசித்திபெற்ற சமூகவியல் மற்றும் மானுடவியல் மேதையான எம்.என்.ஸ்ரீனிவாஸின் தங்கை.
இங்கிலாந்தில் இரண்டு எஃப்ஆர்சிஎஸ் பட்டங்கள் பெற்ற பின்பும் மருத்துவ சேவையை இந்தியாவிலேயே மேற்கொள்ள அவர் மனம் விழைந்தது. அது அவரது இளம் வயதுத் தீர்மானமாகவும் இருந்தது. மருத்துவத்தை சேவையாக மட்டுமே கொள்ள வேண்டும் என்பதும் அவரது லட்சியமாக இருந்தது. 1960-ல் இந்தியா திரும்பி, மங்களூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பொறுப்பேற்றார். அங்கு அவர் முட நீக்கியல் வல்லுனராகப் பணியாற்றினார். ஆனால், காலமும் அவரது படைப்பூக்க மனமும் ஓர் அரிய, பெறுமதியான திசைக்கு அவரை அழைத்துச் சென்றது. அங்குதான் அவரது வாழ்வின் திசையை வடிவமைத்த அரிய நிகழ்வு அமைந்தது. தொழுநோய் மருத்துவ சிகிச்சை முறையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை அவர் கண்டடைந்தார்.
மங்களூரில் அவர் 1960-ல் முட நீக்கியல் வல்லுனராகப் பணியாற்றியபோது, ஒரு சக மருத்துவர் தொழுநோயிலிருந்து குணமடைந்த ஒருவரை அழைத்துவந்து மடங்கியிருக்கும் இவரது விரல்களை நேராக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். சார்வாகன் அந்த முயற்சியை மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறார். இங்கிலாந்தில் அவர் படிப்பு மேற்கொண்டிருந்த காலகட்டத்தில், இவ்வகை விரல் சீரமைப்பு அறுவைசிகிச்சையை மேற்கொண்டிருந்த ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் அக்கல்லூரியில் பணியாற்றியிருக்கிறார். அவரைத் தொடர்புகொண்டு அச்சிகிச்சை முறை பற்றிய தகவல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் பெற்றிருக்கிறார். இச்சிகிச்சை முறை ஒருவகையில் குறைபாடுடையதுதான். அதன் மூலம் விரல்களை நேராக்க முடியுமே தவிர, அவற்றை இயங்கவைக்க முடியாது. இந்தக் குறையைக் களைய வேண்டுமென விழைந்தார்.
எந்த ஒரு கண்டுபிடிப்புமே படைப்பூக்க மனதின் தீர்க்கமான பயணத்தில் அகப்படுவதுதான். அவர் வெற்றிகரமான ஒரு அறுவைசிகிச்சை முறையைக் கண்டுபிடித்தார். சிகிச்சை மேற்கொண்டார். தொழுநோயாளியின் விரல்கள் நேரானதோடு இயங்கவும் செய்தன. “அது மிகவும் சிக்கலான அம்சங்கள் ஒருங்கிணைந்த ஒரு அறுவைசிகிச்சை முறை. அது வெற்றிகரமாக அமைந்துவிட்டது பெரும் அதிர்ஷ்டம்தான். உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான தொழுநோயாளிகளின் வாழ்க்கையை இந்த அறுவைசிகிச்சை முறை மாற்றப்போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை” என்கிறார் அவர்.
அவரது இந்த அறுவைசிகிச்சை முறை மருத்துவ உலகில் அவரைப் பிரசித்தி பெறச் செய்தது. இந்த அறுவைசிகிச்சை முறைக்கு ‘ஸ்ரீனிவாசன் சிகிச்சை முறை’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டது. சமூகத்தால் அருவருப்பாக ஒதுக்கப்பட்ட தொழுநோயாளிகளை மீட்பதிலும், தொழுநோயை அழித்தொழிப்பதிலும் அவரது முழுக் கவனமும் திரும்பியது. செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனைக்குப் பணியாற்ற வந்தார். பின்னாளில் அதன் இயக்குநராக உயர்வடைந்து 1984-ல் ஓய்வுபெற்றார். 1984-ல் இந்திய அரசு, தொழுநோய் மருத்துவத்தில் இவரது லட்சியபூர்வப் பணிகளுக்காகவும் அரிய கண்டுபிடிப்புக்காகவும் பத்மஸ்ரீ விருது வழங்கியது.
காந்தியத்திலும் மார்க்ஸியத்திலும் இந்தியத் தத்துவ மரபிலும் தோய்ந்த ஓர் அழகிய, கனிந்த மனம், தொழுநோயாளிகள் மீது ஆழ்ந்த பரிவு கொண்டது தன்னியல்பானதுதான். அவரது ஆழ்ந்த பரிவும் அர்ப்பணிப்பும் மருத்துவ ஞானமும்தான் ஓர் அரிய கண்டுபிடிப்புக்கு இட்டுச்சென்றது. அந்த அறுவைசிகிச்சை முறையால் உலகெங்கும் குணமடைந்த எண்ணற்ற தொழுநோயாளிகளின் மலர்ச்சியில் அவரது வாழ்வு அர்த்தமும் பெருமிதமும் கொண்டிருக்கிறது. அவரது சிகிச்சை முறையால் பலன் பெற்றவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்திய தருணங்களை அவர் பெருமிதமாகப் போற்றுகிறார்.
பணி ஓய்வுக்குப் பின் அவர் ஓய்ந்துவிடவில்லை. உலகின் பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராக வகுப்புகள் எடுத்தார். உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ முகாம்களின் நெறியாளராகச் செயல்பட்டார். தனது எண்பதாவது வயதில்தான் முழு ஓய்வை மேற்கொண்டார். அதன் பிறகான கடைசி ஆண்டுகளைத் தன் இரு மகள்கள் வீட்டிலும் பெங்களூரிலும் சென்னையிலுமாக அமைத்துக்கொண்டார். நிறைவான, தீர்க்கமான, லட்சியபூர்வமான வாழ்க்கை இவருடையது.
இவர் அநேக மருத்துவக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அவை மருத்துவத் துறையில் பெரும் பொக்கிஷங்களாகப் போற்றப்பட்டிருக்கின்றன. அவர் ஒரு சித்திரக்காரரும்கூட. தனது மருத்துவக் கட்டுரைகளுக்கான விளக்கப் படங்களை அவரே வண்ணங்களில் வரைந்திருக்கிறார்.
மருத்துவத் துறையில் ஓர் அரிய கண்டுபிடிப்புக்கு அழைத்துச் சென்ற அவரது படைப்பூக்க மனதின் இன்னொரு வெளிப்பாடாக அமைந்ததுதான் அவரது புனைவுலகம். 1961-ல் அவர் செங்கல்பட்டு அரசு தொழுநோய் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியபோது, அவரது கலை இலக்கிய ஆர்வம் முதலில் கம்யூனிஸக் கலை இலக்கியவாதிகளுடனான அறிமுகத்தில்தான் தொடங்கியிருக்கிறது. ‘தாமரை’ இதழ் அவரது படைப்புகளுக்கான முதல் தளமாக அமைந்தது. பின்னர், அவருக்கான தளங்கள் விரிவடைந்தன. தி.க.சி.யில் தொடங்கிய கலை இலக்கிய உறவுகள் பின்னர், சி.சு.செல்லப்பா, நகுலன், க.நா.சு., வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி என விசாலமாகின. பின்னாளில் இயக்கம் சார்ந்த கம்யூனிஸத்தில் நாட்டமிழந்து, தன்னளவில் ஒரு மார்க்ஸியராகத் தன் வாழ்வையும் வாழ்நெறிகளையும் சிந்தனைகளையும் அமைத்துக்கொண்டிருந்தார்.
ஒரு மருத்துவராகவும் படைப்பாளியாகவும் அவர் வாழ்வை வழிநடத்தியது, மனிதர்கள் மீதான ஆழ்ந்த பரிவும் படைப்பூக்க மனமும்தான். இவ்விரு சக்திகளின் பேராற்றலோடு அமைந்த அவரது வாழ்வியக்கம் பெறுமதியான கொடைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. இரண்டிலுமே அவர் பெருமிதத்துக்குரிய ஆளுமையாக வெளிப்பட்டார். நாம்தான் அவரது அருமையை உணராதவர்களாக, நம் பெருமிதங்களை அறியாதவர்களாக, தம் பெருமை தாமறியாச் சமூகமாக இருந்துகொண்டிருக்கிறோம்.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com