Last Updated : 10 May, 2015 01:37 PM

 

Published : 10 May 2015 01:37 PM
Last Updated : 10 May 2015 01:37 PM

கவிஞன் கவிதை: ந.ஜயபாஸ்கரன் | சிறுசொற்களுக்குள் உறங்கும் கடல்

இவ்வுலகம் இனிது என்ற எளிய வார்த்தையில் தொடங்கியது புதுக் கவிதை. அதற்கெனத் திண்ணிய இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த அம்சத்தால் பல்வேறு சமூகப் பிரிவுகளில் இருந்து கவிதைகள் எழுந்தன. கவிதைக்குப் புதிய வாழ்க்கையும் சொற்களும் வந்து சேர்ந்தன; மொழி வளமடைந்தது. ஆனால் புதுக்கவிதை பிரபலம் அடைய அடைய அதன் இலக்கணங்கள் குறித்த விவாதங்கள் வரத் தொடங்கி, தீவிரமானது. சொற்களைப் பிரித்து, மடக்கி எழுதினால் அது கவிதையாகிவிடுமா என்ற கேள்வி எழுந்தது. கவிதைக்கு ஒரு வினோதத் தன்மை அவசியம் எனச் சொல்லப்பட்டது. கவிதையின் பாடுபொருள் என்ன, என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.

சீரும் தளையும் அறுக்கப்பட்ட பின்பு கவிதைக்குக் கவிதைத் தன்மையை அளிக்கக்கூடியவை அதன் உள்ளடுக்குகள் தாம். நகுலன் இதை உள்வியாபகம் என்கிறார். க.நா.சு. அசாதாரணம் என்கிறார். ஆக இதிலிருந்து வெறும் எளிய வடிவம் மட்டுமே கவிதைக்குப் போதுமானது அல்ல எனப் புரிந்துகொள்ளலாம். அதே சமயம் இங்கு அசாதாரணம் என்பது இறுக்கமான மொழிக் கட்டமைப்பு அல்ல; அதன் உட்பொருள்தான்.

இந்தப் பின்னணியில் இருந்து வாசிக்கும் போது ந. ஜயபாஸ்கரனின் கவிதைகளைப் புதுக்கவிதைக்கான முன்மாதிரியாகக் கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. வடிவ அளவில் ஜயபாஸ்கரனின் கவிதைகள் மிக எளியவை. திறந்துகிடக்கும் சொற்களைக் கொண்டவை. எந்தச் சொல்லுக்குள் நுழைந்தும் வெளியேறிவிட முடியும். ஆனால் உள்ளே அந்தச் சிறு சொற்களுக்குள் அவர் ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்து வைத்துள்ளார். உதாரணமாக, 'சீதையின் முலைதேடிக் கொத்தும் / வனக் காக்கையாய் / மனம் / கடை வெளியில்...'

எளிய வடிவம் ஆழமான அர்த்தங்கள்

இந்தக் கவிதையின் சொற்கள் மிகப் பழக்கமான எளிய சொற்கள். வடிவமும் எளியது. ஆனால் இதன் உட்பொருள் வான் விரிவுகொண்டது. 'சீதையின் முலை தேடிக் கொத்தும்...' என்ற வார்த்தைக்குப் பின்னே ஒரு இதிகாசத்தைப் புரட்டி வைத்துள்ளார் ஜயபாஸ்கரன். இது ராமாயணக் காவியத்தின் சுந்தர புராணக் காட்சி. இது வெறுமனே ஒரு உவமைப் பொருளல்ல. காக்கை சாதாரண மாகக் கொத்தவில்லை; சீதையின் முலையைத் தேடி வந்து கொத்துகிறது. காக்கையின் உருக் கொண்டு கொத்துவது, இந்திரனின் மகனான ஜயந்தன். இங்கே ஜயபாஸ்கரனின் மனம்.

1970-களில் எழுதத் தொடங்கிய ந.ஜயபாஸ்கரனின் கவிதைகள், தமிழ்ப் புதுக்கவிதையினுள் மிக நூதனமானவை. புதுக்கவிதை தன் தொடக்க காலகட்டத்தில் மரபின் சந்த நயத்தை விடமுடியாமல் இருந்தது. ஆனால் புதுக்கவிதை மொழித் தனித்துவமான காலகட்டத்தில் மீண்டும் உடைந்த யாப்பு வடிவத்தில் எழுத வந்தவர் ஜயபாஸ்கரன். புராணங்களையும் இதிகாசங் களையும் தன் கவிதையின் ஆதாரங்களாக ஆக்கிக்கொண்டார். அதாவது உவமையாக மட்டுமல்லாது அவற்றை மொழியாகவும் பொருளாகவும் கொண்டார். இவையல்லாது 'எண்ண வெளியிடையே' நீளும் எமிலி டிக்கின்ஸன் மீதான இவரது பிரியமும் மற்றுமோர் ஆதார ஸ்ருதி.

புராணங்களின் மீதான விமர்சனம்

மனம் முழுக்க நிறைந்திருக்கும் திருவிளை யாடற் புராணத்தைத்தான் ஜயபாஸ்கரன் திரும்பத் திரும்பத் தனக்குள் வாசித்துப் பார்க்கிறார். திரும்ப அவற்றை வாசிப்பதன் மூலம் அதைச் சரிசெய்து பார்க்கிறார்; விமர்சித்துப் பார்க்கிறார். ஆனால் எங்குமே அவர் தன் கவிக் குரலை உயர்த்துவதில்லை. 'திருப்பூவணத்துப் பொன்னனையாளுக்கும் / ஆலவாய்ச் சித்தருக்கும் / இடையே / கடக்க முடியாத வைகை மணல்' என்ற கவிதையும் திருவிளையாடற் புராணத்தின் ஒரு பகுதிதான். ரசவாதத்தின் மூலம் தகரத்தைப் பொன்னாக்கிய சித்தனான சிவனுக்கும் பொன்னனையாளுக்கும் இடையே உள்ள காதலை விரிந்துகிடக்கும் வைகை மணல் வெளியைக் கொண்டு ஒரு விமர்சனமாக விவரிக்கிறார்.

அதுபோல மறையக் காத்திருக்கும் மீனாட்சியின் மூன்றாம் முலை ஜயபாஸ்கரனின் முக்கியமான படிமமும் ஆதாரமும். அதன் மூலமாகச் சமகாலத்தைப் பார்க்கிறார். 'கடைவீதி நெடுக / கைகொட்டிக் காசு கேட்டுவரும் / அவனு/ளுக்குக் கொடுக்க / மூன்றாம் முலைக் காம்பு / மட்டும்' என்கிறது ஒரு கவிதை.

'மூன்றாம் முலைத் தழும்பு / உறுத்தக் கூடும் / விடுதலை பெற்றதாய்ச் / சொல்லிக் கொள்பவனுக்கும்' என்கிறது மற்றொரு கவிதை. இங்கே திருவிளையாடற் புராணத்தில் இருந்து மூன்றாம் முலையைச் சமகாலத்திற்குக் கொண்டுவந்துவிடுகிறார்.

ஜயபாஸ்கரனின் சமீபத்திய தொகுப்பான 'சிறு வெளி வியாபாரியின் ஒரு வழிப் பயண'த்தில்தான் அவரது உலகத்துடன் கூடிய ஆளுமை முழுமையாக வெளிப்படுகிறது.

புதுக்கவிதையின் மிக முக்கியமான பாடுபொருளான அன்றாடமும் வெளிப்படு கிறது. 'மறுக்கப்பட்ட / வெள்ளைப் பூ(ண்)டுத் தொலியில் / மிதக்கும் கடைத்தெரு / நெடுவெண்ணிலவோடு' என்ற கவிதையில் மதுரையின் வெண்கலக் கடைத் தெருவின் நிலக் காட்சியைப் பதிவுசெய்கிறார். சதுரமான கடை வாயிலுக்குள் இருந்து அவர் உலகைக் காண்கிறார். காட்சிக்குள் இருக்கும் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு அவர் தன் மன வெளிக்குள் பயணிக்கிறார். சமூக மாற்றத்தைப் பார்க்கிறார். கலாச்சாரத்துடன் தொடர்புடைய வெங்கலக் கடையில் புழங்கும் அவரது பின்னணியில் இருந்து பார்க்கும்போது அதற்கான அர்த்தமும் கூடிவிடுகிறது.

'அழகன் போனகம் செய்த சேடம் / பதுக்கி வைத்த பாத்திரங்களையும் / பொன்னனையாள் ரசவாதத்துக்கென / சித்தர் முன் குவித்து வைத்த உலோகக் கலன்களையும் / அள்ளிச் சென்றுவிட்டது கால வெள்ளம் / ஜல பாத்திரம் கேட்ட முதியவர் / மூழ்கிப் போய் விட்டார் / கரை மணலில் தேய்த்து வைத்த / செப்புத் தோண்டி மட்டும் / உருண்டு வருகிறது / நீர்த் திவலை மினுங்க...' இந்தக் கவிதையின் வழியாகச் சமூக மாற்றத்தைத் தாழ்ந்த குரலில் சொல்லிவிடுகிறார். நம்மிடம் இருந்த எல்லாப் பாரம்பரியமான பொருள்களும் விடைபெற்றுக்கொண்டு விட்டன. நம் அன்றாடத்தில் இருந்து இவை மறைந்துபோய்விட்டன. ஆனால் அவற்றின் மீது உள்ள மதிப்பு வேறு விதத்தில் கூடியிருக்கிறது. ஜயபாஸ்கரனின் கவிதைகள் சொல்லும் புராணத்திற்கும் இதிகாசத்திற்கும் இந்தத் தன்மை உண்டு.

தொடர்புக்கு:jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x