

சென்னையில் நடக்கும் பெரும்பாலான புத்தக வெளியீட்டு விழாக்களில் தமிழச்சியைப் பார்க்கலாம். காரணம், விழாவுக்கு அழைக்கப்படுபவர்களில், யார் புத்தகங்களைப் படித்துவிட்டு வந்து பேசுகிறார்களோ இல்லையோ, தமிழச்சி கட்டாயம் படித்துவிட்டு வந்து பேசுவார் என்கிற உத்தரவாதம். பேராசிரியை, கவிஞர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி… இப்படிப் பல தளங்களில் செயல்படும் தமிழச்சியின் அடித்தளமாக அவர் குறிப்பிடுவது எப்போதும் வாசிப்பைதான். சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்திருந்தவர் நம்மிடம் உற்சாகமாகப் பேசினார்.
“சென்னை புத்தகக் காட்சிக்கு ஒவ்வொரு வருஷமும் வர்றதோடு மட்டும் இல்லை; கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வந்துடணும்னு பிரியப்படுறவ நான். புத்தகங்கள் மேல அவ்வளவு பிரியம். திராவிட இயக்கப் பாரம்பரியத்துல வந்த குடும்பத்துல பிறந்தவங்கிறதால, புத்தகங்களோட பரிச்சயம் சின்ன வயசுலேயே ஏற்பட்டுடுச்சு. வீட்டுல பெரியார் புத்தகங்களும் இருக்கும்; ஆழ்வார் பாசுரங்களும் இருக்கும்; அப்பா எங்க வாசிப்புல ரொம்ப அக்கறை எடுத்துப்பார். அதனால, எனக்கும் என் தம்பி தங்கம் தென்னரசுவுக்கும் சாப்பிடுறது எப்படி அன்றாடம் நடக்குற விஷயங்கள்ல ஒண்ணோ, அதேமாதிரி வாசிப்புங்குற விஷயமும் ஆயிடுச்சு. விட்டுட்டா, நாள் முழுக்கப் புத்தகங்களோட சுருண்டுடுவோம்.
அதனாலதான் பின்னாடி அப்பா நினைவா ஏதாவது செய்யணும்னு யோசிச்சப்பகூட சொந்த ஊரான மல்லாங்கிணறுல ‘வே. தங்கபாண்டியன் நினைவு நூலகம்’னு நூலகத்தை அமைச்சோம். எதையும் வாசிக்கலாம். ஆனா, அதுலேயும் ஓர் ஒழுங்கு வேணும். என் வாழ்க்கையில எனக்கு அதை என்னோட பேராசிரியர் டி.வி. சுப்பாராவ் கத்துக்கொடுத்தார். தமிழ்ல செவ்விலக்கியங்களை நோக்கி என் கவனத்தைத் திருப்பினவர் அவர்தான். ஒரு நாளைக்குக் குறைஞ்சது நாலு மணி நேரமாவது படிக்கணும்; அப்போதான் அந்த நாள் அர்த்தப்படும். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் இருந்தா, எட்டு மணி நேரம் பத்து மணி நேரம்கூட ராத்திரில உட்கார்ந்து படிப்பேன்.
இந்த முறை புத்தகக் காட்சியில் ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கியிருக்கேன். அதுல ஏற்கெனவே வந்தப்ப வாங்கி, படிச்சு முடிச்ச புத்தகங்களை உங்ககிட்ட சொல்றேன்: சி.மோகனோட ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’, செழியனோட ‘பத்து இசைப் புத்தகங்கள்’, கே. சதாசிவத்தோட ‘தமிழகத்து தேவதாசிகள்’, வா. மணிகண்டனோட ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’, ட்ராட்ஸ்கி மருதுவோட ‘காலத்தின் திரைச்சீலை’.”