

சாதியின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பைப் பற்றிதான் எவ்வளவு விவாதங்கள்! ‘சாதியும் வர்ணமும் மனித நாகரிகத்துக்கு இந்தியா அளித்துள்ள கொடை’ என்று உலகத்திடம் விவாதிக்கிற இந்திய அறிவாளிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எனினும், நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. தலித் சுயமரியாதை சக்தியின் மூலமாக மக்கள் பணியாற்றும் இந்த நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி ஆசிரியரும் கூட. அவர் இடதுசாரிக் கருத்துகளில் நம்பிக்கை கொண்டவர். ஆனால், சமூகப் பணிகளில் காந்தியையும் டாக்டர் அம்பேத்கரையும் முன்னிறுத்துகிறார். சாதி சமத்துவத்தையும் அதன் வழியாக ஜனநாயகத்தையும் வலியுறுத்துகிறார்.
எங்கெல்லாம் சாதியத் தாக்குதல்களும் மோதல் களும் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் சென்று ஆதிக்க சாதியினரிடையே ஓர் உரையாடலை நடத்துகிற சமூக நல்லிணக்க அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்கிறார். டாக்டர் அம்பேத்கரையும் காந்தியையும் ஒருசேர உயர்த்திப்பிடிக்கிறது இந்த அணுகுமுறை. தர்மபுரியில் தலித் மக்கள் குடியிருப்புகளின் மீது நடந்த தாக்குதல் சம்பவமும் நூலாசிரியரின் ஆய்வில் தப்பவில்லை. இருதரப்பு மக்களும் ஒன்றுபட்டு வழிபட்ட கொடைக்காரி அம்மன் கோயில் பிரச்சினையும் அதை மாவட்ட நிர்வாகம் கையாண்ட முறையும்தான் மக்களின் துன்பங்களுக்குக் காரணம் என்கிறது நூல்.
தங்களின் வாழ்நாள் முழுவதும் முரணியக்கமாகச் செயல்பட்ட இரண்டு மாபெரும் தலைவர்களின் சிந்தனைப் போக்கின் இணைப்பு மக்களின் ஒற்றுமைக்குப் பயன்படுகிறது என்றால், அந்தத் தலைவர்களின் லட்சியங்களுக்கு அதைவிட பெரிய அஞ்சலி வேறு எதுவாக இருக்க முடியும்?
சாதி உணர்வைப் பயன்படுத்தி அரசியல் லாபம் அடைய நினைப்பவர்களை அந்தந்த சாதிகளைச் சேர்ந்த மக்களே தனிமைப்படுத்த வேண்டும் என்று அழைக்கும் இந்த நூல், நமது காலத்தின் ஜனநாயகக் குரல்களுள் ஒன்று.
ஒடுக்கப்பட்ட சாதிகள்: இறையாண்மை, அரசு, அமைப்புகள்
ஆசிரியர்: ச. சிவலிங்கம்
விலை: ரூ. 180,
வெளியீடு:
புலம்
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-05.
தொடர்புக்கு: 98406 03499