Published : 20 Jul 2019 09:18 am

Updated : 20 Jul 2019 09:18 am

 

Published : 20 Jul 2019 09:18 AM
Last Updated : 20 Jul 2019 09:18 AM

தண்ணீர்: மனங்களின் பேரிடர்

asokamithran-thanneer

ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஒரு பொருள் எல்லாரும் பங்கிடும் அளவுக்கு இல்லாமல் போகும்போதுதான் அதன் அரிய தன்மையை அனைவரும் உணர்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வறட்சி ஏற்பட்டபோது, ஓய்வேயற்றுப் பணியாற்றிய ஓட்டுனர்களைக் கொண்டு ஓட்டப்பட்டு, விபத்துகளுக்குக் காரணமாகவும் அடையாளமாகவும் இருந்த தண்ணீர் லாரிகள் மீண்டும் சென்னையின் குறுகிய தெருக்களையெல்லாம் ஆக்கிரமித்துள்ளன. ஒரு குடும்பத்துக்கு 15 நாட்களுக்குத் தேவைப்படும் 9,000 லிட்டர் தண்ணீரை வாங்குவதற்கு 700 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கும் நிலை உள்ளது. சாலையில் லாரிகளிலிருந்து வழிந்த நீரெல்லாம் சேர்ந்த சின்னக் குட்டைகள், அண்ணா சாலையின் நடுவே நீண்டிருக்கும் நீர்க்கோடுகளைப் பார்க்கும்போது சமீப காலமாக மனம் பதைக்கத் தொடங்கியுள்ளது.


சேர்ந்து வாழ்வதற்கான அனுசரணையும் சகிப்புத்தன்மையும் கொஞ்சம்போல இருந்த காலகட்டத்தில், சென்னையில் நேர்ந்த தண்ணீர்ப் பஞ்சத்தைக் களனாகக் கொண்டு அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ நாவலை மீண்டும் வாசித்துப் பார்க்க வேண்டும்.

தண்ணீர் மட்டும்தானா?

நாம் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய வளங்களுக்குப் பற்றாக்குறை நேரும்போது, அதன் காரணமாக நேரும் பேரிடரைக் கடப்பதற்குச் சமூகம் திரும்பத் திரும்பக் கூட்டுணர்வையும் சகிப்புத் தன்மையையும் பழக வேண்டியிருக்கிறது. ஒரு பொருள் இல்லாமல் போகும்போதுதான், அந்தப் பொருளைத் தேடும் உத்வேகத்திலும் முயற்சியிலும் அந்தப் பொருள் நினைவிலும் புழக்கத்திலும் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாகவும் மாறுகிறது. உணர்ந்து, சிந்தித்துச் செயல்பட வேண்டிய பொருளாக அரிதாகிப் போனதென்பதாலேயே அதிகமாக நம்மில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது தண்ணீர் மட்டும்தானா என்ற கேள்வியைத் தீவிரமாகக் கேட்பதால் தண்ணீர் நாவல் அது பேசும் பொருளையும் கடந்துவிடுகிறது.

’தண்ணீர்’ நாவலில் தண்ணீர்ப் பிரச்சினையை முன்வைத்தோ வேறு விஷயங்களுக்காகவோ ஒருவர்கூடச் சாகவில்லை. 138 பக்கங்களே கொண்ட, அதிகபட்சமாக மூன்று மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய இந்த நாவலில், வர்க்கம், சாதி, பாலின பேதமின்றி எல்லோரையும் பாதிக்கும் ஒரு பேரிடர் விளைவிக்கும் மூச்சுத் திணறலைக் கதாபாத்திரங்களின் உரையாடல்கள், நிகழ்ச்சிகள், காட்சிகள் வழியாகச் செம்மையாக உருவாக்கிவிடுகிறார். தலைக்கு மேல் அகன்றிருக்கும் பேரிடரின் குடையின் கீழ், யாருடைய தனிப்பட்ட துயரங்களுக்கும் பெரிய இடமேயில்லை. ஆனாலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இன்னும் மோசமானவொன்று ஏதோ வரவுள்ளது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எந்தத் துயரத்தையும் ஒருவர் சொல்லும்போது அத்துயரத்துக்கு வெளிப்படுத்த வேண்டிய அழுத்தம் இல்லாமல் போகிறது.

இந்த நாவலின் ஆண்கள் இயற்கைக்குப் பின்னால், மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்களைப் போல ஒல்லியாக, தேசலாக, நோய்மையின் சிறுமையுடன் மலிவான தோற்றத்தை அளிப்பவர்கள். பெண்தான், பெண்மைதான், இயற்கைதான் மாபெரும் வளமான தண்ணீர் என்பதை அசோகமித்திரன் நவீன உலகத்துக்கு நினைவூட்டுவதாகத் தோன்றுகிறது. தன்னைக் காலியாக்கிக்கொண்டு, உருவமற்று, வடிவமற்று இருப்பது நீர். குடத்தில், தவலையில், குப்பியில் அதன் வடிவம் கொள்கிறது. நீர் ஆழங்களை நோக்கிப் பொழியும்; தன் உக்கிர சக்தியால் பாறைகளையும் பிளக்கும். நீரின் வெவ்வேறு பெயர்களாகத்தான் இந்த நாவலில் ஜமுனா, சாயா, டீச்சரம்மா, வீட்டம்மா ஆகியவர்கள் இருக்கிறார்கள். இந்திரா காந்தி ஒருவரின் பேச்சில் குறிப்பிடப்படுகிறார்.

மாபெரும் வளம்

டீச்சரம்மா ஒரு மைல் தூரம் சென்று, தூரத்து உறவினர் என்ற உரிமையை எடுத்துக்கொண்டு நுழையும் ஒருவர் வீட்டில் வேண்டாவெறுப்பாகத் தரப்படும் ஒரு பானைத் தண்ணீரை எடுத்துவருகிறாள். டீச்சரம்மாவின் நோயாளி மாமியார், மருமகளின் இடுப்பில் காபிக் கோப்பையை எறிகிறாள். அந்தக் கோப்பையை எடுத்து சிரித்தபடியே தனக்குத் துணைக்கு வந்த ஜமுனாவுக்கு காபி கலக்கப் போகிறாள். தானும் சமூகமும் நெறியென்று கருதாத, விரும்பாத வாழ்க்கையை வாழும் தன் அக்கா மீது ஆற்றாமையும் கோபமும் காட்டி எச்சிலை உமிழ்ந்துவிட்டு சேர்ந்து அவர்கள் வாழும் அறையிலிருந்து வெளியேறிப் போகிறாள் சாயா. எச்சிலைத் துடைக்கும் ஜமுனா தன் தங்கை சாயா மீது கோபம் இல்லாமல் நிராசையான சிரிப்பையே வெளிப்படுத்துகிறாள். வெளியே உலர்ந்த மண்ணுக்குள் பழுதுற்ற குழாயைச் சரிசெய்வதற்காக சாலைகளில் கடப்பாரை ணங்கென்று இறங்குகிறது. தண்ணீர் வேறுவேறாக வீட்டிலும் தெருவிலும் உருவம் கொள்கிறது.

மனிதர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் இடர்களிலும், கூட்டாகச் சந்திக்கும் பேரிடர்களிலும் ஒரு புதிய வலுவைப் பெறுகிறார்கள். அதேபோல, இறந்த காலத்தின் அனுபவங்கள், மனித இனம் தன் நனவிலியில் கூட்டாகச் சேர்த்து வைத்திருக்கும் பழைய அனுபவங்களின் உரத்தையும் பெற்று, தலையைச் சிலுப்பி அவர்கள் தங்களின் மனத்தை நேராக்கிப் புத்தூக்கம் அடையவும் செய்கிறார்கள்.

தான் வாழ நேர்ந்த, திட்டமானதென்று நினைக்கும் வாழ்க்கையின் பார்வையிலிருந்து அக்கா ஜமுனாவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, சாயாவுக்கு ஒருகட்டத்தில் வெறுப்பு தோன்றுகிறது. ஆனால், தனது வாழ்க்கையின் திட்டங்கள் குலைந்து சரியும் நிலையில், அதே அக்காவை மீண்டும் பற்றுவதோடு இருவரும் வரும் நாட்களை எதிர்கொள்ளும் திடத்தையும் பெறுகிறார்கள். வெளியே எந்தச் சூழ்நிலையும் சாதகமாகவெல்லாம் அவர்களுக்கு ஆகவில்லை. ஆனால், அவர்களது மனத்தின் நிலை மாறிவிடுகிறது.

பரம ஏழை

பாஸ்கர் ராவால் கர்ப்பமாகி, தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜமுனாவிடம் டீச்சரம்மா, தான் 15 வயதிலிருந்து காசநோய் கணவனுடன் அவதிப்படும் நிலையைச் சொல்லி, யாருடைய துயரமும் குறைந்ததல்ல இந்த உலகில் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். தன்னைத் தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்காதவர்கள்தான் உலகிலேயே பரம ஏழை என்று டீச்சரம்மா ஜமுனாவிடம் பேசிப் போன பின்னர், அவளது அறையில் ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் வேறாக ஜமுனாவுக்குத் தெரியத் தொடங்குகிறது.

தன் தேவைக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு டம்ளர் தண்ணீர் தேவைப்படும் இரண்டு குழந்தைகள் சேர்ந்து எங்கோ ஒரு இடத்திலிருந்து, தனது வீட்டுக்கோ வேறு யாருக்குமோ ஒரு பெரிய தவலை நீரைத் திணறித் திணறிக் கீழே வைத்துச் சுமந்துகொண்டு போகும் ஒரே சித்திரத்தைத்தான் டீச்சரம்மா ஜமுனாவிடம் காட்டுகிறாள். அந்தக் குழந்தைகள் ஏன் அதைச் செய்ய வேண்டுமென்று கேட்கிறாள். போதாமை, இல்லாமை, புழுக்கங்கள், ஏமாற்றங்கள், நிராசைகள், அழுந்தி உலர்ந்துபோன தன்மைக்கிடையிலும் ‘இருப்பின் இனிமை’, ‘இருப்பே இனிமை’ என்றெல்லாம் சொல்லும் நாவல்தான் ‘தண்ணீர்’.

அசோகமித்திரனின் படைப்புகளில் பெரும்பாலும் உபதேசம் என்ற ஒன்றைப் பார்க்க முடியாது. ‘தண்ணீர்’ நாவலில் டீச்சரம்மா, ஜமுனாவிடம் பேசுவதை நம் எல்லாருக்குமான உபதேசம் என்றே சொல்லிவிடலாம். ஜமுனாவும் சாயாவும் இருக்கும் அறையின் ஜன்னல் நிழலாய், சிறைக்கம்பிகளைப் போல ஜமுனாவுக்குத் தெரிகிறது. ஆனால், அது சுயம் பூதாகரமாகக் காட்டும் மாயச் சிறைதான் என்கிறாரோ அசோகமித்திரன்.

தொடர்புக்கு: 
sankararamasubramanian.p@hindutamil.co.in
 மனங்களின் பேரிடர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x