புத்தக அறிமுகம்: எரியத் துவங்கும் கடல்
ஆசிரியர்: அ. வெண்ணிலா
புதுக்கவிதைகளின் ஜனநாயகம்
தமிழ்ப் படைப்புலகில் கவிதைகளுக்கு எப்போதும் தனித்துவமான இடம் உண்டு. பாரதியார் ஏற்றிவைத்த வசன கவிதை தீபத்தைத் தொடர்ந்து பலரும் தமிழில் கவிதைகள் எழுதத் தொடங்கினர். வசனகவிதை, புதுக்கவிதை என்று க.நா.சுப்பிரமணியனால் பெயர்சூட்டப்பட்டது. அன்பு, அந்தரங்கம், அரசியல் என அனைத்தும் பகிரப்படும் களமாக புதுக்கவிதைகள் விளங்குகின்றன.
அ.வெண்ணிலாவின் கவிதை ஆளுமை
1990-களில் பிரதானமான பெண்குரல்களில் ஒருவராக அறிமுகமான அ. வெண்ணிலா எழுதிய கவிதைகளின் முழு தொகுப்பு, ‘எரியத் துவங்கும் கடல்’. நான் கவிதைகளால் ஆனவள் என்று சொல்லும் வெண்ணிலா, தன் கவிதைகளிலும் அதையே பிரதிபலித்திருக்கிறார். காதலும் காமமும் இரண்டறக் கலக்கும் முத்தங்களும், காதலர்களின் உணர்வுப் பரிமாற்றங்களும் அவற்றைக் கடந்த வாழ்வின் எதார்த்தமும் என வாழ்வின் பரிமாணங்களைச் சொல்கின்றன இவரது கவிதைகள். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கவிதை வழியாக வெளிப்படுகிறபோது அவற்றின் தீவிரம் பிடிபடுகிறது. சமூகத்தின் பிறழ்வுகளைக் கேள்விகளாக முன்வைக்கிற கவிதைகளுக்கு இடையே இயற்கையை முன்னிறுத்தும் வரிகள் அத்தனை ஈர்ப்புடன் இல்லை.
வெண்ணிலாவின் வேறு படைப்புகள்
இரண்டு சிறுகதைத் தொகு திகளை எழுதியுள்ளார். இவரது ‘பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்’ தொகுப்பு கவனம் பெற்ற சிறுகதை த் தொகுப்பு. பெண்ணுடல் மீது பல வகைகளிலும் நிகழ்த்தப்படும் அத்துமீறலையும் வன்முறையையும் இதில் பதிவுசெய்திருக்கிறார். தமிழ் சிறுகதை உலகில் தடம்பதித்த பெண் எழுத் தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ‘மீதமிருக்கும் சொற்கள்’. முதலில் தமிழில் எழுதவந்தவர்களின் படைப்புகளையும் தேடியலைந்து தொகுத் திருக்கிறார். வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஆவணம் இது.
- பிருந்தா
எரியத் துவங்கும் கடல்
ஆசிரியர் : அ. வெண்ணிலா
வெளியீடு : அகநி வெளியீடு, எண் 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604408.
விலை : 275
அலைபேசி : 9444360431.
