

சிறந்த சிறுகதைகள்
சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை, மேலை நாடுகளிலிருந்துதான் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் சுவீகரித்தோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா போன்ற சாதனையாளர்களின் பங்களிப்பால் தமிழ்ச் சிறுகதை தொடக்க நிலையிலேயே உயிர்ப்பையும் வளத்தையும் நுட்பங்களையும் பெற்றுவிட்டது.
தமிழின் வளமான சிறுகதை மரபின் தொடர்ச்சியாக, இராஜேந்திர சோழன் எழுதி, எண்பதுகளில் வெளியான ‘எட்டு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு பேசப்பட்டது. மனிதனின் கோணல்களையும் பிறழ்வுகளையும் நுட்பமாகப் பேசிய அசலான சிறுகதைக்காரர் இராஜேந்திர சோழன். வடக்குத் தமிழ்நாட்டு கிராமிய வாழ்வுதான் இவரது கதை நிலப்பரப்பு.
மனித வாழ்வை பொருளாதாரத்துக்கு அடுத்து நிர்ணயிக்கும் அம்சமாக இருக்கும் பாலியல் உணர்வு குறித்த நுட்பமான பார்வை இவரது கதைகளின் அடிப்படையாக இருக்கிறது. ‘எட்டு கதைகள்’ தொகுதியில் உள்ள ‘புற்றிலுறையும் பாம்புகள்’ தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
இராஜேந்திர சோழனின் இதர படைப்புகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயலாற்றியவர். அஸ்வகோஷ் என்ற பெயரில் நாடகங்களையும் எழுதியுள்ளார். மாற்று நாடக அரங்கம்குறித்து ‘அரங்க ஆட்டம்’ என்னும் நூலையும் எழுதியுள்ளார். நெருக்கடி நிலை காலகட்டத்தில், ‘விசாரணை’ என்ற இவரது நாடகம் பார்வையாளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
என்ன சொல்கிறார்கள்?
“இராஜேந்திர சோழன், தத்துவக் கோட்பாடு களுக்குள் சுருங்க மறுத்து, தன் அனுபவச் செழுமையில் நின்று வாழ்வின் அவலங்களைக் காட்டும் துணிச்சலான கதைகளை எழுதியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார் சுந்தர ராமசாமி.
எட்டு கதைகள்
இராஜேந்திரசோழன்
வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை-606 601
தொலைபேசி: 04175-251468
விலை: ரூ.100/-
நண்பனின் நினைவுகள்
பாலுமகேந்திராவின் ஐம்பது ஆண்டு கால நண்பரும், மூத்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவருமான செ.கணேச லிங்கன் எழுதிய நினைவுக்குறிப்புகள் இவை. சினிமாவே உனது எதிர்காலம் என்று சொல்லி பாலுமகேந்திராவை இலங்கையிலிருந்து அனுப்பிவைத்தது தொடங்கி, பாலுமகேந்திராவின் இறுதிக்காலம் வரை அவரது வாழ்வை நெருங்கிப் பார்க்க வைக்கிறது இந்தப் புத்தகம்.
சிதறலான, சுருக்கமான நினைவுகூரல்களாய், வெட்டென்று தாவிப் போகும் உணர்வைக் கொடுத்தாலும் பாலும கேந்திரா ரசிகர்கள் அறிந்துகொள்ளப் பல செய்திகள் இதில் உள்ளன. பாலுமகேந்திரா சந்தித்த அந்தரங்கமான நெருக்கடிகள்குறித்து சில தெரியவராத செய்திகளும் இப்புத்தகத்தில் சொல்லப்படுகின்றன. பாலுமகேந்திரா என்ற திரைக் கலைஞரின் பயணத்தை அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு உதவும் நூல் இது.
பாலுமகேந்திரா நினைவுகள்
செ.கணேசலிங்கன்
குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு,
வழி: குமரன் காலனி, 7-வது தெரு,
வடபழனி, சென்னை-26.
விலை: ரூ.60/-