Last Updated : 24 May, 2015 11:36 AM

 

Published : 24 May 2015 11:36 AM
Last Updated : 24 May 2015 11:36 AM

இரணிய நாடகத்தின் புதிய எழுச்சி

தஞ்சை குழந்தை வளநாட்டைச் சார்ந்த ஆர்சுத்திப் பட்டு என்னும் கிராமத்தில் இவ்வாண்டு 369-ம் ஆண்டாக ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய நாட்களில் இரணிய நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூத்து வடிவில் சம்பிரதாயம் மாறாமல் இந்நாடகம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நரசிம்ம ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற நாடக நிகழ்வில் தமிழகம் முழுவதிலுமிருந்து நவீன நாடகக் காரர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்சுத்திப்பட்டில் நடைபெறும் இரணிய நாடகம் தொழில்முறைக் குழுவால் நடத்தப்பெறும் நாடகமல்ல. மாறாக, மொத்தக் கிராம சமூகமே பங்கேற்கும் குமுக நாடகம் (Community Theatre). இத்தகைய நாடகங்கள் தஞ்சையில் மட்டுமின்றி வடக்கு, மேற்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் நடைபெற்றுவருகின்றன. தஞ்சையைப் பொறுத்தவரை இரணிய நாடகம் தவிர, மன்மத நாடகம், அரவான் களப்பலி நாடகம், சிவராத்திரி மகிமையை விளக்கும் வேடன் சரித்திரம், வைகுண்ட ஏகாதசி மகிமையை விளக்கும் ருக்மாங்கத நாடகம், சிறுத்தொண்டர் நாடகம், மனுநீதிச் சோழ நாடகம், ஐயனார் நாடகம் ஆகியவை நடைபெற்றுவருகின்றன.

சடங்கும் நாடக ஒத்திகையும்

நடிகர்கள் பெரும்பாலும் விவசாய அல்லது கைவினைப் பின்புலம் கொண்டவர்கள். நாடக நிகழ்வுக்கு முன்பு ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள், விரதமிருந்து நாடக ஒத்திகையை மேற்கொள்கிறார்கள். இது ‘பள்ளிக்கூடம்’எனப்படுகிறது. குழந் தைகள் சிறு வயதிலிருந்தே ஆடல், பாடல் பயில்கிறார்கள். முதல் நாள் பெரும்பாலும் சிறுவர்கள் வேடமிட்டு நடிக்க, கடைசி நாள் வயது முதிர்ந்த நடிகர்கள் மேடையில் தோன்றக் காணலாம்.

தமிழ்நாட்டுக் கூத்தின் பொது மரபுக்கு ஏற்ப ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தாலும் சில ஊர்களில் பருவமடையாத பெண்கள் பிரகலாதனாகவும், லீலாவதியாகவும் நடிப்பதுண்டு.

ஆர்சுத்திப்பட்டு, நார்த்தேவன்குடிக்காடு, வடக்கு நத்தம், மேலத்திருபுவனம், கீழத்திருபுவனம் ஆகிய ஊர்களில் இரணிய நாடகம் நடத்துவதில் தனித்துவமான பாணி காணப்படுகிறது. நரசிம்மம் தவிரப் பிற பாத்திரங்களையெல்லாம் ஒரே நேரத்தில் இரண்டிரண்டு நடிகர்கள் நடிக்கிறார்கள். ஒன்று என்பதற்கு மாறாக வரும் இரண்டிரண்டு கதாபாத்திரங்கள் பன்மையின், அதாவது மொத்தச் சமூகத்தின் குறியீடாகின்றன.

தஞ்சாவூர் வட்டாரத்தில் வழங்கும் இரணிய நாடகத்தில் அமைந்துள்ள நாடகவெளி அடிப்படையில் நீளவாக்கில் அமைந்த அசைவியக்கத்தால் உருவாக்கப்படுவதாகும். இத்தகைய நீளவாக்கில் அமைந்த அசைவியக்கம் தஞ்சாவூர்ப் பாணிக் கூத்துக்கே உரியது. இதுவே வட்டவடிவில் அமைந்த வட தமிழ்நாட்டுக் கூத்திலிருந்து தஞ்சாவூர்க் கூத்தை வேறுபடுத்து கிறது. நடிகர்களின் அசைவியக்கம் மேடைவெளியைத் தாண்டிப் பார்வையாளர் பகுதிக்குள் நீள்கிறது. அதாவது, மேடைப் பகுதி, பார்வையாளர் பகுதி என்ற பிரிவினை இங்கே தெளிவும் துல்லியமும் அற்று அமைந்திருக்கக் காணலாம். உண்மையில், இந்நிலை மேடை நிகழ்வுக்குத் துணைசெய்கிறது; அந்த மேடை நிகழ்வால் வலியுறுத்தவும்படுகிறது.

உக்கிரம் கொள்ளும் இரணியன்

மூன்று அல்லது நான்கு நாட்கள் நாடகம் நடக்கும்போது, மேடையில் நிகழும் நிகழ்த்துதல் கதையில் ஏற்படும் தீவிரத்துக்கு ஏற்ப மாறுவதைக் காணலாம். மேடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இரணியன் பாத்திரம் படிப்படியாய் உக்கிரமடைகிறது. பலகைக் கட்டிலிலிருந்து தாவி மற்ற பாத்திரங்களை மேடைப்பகுதியின் விளிம்புவரை விரட்டிச் செல்கிறான் இரணியன். எனவே, நாடகவெளியை நீளச்செய்வதன் மூலம் தனது பாத்திரத்தின் வெளியை ஒருவகையில் விரிவடையச் செய்கிறான் இரணியன்.

இவ்வாறு இரணியன் தனது வெளியை விரித்துக்கொண்டே செல்வதன் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே நாடகத்தின் இறுதிப் பகுதியில் நரசிம்மம் தோன்றுகிறது. மேடையின் விளிம்பில் பார்வையாளர்களை ஒட்டியபடியும் இரணியனை நோக்கியபடியும் வந்து அமர்கிறது நரசிம்மம். பிறகு இருவருக்கும் இடையில் நடக்கும் தர்க்கம் மற்றும் போரின்போது இருவரும் தீவிரமான ஆவேசத்துக்கு ஆட்படுகிறார்கள். அருளுற்ற நரசிம்மத்தை மூன்று அல்லது நான்கு பேர் தாங்கிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. இருவருக்கும் இடையிலான வெளி இரண்டு முறுக்கப்பட்ட வேட்டிகளால் பிரிக்கப்படுகிறது. இந்தத் தடுப்புகள் இல்லாவிட்டால் ஆவேசமுற்ற நடிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மேடையில் நிஜக்கொலை நிகழும் என்று கிராமத்தார் நம்புகிறார்கள் நாடகத்தின் போக்கில் இருவருக்குமான இடைவெளி நரசிம்மம் முன்னேற முன்னேறச் சுருங்குகிறது. உச்சகணத்தில் ஆவேசமுற்ற இரணியன் மயக்கமடைய, அவனை மேடையின் பின்புறத்தில் இருக்கும் ஒப்பனை அறைக்குத் தூக்கிச் செல்கிறார்கள். இதற்குச் சற்றுமுன் இரணியனின் முடியை அவனைத் தாங்கிப் பிடித்திருக்கிறவர்களே அசைத்துக் கழற்றுகிறார்கள். அதைக் கழற்றிய கணத்தில் இரணியன் மயக்கமடைகிறான். எனவே, இரணியனின் அந்த முடியே அவனது அதிகாரத்தின் குறியீடாகிறது. அதாவது அந்த முடியை இழப்பது என்பது அவன் தன் சிம்மாசனத்தை இழந்து இறப்பை எதிர்கொள்வதாகும்.

சங்கத்தமிழ் நூலான பரிபாடலிலேயே இரணியன்/பிரகலாதன் கதை இடம்பெற்றிருக்கிறது. அதன் பிறகு ஆழ்வார்களின் பாடல்களில் இது ஆங்காங்கே இடம்பெறுகிறது. கம்பராமாயணத்தில் இடம்பெறும் இரணிய வதைப் படலமும், செவ்வைச் சூடுவார் மற்றும் அருளாளதாசர் இயற்றிய பாகவத புராணங்களும் இக்கதையை விரித்துரைக்கின்றன. பிற்காலப் பிரபந்தங்கள் பலவற்றிலும், தல புராணங்களிலும் இக்கதை இடம்பெறுகிறது.

பாரதிதாசனின் இரணியன் அல்லது இணையற்ற வீரன்

இக்கதையை முற்றிலும் வேறுபட்ட வடிவில் சொல்லும் மூன்று பனுவல்கள் உள்ளன. முதலாவது நீண்டகாலம் தடைசெய் யப்பட்டிருந்த பாரதிதாசனின் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் நாடகம். இதில் இரணியன் ஆரியர் சூழ்ச்சியால் கொல்லப்படும் திராவிட வீரனாகச் சித்திரிக்கப்படுகிறார். அடுத்தது, தியாகய்யரின் பிரகலாத பக்த விஜயம் என்னும் நாடகம். இதில் பிரகலாதனுடைய பக்தியே மையப்பொருளாக மாறிவிடுகிறது. இரணியனுக்கும் நரசிம்மத்துக்கும் இடையிலான போர், அதன் முடிவில் நடைபெறும் இரணிய சம்ஹாரம் ஆகியவை இதில் இடம்பெறவில்லை. இங்கு ஒருவிதத்தில் மேலோங்கிய பக்தியில் நரசிம்ம அவதாரமே தேவையற்றதாகிவிடுகிறது. மூன்றாவதாக, ஆசிரியர் பெயர் தெரியாத இரணிய வதைப் பரணி என்கிற பிரபந்தம். இதில் இரணியனைச் சம்ஹாரம் செய்த பிறகு நரசிம்மம் பிரகலாதனிடம் அவன் கண்முன்னேயே அவன் தந்தையைக் கொன்றதற்காகத் தன்னைப் பொறுத்தருள வேண்டுகிறது.

தஞ்சை வட்டாரத்து நாடகங்கள் பலவும் (இரணிய நாடகம் உட்பட) கையெழுத்துப் பனுவல்களாகவே உள்ளன. இசை நாடகம்போல், திரைப்பட மெட்டுகள் வந்து கலவாத இப்பனுவல்கள் பெரும்பாலும் விருத்தங்களாலும், தருக்களாலும் அமைந்தவை. பாரம்பரியமான ராகதாளங்களும், அடவுகளும் தொடர்ந்து காப்பாற்றப்பட்டுவருகின்றன.

ஊருக்கு ஏற்றபடி ஓர் இரவிலிருந்து நான்கு இரவுகள்வரை நடைபெறுகிறது இரணிய நாடகம். ஆர்சுத்திப்பட்டில் கடைசி நாளான மூன்றாம் நாள் விடியற்காலையில் பட்டாபிசேகத்தோடு நிறைவுபெறுகிறது. சுவாமிக்குத் தீபாராதனை காட்டப்பட்டுப் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. பெண்கள் ஆடுகளத்தில் மாவிளக்குப் போடுகின்றனர். இதன்பிறகு நடிகர்கள் ஊரை வலம்வரும்போது ஒவ்வொரு வீட்டுவாசலிலும் அவர்களுக்கு வழக்கமான மரியாதைசெய்யப்படுகிறது.

இரணிய நாடகத்தைப் பொறுத்தவரை நரசிம்மம் நாடக ஆடுகளத்தில் பிரத்தியட்சமாகப் பிரசன்னமாவது மிக முக்கியமானதாகும். சுவாமியுடைய திருமுகத்தை (அல்லது முகம், தலை, சிரசு) சூடும் கணத்திலிருந்து அவ்வேடம் ஏற்கும் நடிகர் தொடர்ந்து அருளுற்ற நிலையில் இருப்பார். சுவாமியின் திருமுகம் மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும் அதனுள் சுவாமி உறைவதாகவும் கருதப்படுகிறது. இத்திருமுகம் பெரும்பாலும் கோவில் அல்லது ஏதாவது ஒரு மடத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. நாடகம் இல்லாத சாதாரண நாட்களிலும் இத்திருமுகம் ஒரு வழிபாட்டுக்குரிய பொருளாகவே கருதப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நாடகம் தொடங்கும் முன்னர் சுவாமி திருமுகத்துக்குச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இது இரணிய நாடகம் முழுக்க முழுக்க ஒரு சடங்கியல் நாடகம் என்பதைக் காட்டுகிறது. இந்த நாடகத்தின் அழகியல் அம்சம், வழிபாடு என்ற நிலையைத் தாண்டி இதை ஓர் உன்னதமான கலைப்படைப்பாகவும் ஆக்குகிறது.

தொடர்புக்கு: sundarkali@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x