

பேராசிரியர் அருணன் எழுதிய ‘கடவுளின் கதை’என்ற நூலைச் சமீபத்தில் வாசித்தேன். 2,000 பக்கங்களுடன் 5 தொகுதிகளாக வந்துள்ள இந்த நூல், கடவுள்கள் தோன்றிய கதையை உலக வரலாற்றோடு சேர்த்துச் சொல்கிறது. கடவுள் உருவானபோதே முற்போக்குச் சிந்தனைகளும் கூடவே மூடநம்பிக்கை விஷயங்களும் சேர்ந்தே வளர்கிற போக்கை நுட்பமாக எழுதியுள்ளார் அருணன். தமிழிலக்கியத்தில் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையோடு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட மிக முக்கியமான நூல் இது.
1990-களுக்குப் பிறகு உருவான தாராளமயக் கொள்கை சாமானிய மக்களை எவ்விதம் பாதிக்கிறது என்பதை என்னுடைய வாழ்க்கை சார்ந்து ஒரு நாவலாக எழுதிவருகிறேன். இடதுசாரி இயக்கம் தாராளமயக் கொள்கையை எப்படி எதிர்கொண்டது, அதை முறியடிக்க எவ்விதம் போராடியது என்பதே இந்த நாவலின் சாரம். சென்ற தலைமுறை அனுபவித்த ஜனநாயகத்துக்கும், இன்றைய பணப் பட்டுவாடா ஜனநாயகத்தில் நாம் அனுபவிப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளே நான் எழுதுகிற நாவலின் மையப்புள்ளி.
சுண்டல்
சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ‘2014-ம் ஆண்டுக்கான ‘கிராஸ்வேர்டு புக்ஸ் அவார்டு’ கிடைத்துள்ளது. இந்த நாவலை ஆங்கிலத்தில் ‘சில்ரன், விமன், மென்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளவர் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம். இரண்டாம் உலகப் போர் அறிவிக்கப்படும் தினத்தில் கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இடம்பெயரும் தமிழ் பிராமணக் குடும்பத்தினரின் கதை என்று சுருக்கமாகச் சொல்லலாம். பாலு என்ற சிறுவனின் கண்கள் வழியாக விரியும் இந்நாவலில், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் சுயசரிதைக் கூறுகளும் உண்டு. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் வரும் பாலுவுக்கும், அவரது முந்தைய நாவலான ஜே.ஜே சில குறிப்புகளில் லட்சிய கதாபாத்திரம் ஜோசப் ஜேம்ஸைப் பற்றிய தகவல்களைத் தரும் பாலுவுக்கும் ஒற்றுமைகள் உண்டு.