விடு பூக்கள்: எஸ்.என்.நாகராசன், கெய்ஷா, தேவிபாரதி

விடு பூக்கள்: எஸ்.என்.நாகராசன், கெய்ஷா, தேவிபாரதி
Updated on
1 min read

எஸ்.என். நாகராசன் கருத்தரங்கம்

மூத்த மார்க்சிய அறிஞரான எஸ்.என்.நாகராசனின் கருத்துலகம் தொடர்பாக கோவையில் அடுத்த வாரம் ஒரு நாள் கருத்தரங்கு நடக்கவுள்ளது. கீழை மார்க்சியம் என்ற வகைப்பாட்டை உருவாக்கிய நாகராசன், இந்திய அளவில் மதிக்கப்படும் மார்க்சிய அறிவுஜீவிகளில் ஒருவர். ஒரு விஞ்ஞானியாக இருந்து, இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் அபாயத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்தவர். தமிழ் மரபின் கூறுகளை நவீன சிந்தனையின் பகுதியாக மாற்ற முடியும் என்பதைத் தன் எழுத்துகள் வழியாகவும் பேச்சுகள் வழியாகவும் நிரூபிக்க முயல்பவர். இந்தக் கருத்தரங்கில் இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் முதல் தமிழ் தேச விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தியாகு வரை பலரும் பங்குபெறுகின்றனர்.

தமிழுக்கு வரும் கெய்ஷா

ஜப்பானிய சமூகத்தில் கெய்ஷாக்களின் இடம் குறித்த நூல் தமிழில் முதல்முறையாகத் தமிழுக்கு வரவுள்ளது. கெய்ஷாக்களைக் கணிகைகள் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் பாலியல் தொழிலாளிகளும் அல்ல. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஜப்பானிய சமூகத்தின் அங்கமாக இருந்த கெய்ஷாக்களின் வாழ்க்கையை ஆசிரியர் லெஸ்லி டௌனர் ஆராய்ந்து எழுதியுள்ள நூல் இது. இதை மொழிபெயர்த்திருப்பவர் வல்லமை இணையத்தளத்தை நடத்திவரும் பவள சங்கரி. இப்புத்தகத்தை சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ளது. பிரபலமான கெய்ஷாக்களின் கதைகளையும் உரையாடல்களையும் கொண்ட இந்நூலில் ஜப்பானியர்களின் பாலியல்பு பற்றிய பார்வையும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

சர்வேதேசக் களத்தில் தேவிபாரதி...

என். கல்யாண்ராமனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘Farewell, Mahatma’ என்னும் எழுத்தாளர் தேவிபாரதியின் சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஹார்பர் ஹாலின்ஸ் பதிப்பகத்திற்காக தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’ நாவலையும் கல்யாண்ராமன் மொழிபெயர்க்கவுள்ளார். கல்யாண்ராமன் மொழிபெயர்ப்பு மட்டுமல்லாது, தமிழின் தற்கால இலக்கியம் குறித்து ஆங்கிலத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருபவர். ‘சிவசங்கரா’ என்ற பெயரில் சிறுகதையும் எழுதியுள்ளார். அசோகமித்திரனின், ‘மானசரோவர்’ ‘ஒற்றன்’, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ போன்ற நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கல்யாண்ராமன் தற்போது பூமணியின் ‘வெக்கை’ நாவலை மொழிபெயர்த்து முடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in