

ஆதிக்காடுகளின் பச்சை மணத்தைப் பாதுகாக்கும் வேங்கைகளின் வரிகளைப் போன்றதுதாம் ஒவ்வொரு எழுத்தாளனின் வரியும். மனிதர்கள் உலகின் எந்த மூலைக்குப் பயணப்பட்டாலும் துரத்தப்பட்டாலும் அவர்களின் மண்ணும் மொழியும் பண்பாடும் அவர்களது மரபணு ஞாபகங்களாகத் தங்கிவிடுகின்றன. வோல்கா நதியில் கால் வைக்கிறபோது கங்கையின் சிலிர்ப்பு; கக்கூரா மலர்களைக் கையில் அள்ளுகிறபோது மல்லிகையின் மணம். இந்த உணர்வுதான் மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. எங்கே போனாலும் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொள்ள அவர்களுக்கு ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது.
அ.முத்துலிங்கத்தின் கதைகள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன. அவரது ‘அமெரிக்கக்காரி’ சிறுகதைத் தொகுப்பிலில் ‘சுவருடன் பேசும் மனிதர்’ என்ற ஒரு கதை. அவன் சதாம் காலத்தில் ஈராக்கிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்திருப்பான். பொறியியல் படித்தவன் முடிதிருத்தும் பணிபுரிகிறான். அவனுக்கு அரபுமொழி தெரியாது. அராமிக் அவனது தாய்மொழி. மனைவியும், அவனும் மட்டுமே அங்கு அம்மொழியில் பேசிக்கொண்டிருப்பார்கள்.
மனைவியும் இறந்தபிறகு அந்த மனிதன் இரவு நேரத்தில் அராமிக் புத்தகங்களைப் படித்து, சுவர்களுடன் அராமிக் மொழியில் பேசிக்கொண்டிருப்பான். ‘நாடு இல்லாமல் ஒரு மொழி வாழ முடியாது. ஒரு மொழி அழிவது என்பது ஓர் இனம் அழிவதற்கு, ஒரு கலாச்சாரம் அழிவதற்குச் சமம். கீழே விழுந்த முடியைத் திரும்பவும் ஒட்ட முடியாது. மொழியும் அப்படித்தான், பூமியிலிருந்து ஒரேயடியாக மறைந்துவிடும்’ என்பான். முத்துலிங்கத்தின் கதைசொல்லிக்குத் தனது தாய்மொழியும் இலங்கையும் நினைவில் வந்து நடுங்கும்.
கதை என்பது வெறும் பாத்திரங்களின் உரையாடல் அல்ல; அந்த மண்ணும் மொழியும் நிலத்தின் காட்சிகளும் பொழுதுகளும் சேர்ந்து நம்முடன் உரையாடுவது என்பதை உணர்த்தும் நவீனத் தமிழ்தான் முத்துலிங்கத்தின் கதைகள்.
‘அ.முத்துலிங்கம் கதைகள்’ (தமிழினி வெளியீடு) தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள் அனைத்தையும் ஒருசேர இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். முத்துலிங்கம் மட்டுமல்ல; நானும் அவரது விரல்பிடித்துக்கொண்டு ஒரு யாத்ரீகனாக, நாடோடியாக, அகதியாக, அதிதியாக, தமிழனாக இலங்கை, கனடா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து என்று அலைந்து திரிந்து அந்தந்த மண்ணின் சரித்திரத்தையும் பூகோளத்தையும் இலக்கியத்தையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவர் ‘கதை’க்கிறார் என்று சொல்ல முடியவில்லை; விதைக்கிறார். புத்தகத்தை மூடிவிட்டு என் உள்ளங்கைகளைப் பார்க்கிறேன். ஈரத்துடன் சில விதைகள் ஒட்டியிருப்பதை என்னால் உணர முடிகிறது.
- ம. மோகன்