Last Updated : 05 Jul, 2015 01:20 PM

 

Published : 05 Jul 2015 01:20 PM
Last Updated : 05 Jul 2015 01:20 PM

தெரிந்த நாவல் - தெரியாத செய்தி | எல்லா ஊருமே திருநெல்வேலிதான்

திருநெல்வேலி என்றால், தாமிரவருணியும் வயல்களும் நெல்லையப்பர் கோவிலும்தான். நான் பார்த்த திருநெல்வேலி இன்று இல்லை. எல்லா ஊர்களையும்போல அதுவும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் தன் பழைய தோற்றத்தை இழந்து வருகிறது.

நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் கூட திருநெல்வேலி மக்கள் பெரும்பாலும், விவசாயத்தைச் சார்ந்துதான் வாழ்ந்துவந்தனர். வீடுகளும் நஞ்சை நிலங்களும் பெரும்பாலோருக்குச் சொந்தமாக இருந்தன. மாதம்தோறும், நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் ஏதாவது திருவிழா நடக்கும். ஆனித் தேரோட்டமும் திருக்கல்யாணமும் ரொம்ப பிரபலம். என் பால்ய காலத்தில் பல தேரோட்டங்களைப் பார்த்திருக்கிறேன். திருநெல்வேலி மக்களின் வாழ்வு தாமிரவருணி ஆற்றோடும் நெல்லையப்பர் கோவிலோடும் இரண்டறப் பிணைக்கப்பட்டிருந்தது.

சேர்மாதேவி ரோடு என்றும் பேட்டை ரோடு என்றும் அழைக்கப்படுகிற சாலை, சந்திப் பிள்ளையார் கோவில் முக்கிலிருந்து, மேற்கு நோக்கிச் செல்கிறது. இந்த ரோட்டில்தான், நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் திருமணம் நடைபெறுகிற திருக்கல்யாண மண்டபமும் அதனருகே பக்தர்களுக்குத் திருமணக் கோலத்தில் காட்சிதரும் கம்பாநேரி மண்டபமும் இருக்கின்றன.

கம்பாநேரி மண்டபத்தின் நடுவில், சிறு நீராளி மண்டபம் உள்ளது. எந்நாளும் வற்றாத சதுரமான மண்டபத்துடன் கூடிய சிறுகிணறு அது. அந்த இடத்தில் என்றோ ஒரு காலத்தில், நதி ஓடியதன் அடையாளம்தான், அந்தச் சிறு நீராளி மண்டபம் என்று வயதானவர்கள் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த இடம், நீர்நிலைகளுக்கு மத்தியில் இருந்தது. அதனால்தான், அந்த மண்டபத்தில் வற்றாத தண்ணீர் இருந்தது.

கம்பாநேரிக்கு அருகேதான் என் பாட்டி வீடு. நிலத்தில் வருகிற விளைச்சலை விற்றுச் சாப்பிட்ட பல குடும்பங்கள் இன்றுபோலவே அன்றும் இருந்தன. நிலச்சுவான்தார்கள் நேரடியாக நிலத்தில் இறங்கிப் பயிர் செய்வதில்லை. நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டு, தாமிரவருணியில் ஆற்றுக் குளியல், சீட்டாட்டம், விலைமாதர் வீடு என்று வாழ்ந்த ஆண்கள் பலர் உண்டு. கனகராயர் முடுக்குத் தெரு, சொக்கலிங்க முடுக்குத் தெரு, மாடத் தெரு என்ற பல தெருக்களில் அந்த நாட்களில் விலைமாதர்கள் வாழ்ந்தனர். ஒரு ஆண், இரண்டு பெண்களை மணமுடிப்பது என்பது அப்போது சர்வசாதாரணம்.

இதுபோன்ற ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞனின் வாழ்வைத்தான், கம்பா நதி நாவலில் சொல்ல முயற்சித்தேன். எவ்விதப் பொருளாதார வரவும் இல்லாமல், இருக்கிற சொத்துக்களையும் விற்றுத் தின்று தீர்த்த திருநெல்வேலி குடும்பங்களின் துயரமான வாழ்வு, இன்றும் அங்குள்ள வளவு (காம்பவுண்ட்) வீடுகளில் அலைந்தாடிக்கொண்டிருக்கிறது. அவற்றில் எங்கள் குடும்பமும் ஒன்று. அந்த நாட்களில் ராணுவத்தில் சேருவதென்பது, காணாமல் போவதற்குச் சமம் என்று கருதப்பட்டது. அதனால்தான், கம்பா நதியின் இளைஞன் ராணுவத்தில் சேர்வதாக முடித்திருந்தேன்.

ஒருகாலத்தில் கம்பாநேரி மண்டபத்தின் வெளியே ஓடிய ஆறு, காணாமல்போன மாதிரி, பல திருநெல்வேலிக் குடும்பங்கள், ஒருகாலத்தில் பெருவாழ்வு வாழ்ந்து பின் காணாமல் போய்விட்டன. அந்தக் குடும்பங்களின் ஏக்கமும், பெருமூச்சும் திருநெல்வேலி ஊரில் இன்றும் அலைந்துகொண்டிருக்கின்றன. இது திருநெல்வேலியில் மட்டும் நிகழவில்லை. ஒரு விதத்தில் எல்லா ஊர்களிலுமே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லா ஊர்களுமே திருநெல்வேலியாகிக்கொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x