Published : 10 May 2015 01:07 PM
Last Updated : 10 May 2015 01:07 PM

தாய்மையின் உணர்வு கவிதை: தேவதச்சன் நேர்காணல்

தேவதச்சன் என்னும் பெயரில் எழுதிவரும் எஸ்.ஆறுமுகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்; சமகாலத் தமிழ்க் கவிதையை உலகளாவிய பொதுத் தளத்திற்கு நகர்த்தியவர். இவரது கவிதைகள் தமிழ் மரபின் கவிச்செழுமையைப் பறைசாற்றுபவை. 'அவரவர் கைமணல்', 'அத்துவான வேளை', 'கடைசி டினோசார்', 'யாருமற்ற நிழல்' உள்ளிட்ட ஏழு தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

உங்களுடைய கவிதைகளில் சாதாரணமான மனிதர்கள், நிகழ்வுகள் அதிகமாக இடம் பெறுகின்றனவே?

பொதுவாகவே அன்றாடம்தான் கவிதையின் பாடுபொருள். அதேசமயம் கவிதை அன்றாடத்தைக் கேள்விக் குள்ளாக்குகிறது. ஒரு கவிதையை வாசிக்கும்போது ஏற்கனவே உள்ள அனுபவ சேகரங்களிலிருந்து துண்டிக்கப்படுகிறீர்கள். பின்னர் அது உங்களை உலகத்துடன் மறு இணைப்பு செய்கிறது. கவிஞன் ஏற்கனவே உள்ள உங்கள் சிந்தனைத் தொகுப்பை மறு உருவாக்கம் செய்கிறான். சிந்தனைகளில் படிந்துள்ள போதாமைகளை அகற்றுகிறான். இந்த மறு உருவாக்கத்தில்தான் கவிதையின் உண்மையான சவால் இருக்கிறது. ஒரு கவிதையை வாசித்த பிறகு துண்டிக்கப்படுகிற இடத்தில் இருந்து மீண்டும் எவ்வாறு உலகத்தோடு இணைகிறோம் என்பதில் ஒரு ரகசியத் தன்மையும் இருக்கிறது.

உலக நெருக்கடிகளில் கவிஞனின் பங்கு என்ன?

ஒரே சமயத்தில் நாம் நினைவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிறோம். நினைவுக்குள் உள்ள மனிதன் ஒரு வரலாற்று மனிதனாகவும் மிகப் பெரிய மனிதனாகவும் இருக்கிறான். நினைவுக்கு வெளியில் உள்ள மனிதன்தான் சிருஷ்டி. கவிதையின் வேர்கள் அறியாதவற்றின் சிருஷ்டியில்தான் இருக்கிறது. ஒரு கவிதையைப் படித்த பின்பு நாம் மொழிவழியாக உலகத் துடன் இணைவதில்லை. சிருஷ்டி வழியாகத்தான் இணைகிறோம். சிருஷ்டி வழியாக இணையும்போது புத்துணர்ச்சி அடைகிறோம். பழக்கத்திலிருந்து வெளியே வந்துவிடுகிறோம். குழந்தை எப்படிக் கருவில் நுழைந்ததோ அந்த கணம் மீண்டும் கவிதையில் மறு அழைப்பு செய்யப்படுகிறது.

கவிதை மூலம் அன்றாடத்தில் ஒரு மர்மத்தை உருவாக்குபவர் என்று உங்களைச் சொல்லலாமா?

அன்றாடம் இடையறாத மாற்றங்களால் ஆனது இல்லையா? மனிதன் அன்றாடத் திற்குப் பயப்படுவான். இல்லை என்றால் குறிப்பிட்ட வகையான மாற்றங்களை மட்டும் அன்றாடத்தில் எதிர்பார்ப்பான். கவிதை எதிர்பார்க்கும் மாற்றம் அன்றாடத்தைப் பற்றிய பழக்கமான கணிதத்திற்கு அப் பாற்பட்டது. கவிதை மாற்றங்களைச் சார்ந்து இருக்கிறது. அது போலவே மாற்றமும் எல்லாக் கணிதத்திற்கும் அப்பாற்பட்ட தாக இருக்கிறது. தினசரி வாழ்வின் சகல அடுக்குகளிலும் உள்ள துயரங்களையும், சஞ்சலங்களையும், வலிகளையும் அதிகார மின்மையில் இருந்து கவிஞன் உரையாடு கிறான். இந்தப் பண்பு அவனுக்கு குழந்தைத் தன்மையைத் தருகிறது.ஒரு புள்ளிக்கு மேலே உலகின் மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் சக்தியும், ஆற்றலும் குழந்தைமையிடம் மட்டுமே இருக்கிறது. வார்த்தையை விட்டுவிட்டு அதிகாரமின்மையின் குழந்தைமையிலிருந்து தாய்மையாக விரிவுபடுத்துகிறான். இதுதான் கவிதையின் தத்துவம். கவிதையின் தத்துவம் தந்தை அல்ல. தாய். அது தாய்மையின் உணர்வு.

சமூக உள்ளடக்கத்திற்கு வெளியே நீங்கள் நகர்ந்துவிடுகிறீர்கள் போல் தோன்றுகிறதே?

இங்கே பலர் சமூக உள்ளடக்கத்திற்குப் பொறுப்பு எடுத்துக்கொள்கிறார்கள். அதில் பிரச்சினை இல்லை. கவிதைக்குள் கருப்பொருளைத் திறக்க வேண்டும்.அதுதான் பிரச்சினை. கருப்பொருளைத் திறக்காமல் சமூக உள்ளடக்கத்திற்கு மட்டும் பொறுப்பேற்று ஒன்றும் செய்வதற்கில்லை. கவிதையில் கருப்பொருளாய் இருக்கும் கனவும் திறக்கணும்.

இதைக் கூடுதலாக விளக்க முடியுமா?

நமக்கு இரண்டு தன்னிலைகள் இருக்கின்றன. அன்றாடத்திற்கான தன்னிலை மற்றும் நினைவின் தன்னிலை. தினசரிக்கான தன்னிலை மின்சாரக் கட்டணம் எப்போது செலுத்துவது? எங்கே இனிப்பு வாங்குவது? போன்றவற்றை யோசிக்கும்; செயல்படும். நினைவின் தன்னிலைதான் நான் உபயோகமான மனிதன்தானா, நான் போதாமையிலேயே வாழ்ந்துவருகிறேனா என்பதையெல்லாம் பரிசீலித்துக் கேள்வி களைத் தூண்டும். கவிதை நினைவின் தன்னிலையை இயங்கச் செய்யுது.

கவிதை பின்நவீன நிலையில் சமூக, அரசியல் உள்ளடக்கத்தைக் கைவிட நினைக்கிறதாகப் பார்க்க முடியுமா?

சமூக மாற்றத்துக்கான காரணியாக கவிதை இருக்க வேண்டுமென இங்கே ஒரு தரப்பு இருக்கு. கவிதை ஏற்றுக்கொண்டிருக்கிற ஏழெட்டு வேலைகளில் அது ஒன்று மட்டும்தான். அதை மட்டும் முன்வைத்துப் படைப்பை முடிவு செய்ய முடியாது. கவிதையில் மாயம் எங்கே நடக்குதுங்கிறது பெரிய மர்மம். பிற வேலைகள் அனைத்தையும் கவிதையில் ஆற்றக்கூடியது கவிதையில் உள்ள இந்த மர்மம்தான். கவிதையில் நடைபெறும் மாயத்தன்மை நாம நினைப்பதுபோல முதல் வரியில் ஆரம்பிப்பதில்லை. எட்டாவது வரியிலோ, ஏழிலோ இரண்டிலோ எங்கேயாவது ஆரம்பிக்கும். என்னுடைய கவிதையின் மர்மங்களைப் பழமொழிகளில் இருந்து எடுக்கப் பார்க்கிறேன்.

சமூக அரசியல் உள்ளடக்கம் எப்படி மாறிவருவ தாகக் கருதுகிறீர்கள்?

1920-ல் ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் சுப்ரமணிய பாரதி. திருநெல்வேலிப் பையன். அவனுக்கு ஒரு அரசியல் கேள்வி இருந்தது. காந்தி வழியில் செல்வதா, திலகர் வழியில் செல்வதா என்று. முப்பதுகளின் இளைஞன் பெரியார் வழியா, காந்தி வழியா என்று கேள்வியை எதிர்கொள்கிறான். 1950-ல் ஒரு பையன் வருகிறான். அவன் பெயர் சுந்தர ராமசாமி. அவனுக்கு ஒரு கேள்வி ஜீவா வழியில் போகவா, அல்லது திராவிட இயக்க வழி சரியா என்பது. 1960-ல் நா.காமராசன், சிற்பி. திராவிட இயக்கமா, இடதுசாரிகளா என்று யோசிக்கிறார்கள். எனக்கு சி.பி.எம். வழியா எம்.எல். வழியா என்பது கேள்வி. ஒவ்வொரு இருபது வயதிலும் ஒரு இளைஞன் அந்தக் காலகட்டத்தின் சமூக, அரசியல் கேள்வியை எதிர்கொள்கிறான். அது அவனது அணுகுமுறையை நிர்ணயிக்கிறது. கவிதையின் பொருள் அவனது காலகட்டத்தை எதிர்கொண்ட கேள்வியிலும் இருக்கிறது. முன்பு எழுதியதால் செவ்வியல் என்றோ, பின்னர் எழுதியதால் பின்நவீனம் என்றோ மதிப்பிட முடியாது.

தொண்ணூறுகளின் சமூக அரசியல் கேள்விகள் வேறு. இப்ப இருக்கிற இளை ஞனின் சவால்களும் வேறு. லஷ்மி மணிவண்ணன் வேறொரு வகை. யவனிகா ஸ்ரீராம் மற்றொரு வகை. யவனிகா ஸ்ரீராமிடம் அரசியல், அரசு பற்றி வெளிப்படையாக இருப்பவை மணிவண் ணனிடம் உள்ளார்ந்தவையாக இருக்கிறது. மணிவண்ணன் அகவியல் எழுத்து. ஆனால் சமூகக் காரணிகள் இருவருக்குமே பொதுவான சமூகப் பொருளாதாரக் காரணிகள்தான்.

ஒரு காலகட்டத்தின் சமூக அரசியல் கேள்வி களுக்குக் கவிதையில் உள்ள பங்கு என்ன?

இதைப் பலவாறு யோசிச்சுப் பார்த்திருக்கிறோம். ஆனா முடிவுக்கு வர முடியல. ஒரு ராணுவ ஆட்சி இருக்குதுன்னா அரசியல் எழுத்தின் நேரடித்தன்மையின் பொருள் விளங்குது. இந்தியா போன்ற நாட்டில் எது அரசியல் எழுத்து என்பதை வரையறை செய்வதில் சிக்கல் இருக்கிறது. உலகமயமாக்கல், கார்ப்பரேட்ஸ் எல்லாம் வந்த பிறகு மறு வரையறை செய்யவேண்டி இருக்கு. நமது வரையறைகள் எல்லாமே மாற வேண்டிய இடத்தில் நாம் இன்று நின்றுகொண்டிருக்கிறோம்.

தொடர்புக்கு: slatepublications@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x