

தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்கள் இழிந்தோர், அடியோர், இழிசனர், இழிபிறப்பாளர், துடியர், பறையர், புலையன், புலைத்தி, வண்ணார், வெட்டியான் எனப் பேசுகின்றன. பறை அடித்து அறுவடை செய்தோரைக் கடைசியர் என்கிறது சங்ககாலப் பாடல்.
கி.மு. 170க்கும் 150க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட மநு தர்மம் இந்தியாவின் நால் வர்ண சமூகத்தில் புதிதாக 5-வது பிரிவாகப் பஞ்சமர்களை உருவாக்கியது என்கிறார் அம்பேத்கர்.
ஆதாம் என்பவர் 1840-ல் எழுதிய நூலில் 15 வகையான இந்திய அடிமைகளைப் பட்டியலிடுகிறார். அப்போதைய இந்தியாவில் சுமார் 90 லட்சம் அடிமைகள் இருந்ததாகக் கூறுகிறார். உலக அளவில் பல நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக அடிமை ஒழிப்புச் சட்டத்தைக் கிழக்கிந்திய கம்பெனி 1843-ல் அறிவித்தது. இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆணையர் ஜே.எச். ஹட்டன் 1931-ல் 9 வரை யறைகளை வைத்துத் தீண்டத்தகாத சாதிகளைப் பட்டியலிட்டார். இந்தியச் சட்டம் 1935-ல் பட்டியல் சாதியினர் என்ற சொல் உருவானது.
சுதந்திர இந்தியாவில் தலித் –பழங்குடிகளுக்காகத்தான் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்-1955 உருவாக்கப்பட்டது. அதை அமலாக்குவதற்கான விதிகள் 1977-ல் தான் உருவாயின என்பது அமலாக்கத்தின் தன்மையைக் காட்டுகிறது. வன்கொடுமைகளை மட்டுமே தண்டிக்கும் ஒரு தனிச் சட்டமாக 1989-ல் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங் குடியினர் [வன்கொடுமைகள் தடுப்பு] சட்டம் உருவானது. வன் கொடுமை என்றால் என்ன என்பதை இந்தச் சட்டம்தான் வரையறுத்தது.
1995-ல்தான் இந்தச் சட்டத்தை அமலாக்க விதிகள் உருவாயின. வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடி மக்கள் மேல் நடந்த வன்கொடுமைகளும் அதில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டதும் இந்திய ஜனநாயகத்துக்குத் தமிழகத்தின் பங்களிப்பு. 1995- 2007வரை பதிவான வன்கொடுமைகளில் தமிழகம் 7-ம் இடத்தில் உள்ளது.
2007 முதல் 2012 வரையான 5 ஆண்டுகளில் ஆறு மாவட்டங்களில் நடந்த 531 வன்கொடுமைகளை ஆய்வு செய்து தனி நூலாக ‘நொறுக்கப்பட்ட மக்களும் மறுக்கப்படும் நீதியும்’என்ற பெயரில் முருகப்பனும் ஜெசியும் உருவாக்கி உள்ளனர். இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையமும் நீதிக்கான தேசிய தலித் இயக்கமும் இதனை வெளியிட்டுள்ளன.
வன்கொடுமைகளின் வரலாறு, தமிழக தலித்துகளின் நிலை, சட்டத்தை மீறித் தரப்படும் ஜாமீன்கள், தகவல் உரிமைச் சட்டமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பற்றிய தகவல்கள், புதுச்சேரியில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமலாகும் தன்மை, எனப் பல துறைகளை நூல் ஆராய்கிறது.
2014-ல் அறிவிக்கப்பட்டுள்ள வன்கொடுமைத் தடுப்புச்சட்ட திருத்த மசோதா பற்றிய குறிப்புகளும் உள்ளன. ஒரு முழுமையான கையேடாக இதனை வழங்க நூலாசிரியர்கள் உழைத்துள்ளனர்.
நாம் ஜனநாயகத்தைப் பெயர ளவில் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு சாதிய சமூகம். சமூகம் பற்றிய ஆழமான புரிதலைப் பெற இளைய தலைமுறைக்கு இது உதவும். இந்தியச் சமூகம் சனநாயகத்தை அனுபவிக்க வேண்டு மென்றால் பாராமை, அணுகாமை, தீண்டாமை, சாதியப் பாகுபாடுகள், சாதி, வர்ண உணர்வுகளின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஜன நாயக உணர்வோடு கடக்க வேண்டும். அதற்கு இப்புத்தகம் உதவும்.
நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்
முருகப்பன், ஜெசி
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்
அண்ணா நகர் 4-வது தெரு, மரக்காணம் சாலை,
திண்டிவனம்-604001 தொலைபேசி: 04147 250349. நன்கொடை: ரூ. 200