

மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் சமூக அளவிலிருந்து அரசியல் மட்டத்துக்கு வந்திருக்கும் சூழல் இது. மது அருந்துவதால் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து எழுதப்பட்டுவருகின்றன. இந்நிலையில், மதுவிலக்கை வலியுறுத்தும் கருத்துகள், மதுவிலக்கு தொடர்பான அரசியல், வரலாற்று தகவல்களுடன் வெளியாகியிருக்கும் புத்தகம் இது.
ஆசிரியர் பற்றி
மதுவிலக்கின் அவசியம் குறித்து ‘சங்கொலி’ வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இப்புத் தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார் இரா. ரவிக்குமார். பத்திரிகைகள், நாளிதழ்களில் வெளியான தகவல்களைத் தொகுத்துத் தந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறப்பம்சங்கள்
குடிப்பழக்கம் தொடர்பான எச்சரிக்கை வாசகங்கள், வெளிநாட்டு இதழ்களில் வெளியான கார்ட்டூன்கள், மதுவின் தீமைகுறித்த பொன்மொழிகள், பழமொழி கள், புள்ளிவிவரங்கள், குடிப்பழக்கம் ஏற்படுத்தும்
உடல் நல பாதிப்புகள்குறித்த மருத்துவர்களின் அறிவுரைகள், சுவரோவியங்கள் என்று பல்வேறு வடிவங்களின் தொகுப்பு இப்புத்தகம். குடிப்பழக்கம் தொடர்பாக மதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறுகதைகள், திரைப்படங்கள் போன்றவற்றில் இப்பிரச்சினை கையாளப்பட்டிருக்கும் விதம் ஆகியவையும் இப்புத்தகத்தில் உண்டு.
வரலாற்றுத் தரவுகள்
சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி 1938-ல் மதுவிலக்கைக் கொண்டுவந்தபோது அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டத்தான் விற்பனை வரி கொண்டுவரப்பட்டது என்பன போன்ற அரிய தகவல்களும் உண்டு. இவற்றுடன் காந்தி, பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் மதுவிலக்கு தொடர்பாகக் கொண்டிருந்த கருத்துகளும் திரட்டித் தரப்பட்டிருக்கின்றன. “மதுக்கடைகள் வாயிலாகக் கிடைக்கும் வருமானம் புல் தரையில் ஒளிந்திருக்கும் நச்சுப்பாம்பு போன்றது.
வளர்ந்து ஓங்கி வரும் சமுதாயத் தீமை இது. எனவே, வாய்ப்பு அமையும்போது இத்தீமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்” என்று ‘யங் இந்தியா’ இதழில் காந்தி எழுதிய கட்டுரை இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமானது!
- சந்தனார்
முழு மதுவிலக்கு
அதுவே நமது இலக்கு
இரா. ரவிக்குமார்,
பக்கங்கள்: 368
விலை: ரூ. 250
தொடர்புக்கு: கொங்கு மண்டல ஆய்வு மையம்,
ரவி அச்சகம், உடுமலை. அலைபேசி: 9943978256