Published : 21 Jan 2014 03:48 PM
Last Updated : 21 Jan 2014 03:48 PM

ஒரு நிமிட கதை- பரிவு

“ஏம்மா, உன்னை சீக்கிரமா கிளம்பத் தானே சொன்னேன்?...”- என்று அம்மாவிடம் சிடுசிடுத்த ராகவன், மனைவியிடம் சென்று, “ஏய்...அம்மாவுக்கு சீக்கிரம் டிபன் வை. நான் ஆபிஸ் போகும்போது அவங்களை பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுப் போயிடறேன்” என்றான்.

“ஊருக்கு கிளம்பற அம்மாகிட்ட ஏன் இப்படி எரிஞ்சு விழறீங்க? நீங்க கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்ட மாதிரி படபடக்கறது அவங்களுக்கு சரிப்பட்டு வராது. நீங்க கிளம்புங்க. அவங்க வயசானவங்க. நிதானமா கிளம்பி ஆட்டோவுல போவாங்க. நான் அவங்களை வழி அனுப்பி வைக்கிறேன்!” ரமா சொன்னாள்.

ரமா மாமியாருக்காக பரிந்து பேசுவதைப் பார்த்து ராகவன் ஆனந்தப்பட்டான்.

ஆனால் அவள் அப்படி பேசுவதற்கு அர்த்தம் இருந்தது. ஊரிலிருந்து வந்திருக்கிற அம்மா இன்று கிளம்புகிறாள் என்று காலையில் தெரிந்ததுமே ‘செலவுக்கு வச்சுக்கம்மா’ என்று ராகவன் பணம் கொடுத்தபோது, ரமா பார்த்துவிட்டாள். அதை எப்படியாவது மாமியாரிடமிருந்து பிடுங்கிவிட வேண்டும் என்றுதான் இந்த கரிசன நாடகம்.

மாமியார் கிளம்பி ரமாவிடம் விடைபெறும் போது ரமா கேட்டாள், “அத்தே, உங்கப் பிள்ளை என் செலவுக்குன்னு பணமே தர்றது இல்லை. கேட்டா, ‘எல்லாம் நான்தான் வாங்கி வந்து போட்டுடறேனே. அப்புறம் உனக்கு ஏன் தனியாப் பணம்? ’ன்னு கேட்கறார். வீட்ல கைக்குழந்தை இருக்கு. திடீர்னு அதுக்கு ஒண்ணுன்னா டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போகக்கூட அவசர செலவுக்குன்னு வீட்ல பத்து பைசா இல்லை. நீங்க தப்பா எடுத்துக்க லேன்னா உங்ககிட்ட பணம் ஏதாவது இருந்தா கொடுத்துட்டு போங்க அத்தே”.

ரமாவின் பேச்சு மிக இயல்பாய் இருந்தது.

மகன் கொடுத்த பணத்துடன் ஆட்டோவுக் கென்று எடுத்து வைத்திருந்த பணத்தையும் சேர்த்து ரமாவிடம் கொடுத்துவிட்டு, மூணு கிலோ மீட்டர் வெயிலில் நடந்தே பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள் ராகவனின் அம்மா.

“என்ன ராகவ்... காலையில இருந்து சந்தோஷமா இருக்கே? - ராகவனிடம் ஆபிஸ் நண்பன் குமார் கேட்டான்.

“என் மனைவி என்னைக்காவது ஒரு நாள் மனசு மாறி, என் அம்மாகிட்ட அன்பா நடந்துக்க மாட்டாளான்னு எதிர்பார்த்துட்டு இருந்தேண்டா. அவ இவ்வளவு சீக்கிரம் மாறுவாள்னு நினைக்கவே இல்லை”

தாமதமாய் கிளம்பிய அம்மாவிடம் தான் கோபமாய் பேசியதையும், அதற்கு ரமா பரிந்து வந்ததையும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான் ராகவன்.. உலகம் புரியாத அப்பாவியாய்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x