

புறநானூறு உள்ளிட்ட தமிழிலக்கியங்கள், 'மிளிர் மணிகள்' எனக் குறிப்பிடும் ஆபரணக் கற்களை மையமாகக் கொண்டு இரா. முருகவேள் 'மிளிர் கல்' நாவலைத் தந்திருக்கிறார். இந்த மிளிர் கற்களைக் கொண்டு சிலப்பதிகாரக் காலத்துக்கும் நவீன காலத்துக்கும் இடையே பாலம் ஏற்படுத்தியிருக்கிறார் முருகவேள்.
கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் பூம்புகாரை விட்டுப் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்து, பின் அங்கிருந்து மதுரை செல்கிறார்கள். கோவலன் கொலையுண்ட பின், நீதி கேட்டுப் போராடி வென்ற கண்ணகி மதுரையை எரியூட்டி, சேர நாட்டு மலைக்குப் போகிறாள். புகார் முதல் கொடுங்கல்லூர் வரை நீண்ட பயணம் அது.
கண்ணகியின் அடிச்சுவட்டில் பயணம் மேற்கொள்ள விரும்புகிறார் நமது காலத்தைச் சேர்ந்த முல்லை என்ற பெண். அவருடைய ஊடக நண்பர் நவீன் இதற்கு உதவ முன்வருகிறார். வழியில், பேராசிரியர் ஸ்ரீகுமார் நேமிநாதன் இவர்களோடு இணைகிறார். தமிழகத்தின் வணிகப் பெருவழிகள்குறித்து ஆராய்கிறவர் அவர். இவர்களுடைய பயணத்தின் விளைவுகள் தமது வணிக நலன்களுக்குப் பாதகமாக அமைந்துவிடுமோ என அஞ்சுகிற ஒரு பன்னாட்டு நிறுவனம் அனுப்புகிற ஆட்கள் இவர்கள் பாதையில் குறுக்கிடுகிறார்கள்.
மிளிர் கற்கள் எனப்படும் மாணிக்கம், மரகதம், கோமேதகம் முதலான ரத்தினக் கற்களை உலகம் முதன் முதலாகப் பார்த்தது கொங்கு நாட்டின் காங்கயத்தில்தான் என்ற தகவலுடன் விரிகிறது ஸ்ரீகுமாரின் உரை. இக்கற்கள் பழங்காலத்தில் ரோமானிய வணிகர்களால் கொண்டுசெல்லப்பட்டு, வணிகமயமானதால் ரோமின் செல்வங்கள் விரயமானதாக வரலாற்றாசிரியர் பிளினி குறிப்பிடுவதை ஸ்ரீகுமார் சொல்கிறார். இன்று இக்கற்களின் நிலை, பண்டைய காலத்தில் கொடிகட்டிப் பறந்த இவ்வர்த்தகம் இடைக்காலத்தில் அடைந்த மாற்றங்கள் பற்றியெல்லாம் இந்த நாவல் பேசுகிறது.
கண்ணகியும் கோவலனும் ஸ்ரீரங்கத்திலிருந்து மதுரைக்குப் போன வழி, மலையின் மேல் கண்ணகி போன வழி, வழியில் வருத்திய வெயில், கால் வலியெடுத்தது உட்பட எல்லாவற்றையும் விரிவாக எழுதியிருக்கிற இளங்கோவடிகள், புகாரிலிருந்து ஸ்ரீரங்கம் வரையில் போன வழியைப் பற்றிப் பேசும்போது மட்டும் காவிரியையும், அதன் கரை நெடுக நடந்த விவசாயச் சிறப்பையும் பற்றி விவரிக்கிறாரே, ஏன்? ஏறத்தாழ 150. கி.மீ. தூரம் நடக்கிற கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் பற்றி ஒன்றும் கூறுவதில்லையே, எதனால்? இத்தகைய கேள்விகளை எழுப்பிக்கொண்டே போகிறார்கள் முல்லையும் நவீனும். ஸ்ரீகுமாரின் மறுமொழிகள் தர்க்கரீதியானவையாகவும், வரலாற்றுச் சான்றுகள் உள்ளவற்றைத் தவிர்த்துப் பிற அம்சங்களில் ஊகங்களின் அடிப்படையிலானவையாகவும் உள்ளன.
மிளிர் கற்களுக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் விரிக்கும் சதி வலைகளை அம்பலப்படுத்தும் பகுதிகள் நாவலின் பிற்பகுதியில் இடம்பெறுகின்றன. அந்த வணிக நிறுவனங்களின் கண்ணசைப்பில், களப்பணியாளர்கள் 'வன்முறையில் ஈடுபட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்கள்' என காவல்துறையால் வேட்டையாடப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில் அரசியல் சார்ந்த, வெகுமக்கள் நலன் சார்ந்த அடிப்படையான கேள்விகளையும் நாவல் எழுப்புகிறது.
கொங்குப் பகுதிகளில் ‘ஜாதிக்கல்' தேடி அலையும் உள்ளூர் வணிகர்களும், கிருஷ்ணசாமி போன்ற இடைத்தரகர்களும், ‘கரூர் அய்யா'வும் கிளம்புகிறார்கள். இந்த இரு தரப்பினரின் வர்த்தகச் சூதாட்ட மோதல்களுக்கு நடுவே பகடைக்காய்களாகிறார்கள் முல்லை, நவீன், ஸ்ரீகுமார் ஆகிய மூவரும்.
மீத்தேன் எரிவாயுத் திட்டம், நிலம் கையகப்படுத்தப்படும்போது, அதில் புதையுண்டு கிடக்கும் பல்லாயிரமாண்டு கால மிளிர் கற்கள் கொள்ளைபோவது; வரலாற்று எச்சங்களான வட்டக்கல் புதைகுழிகள், கற்பலகைப் புதைகுழிகள் இவற்றினுள் வைக்கப்பட்டிருந்த முதுமக்கள் தாழிகள் போன்ற எண்ணற்ற சான்றாதாரங்கள் அழிக்கப்பட்டுவருவது; கப்பல்கள் வந்து நிற்குமளவு அகன்று விரிந்த காவிரி நதியின் கழிமுகம் பிளாஸ்டிக் குப்பைகள் மிதக்கும் வெறும் கழிவுநீர்க் குட்டையாகிப் போன அவலம் - இப்படியான பல அம்சங்களையும் ‘மிளிர்கல்' பிரதிபலிக்கிறது. இடதுசாரி இயக்கம் பற்றிய விமரிசனங்களும் வருகின்றன.
வரலாற்று உணர்வையும் சமூக உணர்வையும் பின்னணியாகக் கொண்டு சமகாலப் பிரச்சினைகளின் வேர்களைத் தேடிப் பயணிக்கிறது ‘மிளிர் கல்! பங்கேற்று நடக்க ஆரம்பித்தால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களுக்குப் போய்த் திரும்பி வந்துவிட முடிகிறது. பயணம் முடிந்துவிடுகிறதா? அந்தப் புள்ளியில்தான் நிஜமான, நாம் கட்டாயம் மேற்கொண்டே தீர வேண்டிய நெடும் பயணம் தொடங்குகிறது!
மிளிர் கல்
இரா. முருகவேள்,
பொன்னுலகம் பதிப்பகம்,
4/413, பாரதி நகர், 3-வது வீதி,
பிச்சம்பாளையம் (அஞ்சல்), திருப்பூர்-641 603.
கைபேசி: 94866 41586 விலை: ரூ. 200
- கமலாலயன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kamalalayan@gmail.com