Published : 09 Jul 2015 10:50 AM
Last Updated : 09 Jul 2015 10:50 AM

வீடில்லா புத்தகங்கள் 40: வாசிப்பு மனநிலை!

ஒருவரை மலையேற வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது புத்தகம் படிக்க வைப்பது. மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக் கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்குப் படிக்க வேண் டும்? புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!

எனது நண்பர் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தானே 100 புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீடு வீடாகப் போய் இலவசமாக புத்தகம் கொடுத்து படிக்க வைக்க முயன்றார்.

அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்குப் போய் அவர் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார். கதவை திறந்த ஆள், ‘யார் என்ன..’ என எதையுமே கவனிக்காமல் ‘வேண்டாம் போ’ எனச் சொல்லி கதவை மூடிவிட் டார். அடுத்த வீட்டில், ‘இதை வெச்சிட்டு என்ன செய்றது? யாரும் படிக்க மாட்டாங்க; வேற ஏதாவது கிஃப்ட் இருந்தா குடுங்க…’ என ஒரு பெண் கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் வீட்டில், ‘புக்ஸ் எல்லாம் வேஸ்ட் சார். நாங்க நியூஸ் பேப்பர் கூட வாங்குறதில்லை…’ எனச் சொல்லி துரத்தியிருக்கிறார்கள். இப்படியாக 5 மணி நேரம் பல்வேறு குடியிருப்புகளில் ஏறி, இறங்கியும் அவரால் 10 புத்தகங்களைக் கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும்போது அதன் காவலாளி அவரை அழைத்து, தனது பேத்தி படிக்க ஒரு புத்தகம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியிருக்கிறார். அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் புத்தகத்தைக் கேட்டு வாங்கவே இல்லை.

நண்பர் விரக்தியோடு சொன்னார்: ‘‘அப்பா அம்மா புக்ஸ் படிச்சாதான் பிள்ளைகள் படிப்பாங்கன்னு நினைச் சேன். பெரியவங்களைப் படிக்க வைக் கிறது ரொம்ப கஷ்டம். எதையும் படிச்சிரக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்காங்க. அப்படியே பிள்ளை களையும் வளர்க்குறாங்க, இப்படி இருந்தா இந்த நாடு உருப்படவே உருப்படாது!”

இதுதான் நிதர்சனம். புத்தகம் படிக்க வைக்க நாடு தழுவிய ஓர் இயக்கம் இன்று அவசியமான தேவையாக உள்ளது.

மழலையர் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். நிறையப் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் கூட எந்த எழுத்தாளரையும் பற்றி அறிந்திருக்கவில்லை. எதைப் படிப்பது? எப்படி புத்தகங்களை தேர்வு செய்வது என்பதைப் பற்றியதாக அன்றைய கலந்துரையாடல் நடை பெற்றது.

அந்த நிகழ்வில் ‘மார்டிமர் ஜே அட்லர்’ எழுதிய ’ஹவ் டு ரீட் எ புக்’ (How to Read a Book) என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்துப் பேசினேன். 1940-ம் ஆண்டு வெளியான புத்தகம் அது.

‘புத்தகம் படிப்பது எப்படி?’ என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டது அந்தப் புத்தகம். நாம் ஏன் படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் எவை? அதை எப்படி அகற்ற முடியும் என்பதற்கான கையேடு போல இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மேலோட்டமாக வாசிப்பது, ஆழ்ந்து வாசிப்பது என இரண்டுவிதமான வாசிப்பு முறைகள் உள்ளன. பொதுவாக செய்தி களை, தகவல்களை மேலோட்டமாக வாசிக்கிறோம். தீவிரமான கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், அறிவியல் சிந்தனைகளை ஆழ்ந்து வாசிக்கிறோம்.

பொழுது போவதற்காக வாசிப் பது ஒருவிதம். அறிவையும், அனுப வத்தையும், ஆளுமையையும் வளர்த் துக்கொள்ள வாசிப்பது இன்னொரு விதம். வாசிப்பின் குறிக்கோள்தான் எதை வாசிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது.

எந்த ஒன்றையும் கற்றுக்கொள் வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, ஆசான் வழியாக கற்றுக்கொள்வது. மற்றது, நாமாக கற்றுக் கொள்வது. இந்த இரண் டும் சிலவேளைகளில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நாமாக ஒன்றைக் கற்றுக்கொள்வதுதான் வாசிப்பின் முதல் செயல். புத்தகம் ஓர் அரூப ஆசிரியன். அதில், குரல் மட்டுமே ஒலிக்கும்; ஆளைக் காண முடியாது.

ஆரம்ப நிலை வாசிப்பு, தேர்ந்த வாசிப்பு, பகுத்தாயும் வாசிப்பு, முழுமையான ஆழ்ந்த வாசிப்பு என வாசிப்பில் நான்கு நிலைகள் இருக்கின்றன.

அறிவியல் புத்தகங்களை எப்படி படிப்பது? தத்துவப் புத்தகங்களைப் பயில்வது எப்படி? புனைக் கதைகள், நாவல்கள் மட்டும் ஏன் விரும்பிப் படிக்கப்படுகின்றன? கவிதைகள் ஏன் எளிதில் புரிவதில்லை? வரலாற்று நூல்களை வாசிக்க ஏன் சிரமமாக உள்ளது… என்பதை குறித்து, தனித் தனி கட்டுரைகளாக விரிவாக எழுதி யிருக்கிறார் மார்டிமர்.

எந்தப் புத்தகம் குறித்தும் முன்முடிவு கள் தேவையற்றவை. புத்தகத்தைத் தேர்வு செய்வதற்கு அது குறித்த அறிமுகமும் பரிந்துரைகளும் மிகவும் அவசியம். ஆரம்ப நிலை வாசகர்கள் 50 பக்கங்களுக்குள் உள்ள புத்தகம் ஒன்றை தேர்வு செய்து படிக்கப் பழகி னால், அதை முழுதும் படித்து முடித்து விடுவார்கள். அதை விடுத்து 1,000 பக்க புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால், அதை முடிக்க முடியாததோடு புத்தகம் படிப்பதன் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

ஜப்பானியர்கள் எதையும் படக் கதை வடிவில் படிக்கிறார்கள். இதனால் படிப்பது எளிமையாவதோடு வேகமாக வும் படிக்க முடிகிறது. கோட்பாடுகள் சார்ந்தப் புத்தகங்களைப் படிக்கும் முன்பு கோட்பாடுகள் யாரால், எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று நூலை வாசிக்கும் முன்பாக வரைபடங் களைத் துணைக்குக் கொள்ள வேண்டும். அறிவியல் சிந்தனை களைப் புரிந்துகொள்ள ஆதார விஷயங்கள் தெரிந்திருக்க வேண் டும். கவிதையை ரசிக்க கற்பனை வேண்டும்... என படிப்பதற்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் மார்டிமர் வலியுறுத்துகிறார்

ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் நினைவில் நிற்கும்? படித்த விஷயங் களை எப்படி குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது என்பதற்கும் உதவிக் குறிப்புகள் கொடுக்கிறார் இவர்.

மகாபாரதம், ராமாயணம், ஒடிஸி போன்ற இதிகாசங்களை வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம். ஒரு நாவல் அல்லது கவிதைப் புத்தகம் வாசிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக் கூடியது.

இதிகாசங்களை வாசிப்பது எளிதான தில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டது. ஆகவே பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம். இதி காசத்தின் கட்டமைப்பு மிக முக்கிய மானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும்போது விரிந்த அனு பவம் தரக் கூடியது. ஆகவே, அந்தக் கட்டமைப்பின் ஆதாரப் புள்ளியை அறிந்துகொள்வது அவசியமானது.

இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோற்றம் கொண் டது. அதற்கு நிறைய உள்அடுக்குகளும், குறியீட்டு தளங்களும், உபகதைகளும், தத்துவ விசாரங்களும் இருக்கின்றன. அதைப் புரிந்துகொண்டு படிக்கும்போது தான் முழுமையான வாசிப்பு சாத்தியப்படும்

வாரம் ஒரு புத்தகம். மாதம் நான்கு புத்தகம்… என்ற இலக்கோடு தொடங் குங்கள். நிச்சயம் அது வளர்ச்சியடையும் என்கிறார் மார்டிமர். எனது சிபாரிசும் அதுவே!

- இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

முந்தைய அத்தியாயம்->வீடில்லா புத்தகங்கள் 37: இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x