

தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்துக்காகப் போராடியவர் ம.பொ. சிவஞானம். முதன்முதலில் மாநில சுயாட்சிக்கான கோரிக்கையை உரத்த குரலில் எழுப்பிய பெருமைக்குரிய அவரது வாழ்க்கையும் போராட்டமும் இன்றைய இளைஞர் சமுதாயம் அறியப்பட வேண்டிய ஒன்று. எனக்கும் அவருக்கும் இருந்த உறவையொட்டி ‘தமிழ் இனப் போராளி சிலம்புச் செல்வர் ம.பொ.சி’எனும் வரலாற்று நூலொன்றை எழுதிவருகிறேன்.
1979-ல் மத்திய - மாநில அரசுகள் தமிழகத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியைச் சுருக்க முயற்சித்தபோது, அதற்கு எதிராக புதுச்சேரியின் அனைத்துப் பகுதி மக்களும் வீறுகொண்டெழுந்து போராடினர். 10 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் மில் தொழிலாளி ஒருவரும், கல்லூரி மாணவர் ஒருவரும் பலியானார்கள். இந்தப் போராட்ட வரலாற்றைப் படங்கள், ஆவணங்கள், நேர்காணல்கள் என பி.என்.எஸ். பாண்டியன் அக்கறையோடு தொகுத்து, ‘ஊரடங்கு உத்தரவு’ எனும் நூலாக்கியுள்ளார். சமீபத்தில் நான் வாசித்த நூல்களுள் என்னை வெகுவாய்க் கவர்ந்த நூல் இது.