

கவிஞர் குவளைக் கண்ணன் 3. 11.1964-ல் சேலத்தில் பிறந்தவர்; இயற்பெயர் ரவிக்குமார். முதல் கவிதைக் தொகுப்பு ‘மாயாபஜார்’ 1993-ல் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பே பல வருடங்கள் இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்தார். புதுக்கவிதை முன்னோடி களில் ஒருவரான சி.மணியுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார். தன் கவிதைக்கான நுட்பங்களையும் வடிவங்களையும் அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டார். சி. மணியின் கவிதைகளில் உள்ள கேலிகளையும் நக்கலையும் நையாண்டியையும் எடுத்துக்கொண்டார்.
கவிஞர் ஞானக்கூத்தன் கவிதைகள் மீதும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் தாக்கத்தை அவரது கவிதைகளில் பார்க்க முடியும்.
கவிதைகள் மட்டுமின்றி இலக்கியத்தின் பிற வடிவங்களான சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் என எல்லாத் துறைகள் மீதும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதே சமயத்தில் உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் வழியாக வாசித்துக்கொண்டிருப்பார்.
ஆப்பிரிக்கப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தமிழுக்கும் தமிழ்ச் சூழலுக்கும் பொருந்துகிற சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். எங்கே அந்தப் பாடல்கள் என்ற பெயரில் அது புத்தகமாக வெளிவந்துள்ளது. அதேபோல ஜப்பானியப் பெண் கவிதைகள் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். ஆனால் இவை இன்னும் புத்தகமாக்கப்படவில்லை. இந்தத் தொகுப்புகள் மூலம் உலக பெண் கவிஞர்கள் இயங்குகிற பல வெளிகளையும் பல பாடுபொருட்களையும் தமிழ்ப் பெண் கவிஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று அக்கறை கொண்டிருந்தார்.
குவளைக் கண்ணன் கடைசியாக கடோஉபநிஷதத்தில் நசிகேதனுக்கும் எமனுக்கும் நடக்கும் மரணத்தைப் பற்றி உரையாடலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்தப் புத்தகத்திற்கு ‘மரணத்துடன் ஒரு உரையாடல்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார். இப்புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற அவருடைய ஆவல் நிறைவேறுவதற்குள் மரணம் அவரை அணைத்துக் கொண்டுவிட்டது.
சிபிச்செல்வன், கவிஞர், மலைகள் இணைய இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: sibichelvan@gmail.com