ராஜேஷ்குமாரும் 50 ஆண்டுகளும்!

ராஜேஷ்குமாரும் 50 ஆண்டுகளும்!
Updated on
1 min read

கா.சு.வேலாயுதன்

1,500 நாவல்கள், 2,000 சிறுகதைகள் என எழுதிக் குவித்துவிட்ட க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத வந்து இன்றைக்கு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் கோவை ஒடிசி புத்தக மையமும், அமேசான் நிறுவனமும் ‘ஏ காஃபி வித் யுவர் ராஜேஷ்குமார்’ என்ற நிகழ்ச்சியைச் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. கோவை ப்ரூக் பீல்ட்ஸ் எதிரில் உள்ள சுபவீணா அரங்கில் நிகழ்ச்சி. 300-க்கும் மேற்பட்ட வாசகர்கள் திரண்டிருந்தனர். ‘‘எழுத வந்து ஐம்பதாண்டுகள் ஆன ராஜேஷ்குமாரின் கதைகளையும், நாவல்களை கணக்கிட்டுப்  பார்த்தால் குறைந்தபட்சம் சராசரியாக அவர் வாரம் ஒரு புத்தகத்தையாவது எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. இப்படித் தமிழில் மட்டுமல்ல உலகிலேயே எழுதிக் குவித்த எழுத்தாளர் யாரும் இருக்க முடியாது!’’ என்றார் வாழ்த்துரைத்த மருத்துவர் மோகன்பிரசாத். பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தன் பேச்சில், ‘‘இப்படி ஒரு எழுத்தாளர் உலகில் வேறு எந்த மூலையில் எழுதிக் குவித்திருந்தாலும் அவர்களை இந்த உலகமே கொண்டாடியிருக்கும். ஆனால், நாம்தான் நம்மவர்களைப் பாராட்டுவதில்கூடச் சுணக்கம் காட்டுகிறோம். இந்த நாட்டில் க்ரைம் உள்ளவரை ராஜேஷ்குமாருக்கும் கதை பஞ்சம் நேராது. அவர் க்ரைம் எழுதுவதைத் தவிர, மாதம் ஒரு படைப்பையாவது சமூக நோக்கில் எழுத வேண்டும்!’’ என்று வேண்டுகோள் வைத்தார்.

இதற்கு வாசகர் கலந்துரையாடலின்போது பதிலளித்த ராஜேஷ்குமார், தான் பல சமூகக் கதைகளையும், ஆன்மிக நூல்களையும் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். விழா முடிந்து அவரிடம் அது பற்றிப் பேசினேன். ‘‘நான் க்ரைம் தவிர்த்து எதை எழுதினாலும் மற்றவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. என்னிடம் கதை கேட்பவர்கள்கூட சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட படைப்புகளைச் சொன்னால், அது வேண்டாங்க ராஜேஷ்குமார், அத்தியாயத்துக்கு அத்தியாயம் ட்விஸ்ட் உள்ள க்ரைம் கதையா கொடுங்க... அதுதான் உங்க வாசகர்கள்கிட்ட எடுபடும்னு  சொல்றாங்க. அதையும் மீறித்தான் நான் சமூகம் பக்கம் அப்பப்ப எழுத வேண்டியிருக்கு!’’ என்றார்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in