Last Updated : 30 May, 2015 10:29 AM

 

Published : 30 May 2015 10:29 AM
Last Updated : 30 May 2015 10:29 AM

ரசனையின் சாரம்

கம்பராமாயணத்தை இன்று தமிழக மக்கள் அறிவதற்கும் ரசிப்பதற்கும் காரணமாக இருந்தவர் ரசிகமணி டி.கே.சி. 1881-ல் பிறந்து 1945-ல் மறைந்த டி.கே.சிதம்பரநாத முதலியார் தமிழிசை இயக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். கடித இலக்கியம் மற்றும் கட்டுரை களால் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தவர்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென் காசியில் வசித்தபடி, தமிழகம் முழுவதும் இருந்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ரசனையாளர்களை தன் வீட்டில் வரவேற்று உபசரித்து மகிழ்ந்த புரவலரும்கூட. தமிழில் ‘கடித இலக்கியம்’என்ற தனி வகைமையை உருவாக்கிய முன்னோடி டி.கே.சி. கலிங்கத்துப்பரணி, பாரதியார் பாடல்கள், ஆண்டாள் கவிதைகள் எனத் தமிழ்க் கவிதையில் ஊறியவர். கவிதையை எப்படி ரசிக்க வேண்டும் என்பதற்கு இன்னும் ரசிகமணியின் கட்டுரைகள் வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

ரசிகமணி ரசனைத்தடம் என்ற இந்நூலில் கி.ரா, வல்லிக்கண்ணன், டி.கே.சி-யின் பேரன் தீத்தாரப்பன் முதல் பெ.தூரன் வரை எழுதியுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கம்பர் எழுதியதாகக் கூறப்பட்ட பத்தாயிரம் பாடல்களை முழுவதும் ஆய்ந்து, கம்பரின் பாடல்கள் நான்காயிரமே என்று சீர்தூக்கி மற்றவற்றைக் களைந்து கம்ப ராமாயணத்தைப் பதிப்பித்தவர் அவர். அப்போது எழுந்த சர்ச்சைகள்குறித்து ராஜாஜியும் சுஜாதாவும் தங்கள் கட்டுரைகளில் பேசுகின்றனர்.

ரசிகமணியின் தனிப்பட்ட குணநலன்கள் குறித்தும் அவரது உறவினர்களும் கட்டுரை களைப் பகிர்ந்துள்ளனர். ஒரு தேர்ந்த கவிதை ரசிகராகவும், மணியான மனிதராகவும், தெளிந்த ஞானியாகவும் இப்புத்தகம் மூலம் ரசிகமணி வெளிப்படுகிறார். டி.கே.சி-யின் ஆளுமை மற்றும் அவரது பங்களிப்புகள்குறித்து தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் அருமையான வழிகாட்டி. அரிதான புகைப்படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ரசிகமணி ரசனைத் தடம்

தொகுப்பாசிரியர்: பேரா. சண்முக சுந்தரம்

காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,

கோடம்பாக்கம், சென்னை-24

தொடர்புக்கு: 044- 23726882

விலை: ரூ.250

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x