Last Updated : 14 Jun, 2015 01:00 PM

 

Published : 14 Jun 2015 01:00 PM
Last Updated : 14 Jun 2015 01:00 PM

கவிஞன் - கவிதை | மனித நேயத்தைப் பாடும் கவிஞன்

சர்வதேச அளவில் தனி மன வெளிப்பாட்டைப் பிரதான அம்சமாகக் கொண்டு புதுக்கவிதை பிறந்தது எனலாம். அந்த வடிவத்தை முன்மாதிரியாகக் கொண்டு எழுந்த தமிழ்ப் புதுக்கவிதையிலும் அதன் பாதிப்புகள் தொடர்ந்தன. இந்த மனநிலை 70-களின் இறுதிவரை தீவிரமாக வெளிப்பட்டு வந்தது. சமூக மனத்தின் வெளிப்பாடுகள் ஏற்கனவே கவிதைகளில் வெளிப்பட்டிருந்தாலும் அந்தப் பண்பு 1980-களில்தான் கூர்மையடைகிறது. கவிஞர் சமயவேல் அதன் தொடர்ச்சி.

1980-களின் இறுதியில் எழுத வந்த சமயவேலின் கவிதைகள், ‘நான், நான்’என்று தன் பூத இருப்பை அடிப்படையாகக் கொண்டவை. இது ஒரு முரணான விஷயம். ‘நான்’, ‘நான்’ என அழுத்தமாகக் கூறி ‘நானை’ப் புறக்கணிக்கிறார். அல்லது ஒரு எளிய ‘நானை’ உருவாக்குகிறார் எனலாம். அதாவது இந்தக் கவிதைகளில் சமயவேல் குறிப்பிடும் ‘நான்’என்பது இந்தப் பிரபஞ்ச உடலின் ஒரு சாதாரணப் பகுதி. “இனி நானொரு விண் துகள்’என்கிறது அவரது ஒரு கவிதை. “காற்றில் களிநடனம் புரிகிற புற்களில் ஒன்றானேன் நான்” என்கிறது மற்றொரு கவிதை.

அதாவது மலையைப் போல, வானைப் போல சிறு துரும்பையும், கொத்துச் செடியையும் தன் உடலையும் ஒன்றாகவே பார்க்கிறார். உயிர் நிரம்பிய தன் உடலை இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் நடுவில் வைத்துப் பார்க்கிறார்,

“தொடர்ந்து கொண்டிருக்கும்/மாபெரும் இயக்கத்துள்/இன்னொரு துளியாய்/நான் வந்து விழுந்தேன்” என்கிறார்.

ஒரு கல், திசை காட்டும் மைல் கல்லாக மாற்றப்பட்டதும் அதற்கு ஓர் உயிர் கிடைக்கிறது; திசையைக் காட்டிக் கொடுக்கிறது. அதில் ஓர் இயக்கம் வந்துவிடுகிறது. இந்தப் பின்னணியில் உயிர் நிரம்பிய தன் பூத உடலின் இயக்கம் என்ன? எனக் கேள்வி எழுப்பிப் பார்க்கிறார். இயக்கமின்மையின் நித்தியத்தையும் இயக்கத்தின் அநித்தியத்தையும் அருகருகே வைத்துப் பார்க்கிறார். “அர்த்தமற்ற பெருந்தளத்தில்/ இயக்கமின்மைதான் இயக்கம்” எனச் சொல்லத் துணிகிறார்.

விடைபெறும் லட்சியவாதம்

மாறிவரும் உலகச் சூழலில் தோல்வியடைந்த தனி மனித லட்சியங்களையும் சமயவேலின் கவிதைகள் சித்திரிக்கின்றன. ஆனால் லட்சியவாதத்தின் தோல்வியைப் புலம்பல்களாக சமயவேல் சித்திரிக்க விரும்பவில்லை. ஒரு எட்டுக் கால் பூச்சியின் பிணத்துடன் இந்தத் தோல்வியை ஒப்பிடுகிறார்; ஒரு சிகரெட் இழுப்பின் வழியே சாதாரணமாகக் கடந்து செல்கிறார். மேலும் அவர், தன் கவிதைகள் மூலம் லட்சியவாதத்திற்கு விடை கொடுக்கிறார். “தேடலின் சிறகுகள்/கழன்று/மலைகளுக்கு அப்பால்/விழுந்தன/ என் சுதந்திரக் கப்பலை/ முற்றத்தில்/நிறுத்தினேன்/ ஓய்வாக/சிகரெட் பிடித்துக்/கொண்டிருக்கிறேன்”

விளையாட்டு மனம்

சமயவேலின் கவிதைகளின் மூலம் உணரப்படும் இன்னொரு அம்சம், குழந்தையின் விளையாட்டு மனம். வடிவங்களின் மூலமும் சொற்களின் மூலமும் அந்தக் குழந்தை விளையாட்டை உணர முடிகிறது. ‘சதா ஆடிக்கொண்டு’ ‘சதா பாடிக்கொண்டு’, ‘சதா’ ‘சதா’ எனப் பாடித் திரியும் குழந்தையைக் கவிதைகளில் பார்க்க முடிகிறது. “ஒரு குழந்தை/ சதா அழுதுகொண்டிருக்கிறது/ ஒரு இளம் பெண்/ சதா சிரித்துக் கொண்டிருக்கிறாள்/...சதா காற்று வீசிக்கொண்டிருக்கிறது/ சதாவின் கைபிடித்து நடக்கும்/சிறு பையன் நான்” என்கிற கவிப் பொருளில் குழந்தை மனம் இல்லை. ஆனால் மொழியிலும் வடிவத்திலும் ஒரு குழந்தை ஆட்டம் வெளிப்படுகிறது. இதே கவிதையை உத்வேகமாகக் கொண்டு குவளைக் கண்ணன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சமயவேலின் உலகத்தில் முழுவதும் வேறுபட்ட கவி உலகத்தைச் சேர்ந்த குவளைக்

கண்ணனை இதில் உள்ள குழந்தை மனம் கவர்ந்திருக்க வேண்டும். “ஒரு தலை தடுக்கி/நூறு தலைகளின் மேல் விழுந்தேன்/சாரி சாரி என/ லட்சக் கணக்கில் மன்னிப்புக் கேட்டேன்” என்கிற கவிதையிலும் இதை உணர முடிகிறது.

நிலக் காட்சிகள்

சமயவேலின் கவிதை வடிவம் மிக எளிமையானது. கையாளும் சொற்களும் எடையற்றவை. ஸ்திரமான நிலக் காட்சிகள் கொண்டவை. கவிப் பொருளில் பிரம்மாண்டங்களை எழுப்பும் சமயவேல் இக்கவிதைகளில் உவமையையும் உருவகத்தையும் பெரும்பாலும் கையாள்வதில்லை. சில இடங்களில் உடைத்த உளுந்து, களிமண் உருண்டை போன்ற சில எளிமையானவற்றை உவமைப் பொருளாகக் கொள்கிறார். அதன் வழியாக நிலக் காட்சிகளை மனத்தில் துலக்கமாக்குகிறார். சமயவேலின் கவிதைகள் சாதுரியமான தொழில்நுட்பங்கள் அற்றவை. கவிதைகளுக்குத் தங்கு தடையில்லாத சுதந்திரத்தை அளித்திருக்கிறார். அதனால் அவை தாமே தம் வடிவத்தைக் கண்டடைகின்றன.

சமூக மாற்றத்தின் அரசியல்

நகரமயமாக்கல், மேற்கத்தியமயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற சமூக நிகழ்வுகளை ஒரு கிராமத்து மனிதனின் மனத்துடன் சில கவிதைகளில் எதிர்கொள்கிறார். அந்தரங்க உரிமை தரும் நகரச் சூழலின் பாதுகாப்பின்மையை ஒரு கவிதையில் சொல்கிறார். மனிதனே அற்ற பூமி வரப் போகிறது எனச் சொல்கிறார். மனிதத்துவம் காக்கக் கடைசியில் துடியான கருப்பசாமியை நகருக்குள் வந்துவிடுவான் என எச்சரிக்கிறார். “சலங்கைச் சப்தமும்/குதிரையின் கனைப்பும்/ ரொம்பக் கிட்டத்தில்/ ..நாட்டுக்குள் வாரான்/ நகருக்குள் வாரான் கருப்பசாமி/ ஜாக்கிரதை ஜாக்கிரதை” என முழங்குகிறது கவிதை. சமூக மாற்றத்தின் அரசியலைப் பேசும் கவிதைகளுக்கான ஒரு முன்மாதிரியாக சமயவேலின் கவிதைகள் இருந்தன எனச் சொல்லலாம்.

ஆதார அம்சம்

“எதிர்ப்பட்ட முதல் மனிதனிலிருந்து/பூமி முழுவதையும் நேசித்தேன்” என்கிறார். இந்தக் கவிதையில் வெளிப்படும் நேசத்தைத் தன் கவிதைகள் மூலம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் மழையெனப் பொழியச் செய்கிறார் சமயவேல். ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது சமூக மாற்றங்களால் சிதைந்துவரும் மனிதத்துவத்தை உரத்துப் பாடுவதுதான் சமயவேலின் கவிதைகளின் ஆதாரமான அம்சம் எனத் தோன்றுகிறது.

தொடர்புக்கு : jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x