

மாபெரும் வெற்றிகளுக்குப் பின்னால் உழைப்பும் அர்ப்பணிப்பும் மட்டும் இருப்பதில்லை. தொடர்ச் சியான புறக்கணிப்புகளையும் அடக்குமுறை களையும் எதிர்த்துப் போராடும் துணிவும், சக மனிதர்கள் மீதான அக்கறையும்தான் தனிமனிதரோ நிறுவனமோ அடையும் வெற்றியை உறுதிசெய்கின்றன. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அடைந்திருக்கும் வெற்றி அந்த வகையானதுதான்.
புற்றுநோய்குறித்த பிரக்ஞையே இல்லாத நேரத்தில், புற்றுநோய்க்குச் சிகிச்சையே கிடையாது என்று அரசே நினைத்திருந்த காலகட்டத்தில், ஒரு சாதனைப் பெண்ணின் மனதில் சூல்கொண்ட வைராக்கியத்தின் வெற்றிக் கதையும் இதில் அடங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைக் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முனைப்பில் உருவான இந்த மருத்துவமனையைப் பற்றிய பதிவாக வெளியாகியிருக்கும் நூல் இது.
கல்லூரி வகுப்பறையில் சக மாணவர்கள் பார்வையில் படக்கூடாது என்பதற்காக திரைக்குப் பின்னால் அமரவைக்கப்பட்ட மாணவியாக இருந்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகி சாதனை படைத்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் வரலாற்றுடன் தொடங்குகிறது இப்புத்தகம். ஆண்களுக்குச் சரிசமமாகக் கல்வி பயில்வதா என்ற கண்டனங்களையும், கேலிப்பார்வைகளையும் தாண்டி வென்று காட்டிய அவர், புற்றுநோயால் தனது தங்கை மரணத்தைத் தழுவிய சம்பவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
பெண்களில் முதல்வர்
1925-ல் மருத்துவ மேல்படிப்புக்காக பிரிட்டன் சென்றிருந்த அவருக்கு ஒரு நம்பிக்கைச் செய்தி காத்திருந்தது. ராயல் மார்ஸ்டென் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று பூரணமாகக் குணமடைந்த பெண்ணைப் பார்த்த அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. புற்றுநோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம் என்று இந்தியர்கள் நினைத்திருந்த காலம் அது. தனது தங்கையைப் போல பிறரும் பாதிக்கப்படக் கூடாது என்று முடிவுசெய்த அவர், புற்றுநோய்க்கான மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்ற முடிவுடன் இந்தியா திரும்பினார். சென்னை சட்ட மேலவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
விரைவிலேயே அதன் துணைத் தலைவராகவும் உயர்ந்தார். இந்தப் பதவியில் அமர்ந்த முதல் பெண் அவர்தான். புற்றுநோயைப் போல், சமூகத்தை அரித்துக்கொண்டிருந்த பிற பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டுவதில் தீவிரமாக இருந்த அவருக்கு அந்தப் பதவி கைகொடுத்தது. தேவதாசி முறை ஒழிப்பு, விபச்சார ஒழிப்பு, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் அவரது முயற்சியால்தான் தீர்வு கிடைத்தது. அவரது முயற்சிகளுக்கு காந்தி முதல் பெரியார் வரை பல தலைவர்களின் ஆதரவும் கிடைத்தது. இதற்கிடையே ஆதரவற்ற பெண்களை அரவணைத்து தனது இல்லத்திலேயே தங்க வைத்தார் முத்துலட்சுமி ரெட்டி. அவரது இந்த கருணைதான் பின்னாட்களில் ‘அவ்வை இல்லம்’ எனும் பெயரில் பெண்கள் காப்பகம் உருவாகக் காரணமாக இருந்தது.
மகன் தாய்க்காற்றிய உதவி
புற்றுநோய் மருத்துவமனைக்கான அவசியம்குறித்து எத்தனையோ முறை பேசியும் அரசுத் தரப்பில் இருந்து எந்த வித உதவியும் கிடைக்காததால், ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்து நின்றார் முத்துலட்சுமி ரெட்டி. தனது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை புற்றுநோய் சிகிச்சை மேல்படிப்புக்காக அமெரிக்கா அனுப்பினார். தனது முயற்சிகளுக்குத் தனது மகன் துணை நிற்பார் என்று உறுதியாக நம்பினார்.
அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அமெரிக்காவிலிருந்து திரும்பிய டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அரசுப் பொது மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைத் தொடங்கும் முயற்சியில் இறங்கினார். புறக்கணிப்புகளும் அவமதிப்புகளும்தான் அவருக்கும் கிடைத்தன. அறச்சீற்றமும் நேர்மையும் மிக்க அவரால் அவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
1952-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற ராஜாஜி, முத்துலட்சுமி ரெட்டியை மேல்சபை உறுப்பினராக்க விரும்பினார். தன்னைத் தேடி வந்த வாய்ப்பையும், தனது லட்சியத்தை நிறைவேற்றவே பயன்படுத்திக்கொண்டார் முத்துலட்சுமி. புற்றுநோய் மருத்துவமனைக்காக நிலம் ஒதுக்கித் தரும்படி அவர் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் அடையாறு பகுதியில் காந்திநகர் உருவாகி வந்தது. அங்கு இரண்டு ஏக்கர் நிலப்பகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
துண்டு நிலம் என்றாலும் கிடைத்த இடத்தைப் பயன்படுத்தி மருத்துவமனை அமைக்கும் முயற்சியைத் தொடங்கினார். 1952 அக்டோபர் 10-ல் இம்மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நேரு கலந்துகொண்டார். புறநோயாளிகள் பகுதி, டிஸ்பென்ஸரி, எட்டு படுக்கைகள் கொண்ட மகளிர் வார்டு, நான்கு படுக்கைகள் கொண்ட ஆடவர் வார்டு, ஒரு அறுவை சிகிச்சைக் கூடம் என்று சிறிய அளவிலேயே மருத்துவமனை தொடங்கப்பட்டது. நோயாளிகளுக்குத் தனது வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளைத்தான் வழங்கினார் முத்துலட்சுமி ரெட்டி. இப்படி இந்த மருத்துவமனை உருவானதன் பின்னணியில் இருக்கும் போராட்டங்களை இப்புத்தகம் பதிவுசெய்கிறது.
முத்துலட்சுமி ரெட்டி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோ ருடன் இணைந்து, மருத்துவமனையில் என்னென்ன பணிகள் உண்டோ அனைத்தையும் செய்தவர் டாக்டர் சாந்தா. மருத்துவமனையின் வளர்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. அவருக்கும் பல சோதனைகள் காத்திருந்தன. புற்றுநோயாளிகளின் மீது இருந்த பரிவால் பல தடைகளைக் கடந்து வளர்ச்சி பெற்ற மருத்துவமனை இது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மருத்துவமனையின் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியதையும் ஆசிரியர் ராணிமைந்தன் பதிவுசெய்திருக்கிறார். மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், பிற ஊழியர்கள் என்று பலரிடம் சேகரித்த தகவல்களையும் விரிவாக எழுதியிருக்கிறார். இங்கு சிகிச்சை பெற்று புற்றுநோய் பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமானவர்களின் அனுபவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. புற்றுநோயை வெல்ல முடியும் என்று உறுதியாக நம்பிய டாக்டர் முத்துலட்சுமியின் கனவுகள் சாத்தியமான விதத்தைச் சொல்லும் இப்புத்தகம் இதுபோன்ற பணிகளைச் செய்ய பிறருக்கு ஊக்கம் தரும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.
அடையாறில் இன்னோர் ஆலமரம்,
ராணிமைந்தன்,
வெளியீடு: அடையாறு புற்றுநோய் அறக்கட்டளை, அமெரிக்கா.
விலை: ரூ. 150
தொடர்புக்கு:
தி கேன்ஸர் இன்ஸ்டிடியூட்,
அடையாறு, சென்னை 600 020.
தொலைபேசி: 044- 24911526, 24910754.